Thursday, 30 September 2010

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 செப்டம்பர் மாதம் 30-ம் தேதி - வியாழக் கிழமை
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. - (நீதிமொழிகள் 23:18).

திருமதி ஹேனோவர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மனமாற்றமடைந்து இரட்சிக்கப்பட்டிருந்தார். அவர்கள் இரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து தனது கணவனுடைய இரட்சிப்புக்காக மிகுந்த கரிசனையோடு ஜெபித்து வந்தார்கள். திடீரென்று ஒருநாள் அவர்களது கணவர் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தார்கள். ஆண்டவர் என் ஜெபத்தை கேட்கவில்லை. அவர் எனக்கு உண்மையற்றவராகி விட்டார் என்று நினைத்து ஆண்டவர் மீது வெறுப்பு ஏற்பட்டு ஜெபிப்பதை நிறுத்தி விட்டார்கள். ஆண்டவருக்காய் ஜீவிப்பதை முற்றிலுமாய் விட்டுவிட்டார்கள்.

ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. எதிர்பாராதவிதமாக ரோஜர் சைமன் என்பவர் திருமதி ஹேனோவர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் சொன்ன காரியம் அவர்களை மிகுந்த ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியது. 'திரு ஹேனோவர் மரணமடைந்த நாள் அன்று நான் சாலை ஓரத்தில் நின்று யாராவது என்னை இலவசமாக காரில் ஏற்றி செல்ல மாட்டார்களா என்று காத்து கொண்டிருந்தேன். அப்போது உங்கள் கணவர் என் சைகைக்கு இசைந்து காரை ஓரமாக நிறுத்தினார். ஒருமணி நேரத்திற்கும் மேலாக அவரோடு பிரயாணம் செய்தேன். அந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி இயேசுகிறிஸ்துவை குறித்தும் என்னுடைய சாட்சியையும் அவரோடு பகிர்ந்து கொண்டேன். தன்னுடைய பாவங்களை குறித்து குத்தப்பட்டவராக, மனஸ்தாப்பட்டு மனம் திரும்பினார். காரை ஓரமாக நிறுத்தினார். தன்னையும் அறியாமல் அழுதார். முழங்காலில் நின்று தான் தேவனுக்கு விரோதமான பாவி என்பதை அறிக்கை செய்தார். இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டார். பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறங்கி கொண்டேன். அன்றே அவர் சாலை விபத்தில் இறந்து விட்டார் என்று அறிந்தேன். தேவனுடைய செயல் எவ்வளவு மகத்தானது என்பதை பாருங்கள். ஆண்டவர் அவரில் அன்பு கூர்ந்த காரணத்தால் அவரை இரட்சித்து, தம்மோடு சேர்த்து கொண்டார். இது எவ்வளவு பெரிய சிலாக்கியம்' என்றார்.

திருமதி ஹேனோவருக்கு மிகுந்த சந்தோஷம் ஒரு பக்கம், மிகுந்த துக்கம் மற்றொரு பக்கம். தன் கணவர் அவரது மரணத்திற்கு முன்பாக இரட்சிக்கப்பட்டு விட்டார். உண்மையிலேயே ஆண்டவர் தன் ஜெபத்தை கேட்டிருக்கிறார் என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி. அதே சமயத்தில் ஆண்டவரை விளங்கி கொள்ளாமல் அவரை துக்கப்படுத்தி விட்டோமே என்று கவலை ஒரு புறம். 'ஆண்டவர் எவ்வளவு உண்மையுளளவர், நான் உண்மையில்லாதவளாய் இருந்தாலும் அவர் உண்மையுள்ளவராக இருந்திருக்கிறாரே' என்று மனமகிழ்ந்தார்.

பிரியமானவர்களே, நமது ஜெபங்கள் ஒரு போதும் வீணாய் போவதில்லை, ஜெபத்திற்கு நிச்சயமாய் பதிலுண்டு. ஒரு வேளை பதில்கள் நாம் நினைக்கும் தருணத்தில், நாம் நினைக்கும் விதமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இங்கு தான் விசுவாசம் தேவை. தேவன் ஜெபத்தை கேட்கிறவர் என்ற நிச்சயம் நமக்குள் அசைக்கமுடியாதாய் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஜெபத்தையும் முடிக்கும்போது ஆமென் (அப்படியே ஆகட்டும்) என்ற வார்த்தையை ஆணித்தரமாக சொல்லி ஜெபத்தை முடிப்போம்.

நீங்க்ள நெடுநாளாய் உங்கள் குடும்ப அங்கத்தினர் யாருடைய இரட்சிப்பிற்காகவோ ஜெபித்து வரலாம். இன்றோ, நாளையோ மாற்றத்தை நீங்கள் எதிர்பார்த்து கொண்டேயிருக்கலாம். ஆனால் மாற்றத்திற்கு பதில் முரட்டாடத்தை காணும்போது சோர்வடைந்திருக்கலாம். கலங்காதீர்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு; உங்கள் நம்பிக்கை வீண்போகாது, ஜெபியுங்கள், தொடர்ந்து ஜெபியுங்கள் இரட்சிப்பு கர்த்தருடையது. நிச்சயமாய் கர்த்தர் இரட்சிப்பார். ஆமேன் அல்லேலூயா!

விண்ணப்பத்தைப் கேட்பவரே - என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஐயா
ஒரு வார்த்தை சொன்னால் போதும்


ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஜெபத்தை கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்களே, எங்கள் ஜெபத்தை நீர் கேட்பதற்காய் உமக்கு நன்றி. காதை உண்டாக்கினவர் கேளாரோ, கண்ணை உண்டாக்கினவர் காணாரோ என்று வசனம் சொல்கிறதே தகப்பனே, எங்கள் விண்ணப்பத்திற்கு உமது செவிகள் திறந்திருக்கிறதற்காக உமக்கு நன்றி. காலங்கள் ஆனாலும் எங்கள் ஜெபங்களுக்கு நீர் பதிலை தவறாமல் தரப்போவதற்காக உமக்கு நன்றி. நாங்கள் சோர்ந்து போகாதிருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
ஓமன் - OMAN - நாட்டிற்காக ஜெபிப்போமா?

1. இங்குள்ள மக்கள் அனைவரும் இரடசிக்கப்பட ஜெபிப்போம்.


2. 1970ஆம் வருடத்திலிருந்து இந்த நாடு பெரிய மாற்றத்தை கண்டு வருகிறது. மிகவும் பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டு, எண்ணெய் வளம் மிக்க நாடாக மாறி வருகிறது.


3. இங்குள்ள மக்கள் கிறிஸ்துவே தெய்வம் என்று கண்டு கொள்ளவும், இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்..

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment