Showing posts with label அனுதின மன்னா. Show all posts
Showing posts with label அனுதின மன்னா. Show all posts

Friday, 13 May 2011

அந்நிய நுகம்


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 02-ம் தேதி - வியாழக் கிழமை
அந்நிய நுகம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாகளூ நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?. - (2 கொரிந்தியர் 6:14-15).

காலங்கள் மாறி கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் ஒரு கணவனை அல்லது மனைவியை தெரிந்தெடுப்பதில் தங்களுடைய சுய விருப்பத்தை நிறைவேற்றவே விரும்புகின்றனர். தங்களுடைய பூரண வளர்ச்சியடையாத பருவத்தில் அவர்கள் அழகை, வசீகரத்தை அல்லது செல்வத்தை தங்கள் வாழ்க்கை துணையிடம் எதிர்ப்பார்க்கின்றனர். ஒரு இளைஞன் தன் வாழ்க்கை துணையை தெரிந்தெடுக்கும்போது எவ்விதமான குணாதிசயங்களை எதிர்பார்க்க வேண்டும், பெற்றோரும் எவ்வித குணாதிசயங்களை மனதில் கொண்டு வரன் பார்க்க வேண்டும் என்பதையும் காண்போம்.
வாழ்க்கை துணை ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்ற எண்ணமே முதலும் எல்லாவற்றிற்கும் மேலானதுமாக இருக்க வேண்டும். ஒரு பெண் ஒரு மனிதனை பார்த்து அவரை வாழ்க்கை துணையாகக் தீர்மானிக்கும் முன் கீழ்கண்ட கேள்விகளை கேளுங்கள், இந்த மனிதன் ஒரு கிறிஸ்தவரல்ல என கருதுகிறேன். இவர் எவ்வித பழக்கங்களை கொண்டிருப்பார்? என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொண்டு வருவாரா? அல்லது சண்டையை கொண்டு வருவாரா? மது அருந்துவாரா? புகை பிடிப்பாரா? என்று தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதை மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவ பெண், பார்க்க வந்த ஒவ்வொரு ஆணிடமும் கேள்விகள் கேட்டு, ஒவ்வொருவரையும் தள்ளி, இன்று 35 வயது வரை இன்னும் திருமணம் ஆகாமலேயே இருக்கிறாள்!
ஒரு கிறிஸ்தவனுக்கு தேவனே வாழ்வின் மையம், அடுத்ததாக வாழ்க்கை துணை. தேவனுக்கு எதிலும் இடம் கொடுக்காதவரானால் அது எப்பேர்ப்பட்ட மன வேறுபாடுகளையும் வேதனைகளையும் உருவாக்கும்! ஆகவே கிறிஸ்தவரல்லாத ஒருவரை நேசிக்க ஆரம்பிக்குமுன், உறவாட ஆரம்பிக்குமுன், கிறிஸ்தவ பெண்களும், ஆண்களும் சிந்தித்து, அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்ற வசனத்தை நினைவுகூர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்லி, பின்னர் வாழ்நாளெல்லாம் கண்ணீர் வடித்து கொண்டிருக்க வேண்டாம்!
எனது உறவின் பெண் வேறு மதத்தில் உள்ள வாலிபனை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தாள். அவனிடம் 'நீ கிறிஸ்தவனாக மாறினால், நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்' என கூறவே, அவனும் ஒத்து கொண்டு, ஞானஸ்நானம் எடுத்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்தான். திருமணம் முடிந்து, அந்த பெண் அந்த வாலிபனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது, அந்த பையனின் பெற்றோர், 'எங்கள் சுவாமி கோயிலில் நீ திருமணம் செய்தே ஆக வேண்டும்' என்று சொல்லி, அவளை கோயிலுக்கு கூட்டி சென்று, அங்கு மந்திரங்களை ஓதி, அந்த பையன் அவளுடைய கழுத்தில் தாலி கட்டினான். ஒரு பிள்ளையும் பிறந்தது. அவர்கள் வீட்டில், அந்த பெண் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று வற்புறுத்தல். அவளால் முடியாது போகவே இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது கற்பனை கதையல்ல, உண்மை சம்பவம்!
ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து அவளை வாழ்க்கை துணையாக்க தீர்மானிக்குமுன் கீழ்க்ணட கேள்விகளை கேளுங்கள். இந்த பெண் என்னுடைய பிள்ளைகளுக்கு தாயாகி, நாள் முழுவதும் அதிக நேரம் அவர்களோடிருப்பாள், ஆனால், கிறிஸ்துவை அறியாதவளாக இவள் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய காரியங்களை குறித்து எப்படி கற்பிப்பாள்? மேலும் நான் அவளை கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்த முடியவில்லை என்றால் நித்திய ஜீவனுக்கேதுவான நம்பிக்கையில்லாத அவளுடைய வாழ்வையும், மரணத்தையும் பார்ப்பது மிகவும் வேதனை நிறைந்த காரியமாக இருக்குமே என சிந்தியுங்கள்.
கிறிஸ்தவர்களில் பத்தில் எட்டுபேர் கிறிஸ்தவரல்லாதோரை திருமணம் செய்து கடைசியில் தேவனையும் சபையையும் விட்டு விலகி போகின்றனர் என புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. என்னோடு படித்த ஒரு வாலிபன் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்றவன், கிறிஸ்தவரல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து, விசுவாசத்தை விட்டே விலகி போனான்! என்ன பரிதாபம்! அவனுக்காக கண்ணீர் விட்டு ஜெபிப்பதை தவிர என்ன செய்ய முடியும்?
நான் நடந்து செல்ல திட்டமிட்டிருக்கும் நிலப்பகுதியில் கண்ணிவெடி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் அறிந்தால் நான் அதற்கப்பாலேயே நின்று விட மிக கவனமாயிருப்பேன். அது போல கிறிஸ்தவரல்லாத துணையை தெரிவு செய்தவர்களில் அநேகர் தேவனை விட்டே விழுந்து போயிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, அதே தவறை நாம் செய்யக்கூடாதல்லவா?
பிரியமானவர்களே, நீங்கள் ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவரை திருமணம் செய்தால் கர்த்தருக்குள் இணைந்து வல்லமையாக பலப்பட்டு வளருவீர்கள். முக்கியமாக உங்கள் சந்ததியை விலையேறப்பெற்ற விசுவாசத்திற்குள் கொண்டு வருவீர்கள். ஆனால் மதம் முக்கியமானதல்ல என்று கிறிஸ்தவரல்லாத ஒருவரை இனக்கவர்ச்சியினால் திருமணம் செய்தால் உங்களுடைய ஆத்துமாவிற்கும், பிள்ளைகளின் ஆத்துமாவிற்கும் தனக்கு பின்வரும் சந்ததிகளுக்கும் நித்திய அழிவை கொண்டு வந்து விடுவீர்கள். ஆகவே தயவு செய்து உங்கள் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். கர்த்தர் உங்களை நேசிப்பதால் இந்த கட்டுரையை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளுங்கள். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக சங்கீதம் 128ன்படி, 'உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்' என்று ஆசீர்வாதத்தோடு வாழ வாழ்த்துகிறோம். ஆமென் அல்லேலூயா!
மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள்
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இன்றைய வாலிபர்கள், தங்கள் சொந்த இச்சைகளின்படி, தங்கள் துணையை தெரிந்து கொள்ளாமல், வேத வாக்கியங்களின்படி தெரிந்து கொள்ள உதவி செய்யும். அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக, அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? என்னும் வசனத்தை நினைவுகூர்ந்து, அதற்கு கீழ்ப்படிய கிருபை தாரும். தங்கள் வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமானதாக இருக்கும்படி, தங்களுக்கு பின்வரும் சந்ததிக்கு ஆசீர்வாதமானவர்களாக இருக்கதக்கதாக நல்ல துணைகளை தெரிந்து கொள்ள அவர்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
டிஜ்போட்டி ( Djibouti ) நாட்டிற்காக ஜெபிப்போமா? djibouti

ஆப்பிரிக்க நாடாகிய இந்த நாடு ஒரு இஸ்லாமிய நாடாகும்.

1) வறுமையிலும் பஞ்சத்திலும் வாடும் இந்த தேசம் செழிப்பான தேசமாக மாற ஜெபிப்போமா?


2) இந்த தேசத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


3) இங்குள்ள ஒரு சில கிறிஸ்தவ சபைகள் உயிர்மீட்சி பெற்று இந்த தேசத்தை சுதந்தரிக்க ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna

பழையன ஒழிந்தன, எல்லாம் புதிதாயின


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 01-ம் தேதி - புதன் கிழமை
பழையன ஒழிந்தன, எல்லாம் புதிதாயின
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).

ஒரு ராஜ அரண்மனையில் ஒரு அறிவிப்பு செய்தார்கள். அதன்படி, ஒரு பெரிய விருந்து அரண்மனையில் ஆயத்தபடுத்தப்பட போவதாகவும், அரச உடை அணிந்திருப்பவர்கள் நாளை நடக்கும் அந்த விருந்தில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை ஒரு பிச்சைக்காரன் கேள்விப்பட்டான். அவனுக்கு அந்த விருந்தில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. ஆனால் தான் உடுத்தியிருந்த அழுக்கான கந்தையான உடைகளை பார்த்ததும் அவனுக்கு துக்கம் வந்தது.
நல்ல அரச குடும்பத்தினர் மாத்திரமே அந்த விருந்தில் கலந்து கொள்ள முடியும் என்று அவன் நினைத்து, பெருமூச்சு விட்டவனுக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. தான் அதை எப்படி நிறைவேற்றப்போகிறோம் என்று நினைத்தபடியே, அவன் அரண்மனையின் வாயிலுக்கு முன்பாக சென்று, அங்கிருந்த வாயிற்காப்போனிடம், தான் அரசனை காண விரும்புவதாக கூறினான். அந்த காவலன், சற்று நேரம் காத்திருக்கும்படி கூறி, உள்ளே சென்று திரும்ப வந்து, அவனை உள்ளே அனுமதித்தான்.
உள்ளே சென்ற பிச்சைக்காரனிடம், அரசர், 'நீ என்னை காண வேண்டும் என்றாயா'? என்று கேட்டார். அதற்கு அவன், 'ஆம் அரசே, நான் நீங்கள் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு அதற்கு அரச உடுப்பு இல்லை, உங்களுடைய பழைய உடுப்பு ஏதாவது இருந்தால் எனக்கு கொடுப்பீர்களா? நானும் விருந்தில் கலந்து கொள்வேன்' என்று தைரியமாக கேட்டான்.
அதை கேட்ட அரசர் புன்னகையுடன், 'நல்லது, என்னிடமே நீ கேட்டாயே' என்று கூறி, தம்முடைய இளைய குமாரனிடம், 'உன்னுடைய அறைக்கு கூட்டி சென்று உன்னுடைய உடைகளில் ஒன்றை இவனுக்கு கொடு' என்று கூறினார். அதன்படி, இளவரசன், தன்னுடைய உடைகளில் ஒன்றை எடுத்து கொடுத்து, பிச்சைகாரனை அணிவிக்க செய்தார். அதை அணிந்த பிச்சைகாரனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கண்ணாடிக்கு முன் நின்று, அதையே பார்த்து கொண்டிருந்த பிச்சைகாரனிடம் இளவரசர், 'நீ அணிந்திருக்கிற இந்த உடையுடன் நாளை விருந்தில் கலந்து கொள், வேறு உடை எதுவும் உனக்கு வேண்டாம், இந்த உடை நீ உயிருடன் இருக்கும்வரைக்கும் போதுமானது' என்று கூறினார்.
அதை கேட்ட பிச்சைகாரன் இளவரசரின் கால்களில் விழுந்து, நன்றி கூறி, திரும்ப செல்லும்போது, தன்னுடைய பழைய கந்தல் உடைகளை கண்டு, ஒரு வேளை இளவரசர் தன்னுடைய உடைகளை மீண்டும் கேட்டால்.. என்று நினைத்து, அந்த கந்தையை தன்னுடன் எடுத்து கொண்டு புறப்பட்டான்.
அடுத்த நாள் விருந்தில் கலந்து கொண்ட பிச்சைக்காரன், அவன் வாழ்வில் கண்டிராத அளவு மிகவும் அருமையான உணவு வகைகளையும், பழங்களையும், இனிப்புகளையும் கண்டான். ஆனால், அவன் அதை சந்தோஷமாய் அனுபவிக்க முடியவில்லை, ஏனென்றால் அவன் தன்னுடைய கந்தையை ஒரு துணியில் சுற்றி அதை தன் மடியில் வைத்து இருந்தான். உணவு வரும்போது, அதை எடுக்க முற்படும்போது, அவன் மடியில் இருந்த கந்தை கீழே விழுந்ததால், அவன் விதவிதமான உணவுவகைகளை ருசிக்க முடியாமற் போனது.
இளவரசர் சொன்னது போல, அவர் கொடுத்த உடை எப்போதும் அவனுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவனுக்கோ தன் கந்தையின் மேல் இன்னும் மோகம் இருந்தபடியால், அதை அவன் விடவே யில்லை. எங்கு அவன் சென்றாலும் அந்த கந்தையை தன்னுடன் கொண்டு சென்றான். அதனால் அவனை கண்ட மக்கள் அவனை 'கந்தைகளோடு உள்ள வயோதிபன்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.
ஒரு நாள் அவன் மரண படுக்கையில் இருந்தான். அவனை காண அரசர் வந்தார். அவரது முகத்தில் அவன் தன் அருகில் வைத்திருந்த கந்தையை கண்டபோது, சோகம் வந்தது. எத்தனை அருமையான உடை இருந்தும் தன் கந்தையை அவன் விடவே இல்லையே என்று சோகத்துடன் அவர் கடந்து சென்றார். அதை கண்ட அந்த பிச்சைக்காரன், இளவரசர் தன்னிடம், 'இந்த கந்தையை விடாதிருந்தால் தாம் கொடுத்த ராஜ உடையை இழக்க வேண்டியதாயிருக்கும்' என்று கூறினதை நினைவு கூர்ந்து, தான் செய்த தவறை நினைத்து அழுதான். ஆனால் அது மிகவும் காலம் கடந்ததாயிருந்தது.
நாமும் கூட அரச விருந்திற்கு அதாவது தேவனுடைய குடும்பத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், நம்முடைய அழுக்கான கந்தையாகிய பாவங்களை நம்மை விட்டு அகற்றி, தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து கொடுக்கும், இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்திருக்க வேண்டும். இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்து கொண்ட பிறகு பழைய கந்தையான அழுக்கான பாவங்களை நிச்சயமாய் விட்டிருக்க வேண்டும். அதை நாம் தொடர்ந்து பிடித்து கொண்டு இருப்போமானால், நாம் நிச்சயமாக கர்த்தருடைய விருந்தில் கலந்து கொள்ள முடியாது. இரட்சிப்பின் வஸ்திரம் இருந்தால் தான் நாம் பரலோகம் செல்ல முடியும். 'ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' என்ற வசனத்தின்படி, நாம் புதிதாக்கப்பட்டவர்களாக, நம்முடைய வாழ்க்கை புதியதாக மாற வேண்டும். பழைய பாவ பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு முற்றிலும் அகல வேண்டும். பாவங்களை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிதாய் பிறந்த குழந்தையை போல நாம் கர்த்தருக்குள் வளர தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே - நான்
புதியன படைப்பானேன்
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, என்னுடைய பாவங்கள் அழுக்கான கந்தையை போல் இருக்கிறதே, இயேசுகிறிஸ்துவின் தூய இரத்தத்தால் கழுவி என்னை சுத்திகரிப்பீராக. என்னை கழுவி சுத்திகரித்து, பாவங்களை போக்குவதற்காய் உமக்கு நன்றி. இரட்சிப்பின் மெல்லிய வஸ்திரத்தை எனக்கு உடுத்துவிப்பதற்காக உமக்கு நன்றி. என்னுடைய பழைய பாவங்கள் எதையும் என்னுடன் கந்தையை போல கொண்டு வராதபடிக்கு, அவைகளை முற்றிலும் என்னை விட்டு அகற்றும். பரிசுத்தமாய் வாழ கிருபை செய்யும். எல்லாவற்றையும் புதியதாக மாறி, என்னை உம்முடைய சொந்த மகனாக, மகளாக ஏற்று கொண்ட கிருபைக்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
டியூனிஷியா (Tunisia) நாட்டிற்காக ஜெபிப்போமா? tunisia

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இந்த தேசம் ஒரு இஸ்லாமிய நாடாகும்.


1) இங்கு வாழும் ஒவ்வொரு மக்களும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2) இந்த நாட்டில் சுவிசேஷ வாசல்கள் திறக்கப்படவும், மக்கள் ஜீவனுள்ள தேவனை அறிந்து கொள்ளவும் ஜெபிப்போம்.


3) பிரான்ஸ் தேசத்திலும், ஜெர்மனியிலும் பெல்ஜியம் நாட்டிலும் வாழ்கின்ற இத்தேசத்து மக்கள், கிறிஸ்துவை கண்டு கொள்ள ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

கடைசி நிமிடத்தில் அற்புதம்


 

கடைசி நிமிடத்தில் அற்புதம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
'இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று, .......பவுல் அவர்கள் நடுவிலே நின்று...... உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்றான்.' – (அப்போஸ்தலர் 27: 20 - 22).

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.
வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.
பிரியமானவர்களே, நானும் சாறிபாத் விதவையை போலத்தான் காணப்படுகிறேன் என்று கூறுகிறீர்களா? தேவன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறார். ஆனால் நாம் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டும். அந்த விதவை பற்றாக்குறையின் மத்தியிலும் தேவனுடைய மனிதனுக்கு முதலில் கொடுத்தாள். பல சமயங்களில் நமது வாழ்க்கையிலும் எவ்வளவு சம்பாதிதத்hலும் பொத்தலான பையிலே போடுகிறோம். இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது ஆண்டவருக்காக கொடுக்க கற்று கொள்ள வேண்டும்.
வாழ்வின் கடைசி மணித்துளியில் வந்து நிற்கிறேன் என்று சொல்கிறீர்களா? மனிதர்களை நம்பி ஏமாந்து போனீர்களோ? கண்ணீரே உங்களுக்கு உணவாயிற்றோ? பிரச்சனைகளுக்கு முடிவு மரணம் தான் என எண்ணி சோர்ந்து போய்யுள்ளீர்களோ? தேவனின் பாதத்தில் சரணடையுங்கள். நூறு சதவிகிதம் அவரே கதி என்று அவர் பாதத்தில் விழுந்து விடுங்கள். விசுவாசத்தோடு அவருடைய வேளைக்காக காத்திருங்கள். ஏற்ற வேளையில் கட்டாயம் கர்த்தர் அற்புதம் செய்வார். ஆமென் அல்லேலூயா!
பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன் - உன்னை
அதிசயமாய் நான் நடத்திடுவேன்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னை காண்கின்ற தேவன்
கண்மணிப்போல உன்னை காப்பேன்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, மனிதர்களை நம்பி சோர்ந்து போய், எல்லா உதவியும் அற்று போயிருக்கும்போது, நீரே எங்கள் உதவி; என்று உம் பாதத்தில் வந்து சரணடையும்போது, நிச்சயமான உதவிகளை செய்யும் பரிசுத்தரே உமக்கு கோடி நன்றிகள் ஐயா. ஏற்ற வேளையில் எங்கள் தேவைகளை சந்தித்து அற்புதம் செய்யும் அற்புதரே உம்மையே சார்ந்து நாங்கள் ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் தேவைகளின் மத்தியிலும் கர்த்தருக்கென்று நாங்கள் கொடுத்து, அதினாலே அதிசயம் காண எங்களுக்கு கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
லைபீரியா (Liberia) நாட்டிற்காக ஜெபிப்போமா? liberia

இது கிறிஸ்தவ நாடு என்று அழைக்கப்பட்டாலும், இந்த நாட்டில் மந்திரவாதங்களும், மறைவான பழக்கவழக்கங்களும் அதிகமாய் (Occult Pratices) காணப்படுகிறது.


1) இங்கு சுவிசேஷம் வெளிப்படும்படியாக, அந்தகார சக்திகளின் வல்லமை முறியடிக்கப்படும்படியாக ஜெபிப்போமா?


2) சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்ற வார்த்தையின்படி, இந்த நாட்டு மக்கள் சத்தியமாகிய கிறிஸ்துவை அறிந்து, அதனால் தீய சக்திகளின் கட்டுகளிலிருந்து விடுதலை பெறும்படியாக ஜெபிப்போம்.


3) இந்த நாட்டின் அரசியல்வாதிகள் உண்மையோடும் நேர்மையாகவும் ஆட்சி செய்ய ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

தகப்பனின் பொறுப்பு


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 நவம்பர் மாதம் 29-ம் தேதி - திங்கள் கிழமை
தகப்பனின் பொறுப்பு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். - (ஆதியாகமம் 18:19).


கர்த்தர் ஆபிரகாமை குறித்து 'தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்' என்று கூறினார். அப்படிப்பட்டதான தகப்பனாக ஆபிரகாம் இருந்ததால், அவருடைய சந்ததி மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக இந்நாளளவும் திகழ்கிறது. நாமும் அவருடைய சந்ததியாக கிறிஸ்துவுக்குள் அழைக்கப்படுகிறோம்.

இந்நாட்களில் அத்தகைய தகப்பன்மார் இல்லாததினால், நாம் பயங்கரமான இளைய தலைமுறையை கண்டுவருகிறோம். இந்நாட்களில் வாலிபர்கள் போதை மருந்துகளுக்கும், திருமணத்திற்கு முன் பாலியல் உறவுகள், தீவிரவாத குழுக்களுடன் சேர்க்கை, குண்டர்களுடன் சேர்க்கை இப்படி கெட்டு போவதற்கு தகப்பன்மார் தங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்றாததே காரணம்.

நமது பிள்ளைகள் சபைக்கும் சமுதாயத்திற்கும் பிரயோஜனமுள்ளவர்களாக விளங்க வேண்டுமென்றால் நிச்சயமாக அதில் தகப்பனின் பங்கு அதிகம் என்பதை நாம் உணர வேண்டும். தேவன் குடும்பத்தின் தலையாக கணவரைதான் வைத்திருக்கிறார். மனைவியின் பங்கும் அதில் உண்டென்றாலும் குடும்ப தலைவன் என்ற முறையில் தகப்பன்மார் நிச்சயமாக அதிக பொறுப்புண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் உண்டென்றால், அந்த பிள்ளைகளின் எல்லா பொறுப்பும், அவர்களின் எதிர்காலமும், அவர்களின் படிப்பும் அவர்கள் திருமணம் செய்து போகும்வரைக்கும் அவர்களை குறித்த எல்லா காரியத்திலும் தகப்பனுக்கு பங்கு உண்டு, பொறுப்பு உண்டு. தகப்பன் இல்லாத தகப்பனை இழந்த குடும்பத்தை குறித்து இங்கு பேசவில்லை. ஒரு கரிசனையுள்ள தகப்பன், தன் பிள்ளைகளின் படிப்பை குறித்தும், உணவை குறித்து மாத்திரம் கரிசனை கொள்ளாமல், அவர்களின் ஆவிக்குரிய ஜீவியம் எப்படி உள்ளது என்பதிலும் அக்கறை கொள்கிறான். பிள்ளைகள் தினமும் வேதாகமம் படிக்கிறார்களா? முழங்கால் படியிட்டு ஜெபிக்கிறார்களா? என்று அவன் காண வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு அவன் போதிக்க வேண்டும். 'எனக்கே நேரம் இல்லை, வேலைக்கு போயிட்டு வருவதே எனக்கு சரியாக இருக்கிறது, இதில் இதை எல்லாம் நான் எங்கு செய்வது' என்று சாக்கு போக்கு சொல்வீர்களானால், நாளை கர்த்தரிடம் அவர் நமக்கு கொடுத்த பிள்ளைகளை எப்படி வளர்த்தோம் என்பதை குறித்து கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருவேளை வேலையினிமித்தம் வெளிநாட்டில் தகப்பன் இருந்தாலும், எனக்கு பொறுப்பில்லை என்று கைகழுவ விட முடியாது. விடுமுறைக்கு வரும்போது மாத்திரமல்ல, ஒவ்வொரு முறை பிள்ளைகளோடு பேசும்போதும், அவர்களுக்கு கர்த்தரை குறித்த பயத்தோடிருக்க போதிக்க வேண்டும். அவர்களிடம் ஆலயத்திற்கு ஒழுங்காக போக சொல்ல வேண்டும். கர்த்தருக்கடுத்த காரியங்களில் ஈடுபடும்படி சொல்லி போதிக்க வேண்டும். குடும்பமாக ஒரே சபைக்கு செல்லும்படி கற்று கொடுக்க வேண்டும். தாய் ஒரு சபைக்கும், பிள்ளைகள் ஒரு சபைக்கும் நிச்சயமாக செல்ல கூடாது.

இன்று அநேக ஆவிக்குரிய போதகர்களின் பிள்ளைகள் உலகவழிகளில் சென்று விடுவதற்கு காரணம், போதகர்கள் மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது போல தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்காததே! தங்கள் பிள்ளைகள் தவறு செய்யும்போது நிச்சயமாக கண்டிக்க வேண்டும். ஏலி ஒரு உத்தம ஆசாரியனாக இருந்தபோதும், 'நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்' (1 சாமுவேல் 2:29) என்று கர்த்தர் அவனிடம் அவனுடைய பிள்ளைகளை குறித்து வருத்தப்பட்டதையும், பின்னர் அந்த பிள்ளைகள் ஒரே நாளில் மரிக்க நேரிட்டதையும் காண்கிறோம். தீர்க்கதரிசி சாமுவேல் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாயிருந்தும், 'அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்' (1சாமுவேல் 8:3) என்றும் பார்க்கிறோம். தாவீது ராஜாவின் பிள்ளைகள் எப்படி மோசமானவர்களாக இருந்தார்கள் என்றும் நாம் வேதத்தில் கண்கூடாக காண்கிறோம். இந்த தகப்பன்மார், தாங்கள் கர்த்தரோடு உண்மையாக இருந்தால் போதும் என்று சுயநலமாக நினைத்து, தங்களுக்கு பின் வரும் சந்ததியினருக்கு கர்த்தரை குறித்து சொல்லி போதிக்காததால், அவர்கள் கெட்டு போனார்கள்.

நாம் சம்பாதிப்பதும், கஷ்டப்படுவதும் எதற்காக? நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக மாத்திரமே! அவர்கள் உலக பிரகாரமாக நன்றாக இருந்தால் மட்டும் போதாது, கர்த்தருக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான், அவர்களை நாம் பரலோகத்தில் பார்க்க முடியும். என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை (3யோவான் 4ம் வசனம்) என்று யோவான் சொல்வது போல அதை விட மேலான சந்தோஷம் நமக்கு எதுவும் இல்லை!

ஆபிரகாமை குறித்து, தேவனுக்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது, அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்று தைரியமாக கர்த்தர் கூறினார். அதன்படி ஆபிரகாம் கட்டளையிட்டு, ஈசாக்கும், யாக்கோபும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்ததோடு, கர்த்தர் தாம் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் என்று கூறி கொள்ளும்படியாக அவர்கள் வாழ்ந்தார்கள். நம் பிள்ளைகளையும் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தை போதித்து கர்த்தர் மகிழ்கின்ற குடும்பங்களாக, ஆபிரகாமின் சந்ததியாக நம் குடும்பங்களை காத்து கொள்வோமா? கர்த்தர் தாமே அப்படிப்பட்ட தகப்பன்மாராக ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென் அல்லேலூயா!

நாம் ஆராதிக்கும் தேவன்
அவர் ஜீவனுள்ள தேவன் - அவர்
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் நம் தேவன்

ஆபிரகாம் விசுவாசித்தார்
நீதிமானின் ஆசிகள் பெற்றார்
விசுவாச மார்க்கத்தாலே ஆபிரகாமின் பிள்ளைகளாய்
ஆசிகளை சுதந்தரிப்போம்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, தகப்பன் என்கிற ஸ்தானத்தில் தேவன் ஒவ்வொரு தகப்பனுக்கும் கொடுத்திருக்கிற பொறுப்புகள் என்ன என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதன்படி ஜீவிக்க கிருபை செய்வீராக. சம்பாத்தியம் செய்து, குடும்பத்தை தாங்குவது மாத்திரமல்ல, கர்த்தருக்குள் பிள்ளைகளை வளர்ப்பது அவர்களது பொறுப்பு என்பதை உணர்ந்து, அதன்படி செயல்பட ஒவ்வொரு தகப்பனுக்கும் கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
ஜாம்பியா (Zambia) நாட்டிற்காக ஜெபிப்போமா? zambia

ஆப்பிரிக்க தேசமாகிய இத்தேசம் ஒரு இஸ்லாமிய நாடாகும்.


1) 25 சதவிகிதமே படிப்பறிவுள்ள இத்தேச மக்கள் ஜீவனுள்ள தேவனை அறிந்து கொள்ள ஜெபிப்போம்.


2) இங்கிருக்கிற ஓரிரண்டு சபைகளும், பேர் கிறிஸ்தவ சபைகளாக இருப்பதால், தேவனை குறித்த அன்பு இவர்கள் உள்ளங்களில் ஊற்றப்பட ஜெபிப்போம்.


3) சுவிசேஷத்தின் வாசல்கள் இந்த நாட்டில் திறக்கப்படவும், விடுதலையோடு மக்கள் கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம்
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

தேவாலயம் நாமே


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 நவம்பர் மாதம் 28-ம் தேதி - ஞாயிற்று கிழமை
தேவாலயம் நாமே
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். - (1கொரிந்தியர் 6:19-20).

நம்மில் அநேகர், அளவுக்கு மீறி வேலைகளை செய்து, மிகவும் சோர்ந்து, களைப்படைந்துப் போகிறோம். ஒரேயடியாக வேலை வேலை என்று அதிலேயே கவனமாக இருப்பதால் நம் சரீரத்தைக் குறித்து கவலையற்றவர்களாக காணப்படுகிறோம்.

நம்முடைய ஆவிக்குரியக் காரியங்களும், உணர்ச்சிகளுக்குரிய, சிந்தனைகளுக்குரிய காரியங்களும் நம் சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. நம் சரீரத்தை கவனமாக பராமரிக்கத் தவறும் போது, நம் சரீரம்மாத்திரமல்ல, நம்முடைய எல்லா சிந்தனை, உணர்ச்சி, ஆவிக்குரிய வகைகளிலும், நோய்வாய்ப்பட்டுப் போகிறோம். இந்நாட்களில் தொலைக்காட்சிகளில் நம் உடல்நிலையைக் குறித்த அநேக மருந்துகளையும், உடற்பயிற்சி கருவிகளையும், குறித்த விளம்பரங்களையும் காண்கிறோம். அந்த விளம்பரங்களைப் பார்த்து, வாங்கி, சரீரத்தின் தோல் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்!

நாம் சற்று யோசித்துப் பார்ப்போம், நாம் எந்த அளவு நம்முடைய சரீரத்தை கவனமாக காத்துக் கொளகிறோம் என்று? நாம் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்கிறோமா? வேலை வேலை என்று தண்ணீர் குடிக்கக் கூட நேரமில்லை என்றுக் கூறுகிறோமா? எத்தனையோ வியாதிகளுக்கு, தண்ணீர் குடிப்பதே மருந்தாக இருக்கிறது! ஏன், உடல் பருமனைக் குறைக்கவும் கூட தண்ணீர் அதிகமாக உதவுகிறது. சாப்பிட வேண்டிய உணவுகளை நாம் சாப்பிடுகிறோமா? இல்லாவிட்டால் ஏதோ வயிற்றை நிரப்ப வேண்டும் என்று எது கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு வயிற்றை நிரப்புகிறோமா?

அநேகருடைய வேலை அமர்ந்தே செய்யும் வேலையாயிருக்கும். வேலை முடிந்த பிறகு நாம் ஒரு அரை மணி நேமாவது நடக்கிறோமா? அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. தேவையான அளவு தூங்குகிறோமா? ஒரு நாளைக்கு ஆறு மணியிலிருந்து ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் வேலை வேலை என்று ஓய்வெடுக்காமல், தூக்கமில்லாமல், வேலை செய்து உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்வதால் என்ன பயன்?

அநேகர், சரியான நேரத்தில் உணவருந்த மாட்டார்கள். வேலை வேலை என்று பிஸியாக இருந்துவிட்டு, நேரம் கெட்ட வேளையில் சாப்பிடுவார்கள். வயிற்றில் அல்சர் வந்தப பிறகு மருந்து எடுத்து என்ன பயன்? சிலர் காலை வேளை எதையும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இரவு வேளை உணவை விடலாம். ஆனால் காலை வேளை உணவு மிகவும் முக்கியம். அது Breaking the fast அதனால்தான் அது Breakfast.

சிலர், புகைபிடித்து, அல்லது வேறு காரியங்களுக்கு தங்கள் சரீரங்களில் இடம் கொடுத்து அதை அசுசிப்படுத்துகிறார்கள். நமது சரீரம் தேவனுடைய ஆலயமாக இருப்பதால் அவற்றை நாம் கண்டிப்பாக நிறுத்தியே ஆக வேண்டும். நீங்கள் உங்களுடையவர்களல்லவென்று அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; இயேசுகிறிஸ்து தம் மாசில்லாத இரத்தத்தை சிந்தி உங்களை மீட்டுக் கொண்டாரே, தமது, குற்றமில்லாத இரத்தத்தை கிரயமாக செலுத்தி உங்களை மீட்டுக் கொண்டாரே, பின் எப்படி அதை கெட்ட காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்?

சாப்பிட வேண்டிய அளவு சாப்பிட்டு, தூங்க வேண்டிய அளவு தூங்கி, நடக்க வேண்டிய அளவுநடந்தால், நம் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணன் அவர்கள், ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி கொஞ்சம் கூட அதிகமாக சாப்பிட மாட்டார்கள். என்னதான ருசியாக இருக்கட்டும், அந்த அளவு தான். அந்த மாதிரி குறிப்பிட்ட அறவு மாத்திரம் சாப்பிட்டு, தங்கள் உடல் நலத்தைக் காத்து அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கும்படி, கர்ததருடைய ஊழியத்தை செய்யும்படி தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறர்கள்.

கர்த்தருக்கென்று பெரிய காரியங்களை சாதிக்க வேண்டுமா? உங்கள் மனநிலையும் சிந்தனைகளும் சரியாக வேலை செய்ய வேண்டாமா? உங்கள் உடல் நலத்தை பேணிக் கொள்ளுங்கள். நமது சரீரம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறபடியால், ஆவியானவர் வாசம் செய்யும் ஆலயமாயிருக்கிறபடியால், நாம் நம் சரீர பாண்டங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய நமது சரீரத்தினாலும் நமது ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துமபடியாக நமது சரீரங்களை சரியானபடி காத்து அவருக்கென்று சாட்சியாக இன்னும் அநேக ஆண்டுகள் வாழ்ந்து அவரை மகிமைப் படுத்துவோமாக. ஆமென் ஆல்லேலூயா!

தேவாதி தேவன்
தினந்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன்
அச்சாரமானார் அதிசயம் அதிசயமே

ஜெபம்
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, எங்கள் சரீரத்திற்கும் ஆவிக்கும் உரிமையாளரே, அவற்றை நாங்கள் காக்க வேண்டிய விதத்தில் காத்துக் கொள்ள எங்களுக்கு கிருபைச் செய்யும். நீர் தங்கும் தேவாலயமாக எங்கள் சரீரம் இருப்பதால் அதை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள ஞானத்தைத் தாரும். நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து, உமக்கென்று வாழ கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
புரூனை (Brunei) நாட்டிற்காக ஜெபிப்போமா? brunei

ஆசியாவிலேயே மிகவும் செல்வம் மிகுந்த நாடாகிய புரூனை ஒரு இஸ்லாமிய நாடாகும். இங்கு மலாய் மக்கள் 70 சதவிகிதமும் சீன மக்கள் 16 சதவிகிதமும் வாழ்கிறார்கள்.


1) இந்த நாட்டில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், இங்கு வாழும் ஒவ்வொரு மக்களும் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.


2) இந்த நாட்டில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலன் கொடுக்க ஜெபிப்போம்.


3) இந்த நாட்டை ஆளுகிறவர்கள் ஞானத்தோடு ஆளவும், இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.