Friday, 1 October 2010

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 01-ம் தேதி - வெள்ளி கிழமை
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். - (எண்ணாகமம் 11:6).

தேவன் இஸ்ரவேலருக்கு தூதர்களின் உணவாகிய மன்னாவை அதிசயவிதமாக வனாந்திரத்தில் தினமும் கொடுத்து போஷித்து வந்தார். அதை சாப்பிட்டு வந்த அவர்கள், ஒரு நாளும் சுகவீனமாய் இருந்ததேயில்லை. அவர்கள் தினமும் அந்த வனாந்தரத்தில் நடக்க வேண்டிய சக்தியையும், பெலனையும் அந்த மன்னா உண்டதினால் கிடைத்ததுமன்றி, அவர்கள் சுகமாய் இருந்து வந்தார்கள். இலட்ச இலட்ச மக்களுக்கு வானத்திலிருந்து அதிசயவிதமாக வருகிறதே என்று அவர்கள் ஆரம்பத்தில் ஆச்சரியமாய் அதை பொறுக்கி சமைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் கொஞ்ச காலம் அவை கிடைத்து அதில் பழகி போன பின்பு, அவர்கள் உள்ளம் அதை வெறுக்க ஆரம்பித்து விட்டது. 'இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்' உலகத்தில் எந்த மக்களுக்கும் கிடைக்காத வானத்தின் மன்னாவை உண்பது அவர்களுக்கு வெறுப்பாக போனது.

நாமும் கூட அப்படித்தான் சில வேளைகளில் இருக்கிறோம். தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களை ஆசையோடு பெற்று கொண்டிருக்கிற நாம், அதில் பழகி போன பின்பு, இதை விட வேறு கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்க ஆரம்பிக்கிறோம். ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து அதற்காக கர்த்தரிடம் ஜெபித்து, அவர் கிருபையாக நமக்கு ஒரு கார் கிடைக்க செய்தவுடன், நாம் இதற்கு பதிலாக வேறொரு ஜீப் வாங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அதிருப்தி பட்டு கொள்கிறோம். எனக்கு தெரிந்த ஒரு சிலர், மிக விலை உயர்ந்த காரை அப்போது தான் வாங்கியிருப்பார்கள், மற்றவர்கள் வாங்கியிருக்கும் வேறு ஒரு இரகத்தை பார்த்து, ஆறு மாதத்திற்குள் தங்கள் காரை விற்று விட்டு, மற்ற காரை வாங்குவார்கள்! பணம் இருக்கிறது வாங்குகிறார்கள் என்று நீங்கள் சொல்லாம், ஆனால் சாதாரண கார் கூட இல்லாமல் இருந்திருந்த நாட்களை அவர்கள் அதிகமாய் நினைப்பதில்லை. இப்படி எத்தனையோ காரியங்களை கூறி கொண்டே போகலாம்! நாம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்களை மிகவும் தாழ்வாக நினைத்து, மற்றவர்களை போன்று நமக்கும் கிடைத்திருந்தால் நலமாக இருக்குமே என்று எண்ண ஆரம்பித்து விடுகிறோம்.

வானத்தில் நட்சத்திரங்கள் வருடத்தில் ஒரு முறை வந்தால், எல்லாரும் கண்விழித்து அந்த நட்சந்திரங்களை ஆவலாய் காண்பார்கள், ஆனால் தினமும் வருகிற படியால் நாம் அதை கண்ணெடுத்து கூட பார்ப்பதில்லை. அப்படி தேவன் நமக்கு கொடுக்கிற ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் மிகவும் எளிதாக எடுத்து விடுகிறோம். நம் இருதயத்தை சோதித்து பார்த்து, கர்த்தருக்கு நன்றியாக ஜீவிப்போம். நமது கார் மிகவும் பழையதாகி சரியாக வேலை செய்யவில்லை என்றால் மாற்றி தான் ஆக வேண்டும். அது அல்ல நாம் சொல்வது, பணம் இருக்கிறது என்பதற்காக தினமும் ஒன்று என்று மாற்றுவது சரியல்ல.

என் நண்பர் ஒருவர், மிகவும் கஷ்டமான வேலையில் இருந்தார். அவர் குடும்பமாக ஜெபித்து வந்தார். 'தேவனே எனக்கு ஒரு நல்ல வேலையை தாரும், நானும் குடும்பமாக ஆலயத்திற்கு உம்மை தொழுது கொள்ள வேண்டும்' என்று. கர்த்தரும் அதிசயவிதமாக நல்ல வேலையை கொடுத்தார். கொஞ்ச நாள் ஆனதும், அவர் வேலை செய்வதை போன்ற மற்ற கம்பெனிகளில், அவருடைய அனுபவத்திற்கு நல்ல சம்பளம் தருகிறார்கள் என்று கேள்விபட்டு, மனைவி 'நீங்கள் அதிலே அப்ளை பண்ணுங்கள், உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்' என்று கூறினார்கள். ஆனால் நண்பரோ, 'தேவன் எனக்கு கொடுத்த வேலை இது, இதை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன், எவ்வளவு உயர்வான சம்பளம் கொடுத்தாலும் சரி' என்று உறுதியாக இருந்து விட்டார். தற்போது வந்த பொருளாதார நெருக்கடியில் அநேகர் வேலை இழந்தனர். புதிதாக சேர்ந்தவர்களை அவர்கள் வேலையிலிருந்து எடுத்தனர். ஆனால், நண்பர் உறுதியாக இருந்தபடியால், அந்த பழைய வேலையிலேயே தேவன் அவரை வைத்து காத்து கொண்டார்.

தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் நிச்சயமாக திருப்தியோடு இருந்தோமானால், தேவன் இன்னும் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார். நாம் அவருக்கு செலுத்தும் நன்றிபலிகளில் அவர் பிரியப்படுவார். அநேகர் தாங்கள் இந்த நிலையில் இருக்க காரணம் தேவன் என்பதை மறந்து ஜீவிப்பதினாலேயே அநேக ஆசீர்வாதங்களை இழந்து விடுகின்றனர். நாம் அவருக்கு எப்போதும் நன்றியோடு, தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் மகிழ்வோடு இருப்போம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர்

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வருகிற நல்ல தகப்பனே, இந்த புதிய மாதத்திற்குள் எங்களை கூட்டி வந்த நல்ல கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். கடந்த ஒன்பது மாதங்களும் எங்களை கண்ணின் மணியை போல காத்தீரே உமக்கு நன்றி. இந்த புதிய மாதத்திலும் புதிய கிருபைகளை தந்து நடத்துவீராக. நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றையும் நாங்கள் மறவாமல் உமக்கு நன்றியாக ஜீவிக்க கிருபை தருவீராக. எங்களுடைய ஒன்றுமில்லமையிலிருந்து எங்களை ஆசீர்வதித்து, எங்களை உயர்த்தியிருக்கிறீரே உமக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக ஜீவிக்க கிருபை செய்யும். நீர் செய்த நன்மைகளை மறவாத நன்றியுள்ள நல்ல உள்ளத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
எகிப்து - EGYPT - நாட்டிற்காக ஜெபிப்போமா?

1. எகிப்து ஒரு இஸ்லாமிய நாடாகும். இங்குள்ள ஒவ்வொரு மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.

2. இங்கு இருக்கிற ஆர்த்தோடாக்ஸ் மற்றும் காப்டிக் கிறிஸ்தவர்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் சத்தியத்தை அறிந்து சத்தியத்தின்படி தேவனை ஆராதிக்க ஜெபிப்போம். அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

3. அன்று மேல்வீட்டறையில் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்த போது எகிப்தியர்களும் அங்கு இருந்து அப்போஸ்தலர் அந்நிய பாஷைகளில் பேசுவதை கேட்டனர். அப்போது கிறிஸ்துவின் அன்பை கண்ட அவர்களின் ஆரம்ப நாட்களில் எகிப்து கிறிஸ்தவ நாடாக இருந்தது. கி.பி. 642 ல் அரபியர் படையெடுத்து நாட்டை கைப்பற்றியவுடன் இஸ்லாமிய நாடாக மாறியது. இங்குள்ள மக்கள் மீண்டும் கிறிஸ்துவை கண்டு கொள்ள நாம் ஜெபிப்போமா?

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment