Saturday, 2 October 2010

தேவனுடைய ராஜ்யமா? சுயமா?

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 செப்டம்பர் மாதம் 27-ம் தேதி - திங்கள் கிழமை
தேவனுடைய ராஜ்யமா? சுயமா?
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும் .
இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?- ஆகாய் 1:4.
நம்மில் அநேகருக்கு பிரசங்கம் கேட்பதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் தாங்களே வேத வசனத்தை ஆராய்ந்து, தியானிக்க கடுகளவேனும் பிரியப்படமாட்டார்கள். நீங்கள் வேதத்தின் ஒவ்வொரு புத்தகத்தையும் பின்னணியத்தோடு வாசித்து தியானித்துப் பாருங்கள். தோண்ட தோண்ட பதையலாய், சுவைக்க சுவைக்க அமுதமாய் உங்கள் வேத தியானம் மாறிவிடும். 'தவனமுள்ள ஆத்துமா திருப்தியாகும்' என்ற வாக்கின்படி நீங்கள் தாகத்தோடு ஆகாய் புத்தகத்தை வாசிக்க சில குறிப்புகள் இதோ!
சாலமோன் ராஜா கட்டின பிரமாண்ட எருசலேம் தேவாலயத்தை பாபிலோனியர்கள் தரைமட்டமாக்கிப்போட்டனர். அதோடு இஸ்ரவேல் மக்களும் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு அடிமைகளாயினர். ஒரு கால கட்டத்திற்கு பின் கோரேஸ் ராஜாவின் ஆட்சி வருகிறது. இவர் புறமத ராஜாவாயினும் ஆலயத்தைக் கட்ட செருபாபேல் தலைமையில் ஒரு குழுவை கி.மு. 534-ல் அனுப்புகிறார். அஸ்திபாரம் போடும் பணி மும்முரமாய் நடைபெற்றன. அப்போது அங்கு வாழ்ந்த சமாரியர்கள் ஆலயம் கட்டும் பணியைத் தடை செய்தனர். உடனே அந்த குழுவினரும் நம்மைப் போலவே 'ஆலயம் கட்டுவது கர்த்தருக்கு சித்தமில்லை' என்ற சாக்கு சொல்லிக் கொண்டு 'சரி நமது வீட்டையாவது கட்டுவோம்' என தங்களுக்கு வீடுகளை கட்ட ஆரம்பித்தனர்.
அஸ்திபாரம் போடப்பட்ட தோவலயம் 16 ஆண்டுகளாய் கவனிப்பாரற்று கிடந்தது. பாதியில் நிற்கும் ஆண்டவரது ஆலயத்தைப் பற்றி யாரும் அக்கறைக் கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் தான் ஆகாய் தீர்க்கதரிசி எருசலேம் வருகிறார். வந்து பார்த்தால் ஆண்டவரின் ஆலயம் பாதியில் நிற்கிறது. ஆனால் யூதர்கள் தங்களது வீடுகளை மாடிமேல் மாடி கட்டி வாழ்ந்து வந்தனர். கேட்டால் ஆலயம் கட்ட நேரம் காலம் வரவில்லை என்றனர். இதை கேட்ட ஆகாய் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாய், 'என்னுடைய வீடு பாழாய் கிடக்கும் போது அவனவன் மச்சுப்பாவபட்ட வீட்டில் குடியிருக்கும் காலம் இதுவா? என கர்ஜித்தார். இந்த செய்தியை உள்ளடக்கியதே ஆகாய் புத்தகம். 16 ஆண்டுகளுக்கு பின்பு ஆலயக்கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்பு முடிக்கப்பட்டது.
பிரியமானவர்களே! அன்று இந்த ஆகாய் புத்தகத்தின் மூலம் ஆகாய் தீர்க்கதரிசி மக்களுக்கு கூறும் முக்கிய செய்தி தேவனுடைய ராஜ்யமா? சுயமா? எது முக்கியம் என்ற கேள்வியை நம்முன் வைக்கிறார். கர்த்தருக்குரியதை முதலாவது தேடவும், அவருடைய ஊழியத்தை செய்வதுமே நம் வாழ்வின் முக்கியமான பணியாய் அமைய வேண்டும். ஆத்துமாக்கள் அழிந்து கொண்டிருக்கும் போது நாம் சுகமாய் வீட்டில் குடியிருப்பது சரியோ? அதோடு தேவனுடைய பணியை செய்யாமலிருப்பதற்கு காரணங்களை கூறுவது தவறு. தேவனுக்குரியவைகளை நாம் தேட ஆரம்பிக்கும் போது நிச்சயம் தடைகள் வரும். தடையைக் கண்டு சோர்ந்து நின்று விடாமல் அதையே சாக்காக சொல்லாமல் என்ன வந்தாலும் கர்த்தருடைய பணியைத் தொடருவேன் என உறுதியாயிருங்கள். 'முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவரது நீதியையும் தேடுங்கள். அப்பொழுது உங்கள் வாழ்வற்குரிய அனைத்தும் கூட கொடுக்கப்படும்.
இயேசுகிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழி நடத்தும் நல்ல தகப்கனே, இந்த நாளிலும் தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டி எழுப்புவதிலும், தேவனுக்குரிய காரியங்களை முதலாவது தேடுவதிலும் நாங்கள் எங்கள் வாழ்வின் முக்கியமான பணியாக கருத எங்களுக்கு உதவி செய்யும். இந்த வாழ்வுக்குரிய காரியங்களில் மாத்திரம் நாங்கள் ஈடுபட்டு, தேவனுக்குரிய காரியங்களை மறந்து ஜீவிக்காதபடி, எங்களை காத்தருளும். என்ன தடைகள் வந்தாலும், கர்த்தருக்கென்று செய்கிற காரியத்தில் சோர்ந்து போகாமல் உறுதியாய் இருந்து செய்து முடிக்க பெலனை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
தாய்லாந்து - Thailand - தேசத்திற்காக ஜெபிப்போம்:
1. இங்கு 92 சதவீதம் புத்தர்கள் இவர்கள் இயேசு கிறிஸ்துவை கண்டுக் கொள்ள ஜெபிப்போம்.
2. இந் நாட்டின் 14 சதவீதம் வருமானம் விபச்சாரத் தொழிலின் மூலமாக கிடைக்கிறது. இந்த நிலை மாற நாம் ஜெபிப்போம்.
3. இத்தேசத்திலுள்ள ஊழியர்களுக்காக, மிஷனெரிகளுக்காக கிறிஸ்தவர்களுக்காக ஜெபிப்போம்.
4. சுவிசேஷத்திற்கான தடைகள் நீங்க ஜெபிப்போம்.
5. இத்தேசத்தில் செயல்படும் தீவிரவாத சக்திகள் அழிக்கப்பட ஜெபிப்போம்.
6. இத்தேசத்தை கட்டி வைத்திருக்கும் விக்கிரக ஆவிகளின் வல்லமைகள் அழிக்கப்பட ஜெபிப்போம்.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment