Sunday, 3 October 2010

தேவன் காண்கின்ற மனிதன்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 செப்டம்பர் மாதம் 15-ம் தேதி - புதன் கிழமை

தேவன் காண்கின்ற மனிதன்
புதன் கிழமை
... மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். - (1 சாமுவேல் 16:7).
ஒரு மனிதன் கடற்கரை ஓரமாக நடந்து அங்கிருந்த குகைகளுக்குள் சென்று பார்த்து கொண்டிருந்தான். ஒரு குகையில் ஒரு பையில் 20, 30 களிமண்ணால் செய்யப்பட்ட உருண்டைகள் இருந்தன. அவை ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாக இருந்தன. யாரோ களிமண் உருண்டைகளை செய்து அவற்றை வெயில் காய வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவனாக, அந்த பையை வெளியே எடுத்து கொண்டு போய், ஒவ்வொன்றாக எடுத்து, தன் கையினால் எவ்வளவு தூரம் எறிய முடியுமோ அவ்வளவு தூரம் கடலுக்குள் எறிய ஆரம்பித்தான். ஒரு உருண்டை அங்கிருந்த கல்லில் பட்டு, உடைந்தது. என்ன அதிசயம்! அதற்குள் இருந்து விலையேறப்பெற்ற ஒளிவீசும் கல் தெரிய ஆரம்பித்தது. அதை கண்ட உடன் அவன் ஒவ்வொரு கல்லாக வேகவேகமாக அந்த கல்லின் மேல் போட்டு உடைக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றிலும் ஒரு விலையுயர்ந்த கல் காணப்பட்டது. ஐயோ, மற்ற கற்களும் தான் தூக்கி எறியாமல் இருந்திருந்தால், எத்தனையோ விலைமதிக்க முடியாத கற்களை கொண்டு சென்றிருக்கலாமே என்று வருத்தப்பட்டான்.
இதை போலதான் நாம் காண்கின்ற மக்களும்! ஒரு உருவத்தை பார்த்து நாம் மதிப்பிடுகிறோம், இது ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதது என்று, ஏன் நம்மையே பார்த்து நாம் குறைவாக மதிப்பிடுகிறோம். ஒரு அழகற்ற மனிதனையோ, மனுஷியையோ நாம் பார்க்கும்போது, அவர்களை அழகுள்ள, நன்கு உடையணிந்த மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து, இது முக்கியமில்லாதது என்று கணித்து விடுகிறோம். அவர்களுடைய உள்ளான அழகை கவனிக்க தவறிவிடுகிறோம்.
தேவன் படைத்த நம் ஒவ்வொருவருக்குள்ளும் அநேக தாலந்துகள் அடங்கியுள்ளது. நாம் பார்ப்பது வெளியே மட்டும் தான். ஒருவரையும் அவர்களது வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வரக்கூடாது. மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறவர். அதனால் தான், தாவீதின் வாட்டசாட்டமான பெலசாலிகளான ஏழு சகோதரர்களையும் தேவன் இஸ்ரவேலின் இராஜாவாக தெரிந்து கொள்ளவில்லை, ஆனால், எங்கோ ஒரு இடத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த தாவீதை தெரிந்து கொண்டார். ஏனெனில் தாவீது ஆட்டிடையனாக இருந்தாலும், தாவீதின் மனம் தேவனையே நோக்கி கொண்டிருந்தது. 'கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை' - (சங்கீதம் 16:8) என்று தைரியமாக சொல்ல முடிந்தது. அதனால் தான் தேவன் 'என் இருதயத்திற்கு ஏற்றவனாக கண்டேன்' என்று தாவீதை குறித்து சாட்சி சொல்ல முடிந்தது. அந்த இருதயத்திற்குள் பொதிந்திருந்த தேவனை குறித்த தாகத்தை அவர் கண்டார். தாவீதை ஆட்டிடையன் தானே என்று தள்ளிவிடவில்லை. தேவன் அவரை தெரிந்து கொண்டபடியால், தாவீதிற்குள் இருந்த விலையேறப்பெற்ற முத்துக்களாகிய சங்கீதங்களை நாம் இன்றும் வாசித்து களிகூர முடிகிறது.
ஒருவேளை நம்மோடு வேலை செய்கிறவர்கள் மிகவும், எளிமையான தோற்றத்தோடு இருக்கலாம், ஆனால் அதற்காக நாம் அவர்களை புறம்பே தள்ளாமல், யாராயிருந்தாலும் மதிக்க கற்று கொள்ள வேண்டும். சிலர், அவர்களது தோற்றத்தை வைத்து, அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவார்கள். அப்படி நாம் வெளி தோற்றத்தை பார்த்து எடை போடாதபடி, அவர்களுக்குள் மறைந்திருக்கிற தாலந்துகளை காண தேவன் கிருபை செய்வாராக.
தேவனுக்கு பயப்படாதபடி அழகு மாத்திரம் இருந்து எந்த பயனுமில்லை, 'சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்' (நீதிமொழிகள் 31:30). வெளிதோற்றத்தை வைத்து நாம் எதையும் நிதானிக்காதபடி, தீர்மானிக்காதபடி, தேவன் காண்கின்ற வண்ணமாக நாம் மனிதர் யாரையும் காண தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக!
அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்






ஜெபம்
எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய நல்ல கர்த்தரே, நீர் காண்கிற விதமாக நாங்கள் நீர் படைத்த ஒவ்வொரு சகோதரனையும் சகோதரியையும் காண கிருபை செய்யும். வெளி தோற்றத்தை வைத்து மற்றவர்களை குறைவாக எண்ணாதபடி எங்களை காத்தருளும். இப்போது எங்களுக்கு இருக்கிற இந்த அற்பமான சரீரங்களை உம்முடைய வருகையில் மகிமையின் சரீரங்களாக மாற்றி உம்மோடு கூட என்றும் வைத்து கொள்ள போகிறீரே உமக்கு நன்றி. அதற்கு எங்களை இப்போதிருந்தே பாத்திரர்களாக மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
இந்தோனேஷியா – Indonesia
1. இந்தோனேஷியா தேசத்திற்காக : இஸ்லாமியார்களால் நிறைந்துள்ள
இத்தேசம் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது. இத் தேச
மக்களுக்காக நாம் ஜெபிப்போம்.
2. இந்த நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் தீய செயல்கள்
ஒழிந்து போக நாம் ஜெபிப்போம்.
3. இந்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள், ஊழியர்கள், ஊழியகாரர்களின்
குடும்பங்களின் பாதுகாப்பிர்காக நாம் ஜெபிப்போம்.





அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina mannadevotionals.

No comments:

Post a Comment