Sunday, 3 October 2010

ஹனுக்கா - Hanukkah

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 03-ம் தேதி - ஞாயிற்று கிழமை
ஹனுக்கா - Hanukkah
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு. - (லேவியராகமம் 24:1-2)


கி.மு. 167-ல் இஸ்ரவேல் நாடு சீரியா தேசத்தின் கீழ் இருந்து வந்தது. அப்போது, மத்தியாஹூ (Mattiyahu) என்னும் யூத ஆசாரியரை அவருடைய ஊராகிய மோடி என்னுமிடத்தில் சீரிய இராணுவம் பிடித்து, தங்கள் தெய்வமாகிய ஜீயஸ் (Zeus) என்னும் கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, மத்தியாஹூவையும், அவருடய ஐந்து மகன்களையும் அதை வணங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். அதற்கு மத்தியாஹூ மறுத்ததுமன்றி, அந்த பலிபீடத்தை தைரியமாக இடித்துப் போட்டு, வற்புறுத்திய வீரனையும் கொன்று விட்டு, பக்கத்தில் இருந்த மலைக்கு தன் மகன்களோடும் இன்னும் சில யூதர்களோடும் தப்பி ஓடினார்.
இந்த சிறிய குழுவினர் மக்காபீஸ் (Meccabees) என அழைக்கப்பட்டடனர். அவர்கள் சீரிய இராணுவத்திற்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி தங்களிடமிருந்த கம்புகளையும், விவசாயத்திற்கு வைத்திருந்த இரும்பு சாமான்களையும் வைத்து, அவர்களோடு போரிட்டு, தேவன் அவர்களுக்கு உதவினபடியால் அற்புதமாக வெற்றி பெற்று, எருசலேமையும் தேவாலயத்தையும் மீண்டும் கைப்பற்றினார்கள். சீரியர்கள் தேவாலயத்தை மிகவும் மோசமான நிலையில் அசுசிப்படுத்தியிருந்தபடியால், அதை சுத்தம் பண்ண ஆரம்பித்தார்கள். தேவனுடைய கட்டளையின்படி குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும். அதனால் முதலில், குத்துவிளக்கை எடுத்து, அதை எரிய விட ஆரம்பிக்கும் போது, துரதிஷ்டவசமாக, அதற்கு தேவையான ஒலிவ எண்ணெய், ஒரு நாளைக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இருக்கும்வரை எரியட்டும் என்று நினைத்து, அவர்கள், தேவாலயத்தை விடாமல் சுத்தம் செய்ய ஆரம்பித்து, செய்துக் கொண்டிருந்தபோது அதிசயமாக அந்த குத்துவிளக்கிலிருந்த எண்ணெய் குறைந்துப் போகவே இல்லை. எட்டு நாட்களுக்கு அந்த எண்ணெய் போதுமானதாக, அந்த விளக்கு தொடர்ந்து எரிந்துக் கொண்டே இருந்தது. அவர்கள் மீண்டும் எண்ணெய் கொண்டு வரும்வரை எட்டு நாட்களுக்கு அது போதுமானதாக இருந்தது.
அதை நினைவுகூர்ந்து, ஒவ்வொரு வருடமும், இஸ்ரவேலர் ஹனுக்கா
(Hanukkah) என்னும் பண்டிகையை எட்டுநாட்களுக்கு கொண்டாடுகிறார்கள். ஹனுக்கா என்பதற்கு Feast of Dedication என்பது பொருளாகும். தேவாலயத்தை திரும்ப சுத்தப்படுத்தி தேவனுக்கு என்று அர்ப்பணித்ததால் அதற்கு அர்ப்பணிப்பின் பண்டிகை என்றுக் கொண்டாடப்படுகிறது.
இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்ற யோவான் 8:12 ல் என்றுக் கூறுகிறார். மட்டுமல்ல, அவரே, உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாயிருக்கிறார் (யோவான் 1:9). அவரையன்றி, எந்த மதமும், எந்த மார்க்கமும், மனிதனை பிரகாசிப்பிக்க முடியாது. ஹனுக்காவின் போது,எப்படி அந்த குத்து விளக்கு தொடர்ந்து எரிந்து அற்புதத்தை விளங்க பண்ணினதோ, அதுப் போல கிறிஸ்துவை விசுவாசிக்கிற எந்த மனுஷனையும் பிரகாசிப்பித்து, தொடர்ந்து அவர்கள் ஒளியைக் கொடுக்கத்தக்கதாக அவர்களை நிரப்புகிற தேவனாய் இருக்கிறார்.
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் (மத்தேயு 5:14) என்று கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாமும் வெளிச்சமாயிருக்கிறோம் என்று கர்த்தர் கூறுகிறார். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மற்றவர்கள் நீங்கள் ஒளியிலே நடப்பதைக் கண்டு, அவர்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி நாம் நமக்குள் இருக்கிற ஒளியை வெளிப்படுத்த வேண்டும். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது என்பதுப்போல நமக்குள் ஒளியிருந்தால் அது மறைந்திருக்காது. அது வெளியே வெளிப்படும். இப்படி கிறிஸ்துவாகிய ஒளியை, இருளிலே இருககிற மக்களுக்கு உலகத்தின் ஒளியாகிய நாம் வெளிப்படுத்தி அவர்களையும் ஒளியினிடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
யூத மக்கள் உலகத்தின் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டுக் கொள்ள நாம் ஜெபிக்க வேண்டும். அவர்கள் ஹனுக்கா பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அது விளக்குகளின் பண்டிகை என்று அவர்கள் அதைக் கொண்டாடினாலும் கிறிஸ்துவை அறியாதபடிக்கு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களை அறியாமலேயே கிறிஸ்துவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கண்கள் தெளிவிக்கப்பட்டு கிறிஸ்துவை அறிந்துக் கொள்ளும்படியாக நாம் தொடர்ந்து தேவனிடம் வேண்டிக்கொள்ளுவோம். எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
காரிருள் நம்மை சூழ்ந்தாலும் கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர் விடுவோம் உலகின் ஒளி நாமே

ஜெபம்
ஒருவரும் சேரக் கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிற எங்கள் நல்ல தகப்பனே, உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய ஒளியை பெற்றுக் கொண்ட நாங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்க எங்களை பயன்படுத்தும். யூத ஜனமாகிய உம்முடைய ஜனம் கிறிஸ்துவே மேசியா என்பதைக் கண்டுக் கொள்ள கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
தென் கொரியா - South Korea - நாட்டிற்காக ஜெபிப்போமா?

1. அநேக கிறிஸ்தவர்கள் இருக்கும் இந்த நாட்டில் கர்த்தருக்குள் இன்னும் அதிகமாக அவர்கள் வளர்ந்து, மற்ற தேசங்களுக்கு அவர்கள் மூலம் எடுத்து செல்லப்படவும் ஜெபிப்போம்.

2. வட கொரிய மக்களை அவர்கள் நேசித்து, எப்படியாவது கிறிஸ்துவின் அன்பை அந்த மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஜெபிப்போம்.
3. தென் கொரிய மக்கள் உலகமெங்கும் செய்யும் ஊழியங்களில் தேவ நாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.
4. உலகிலேயே மிகப்பெரிய ஆலயம் உள்ள அத்தேசத்தில், பாஸ்டர் பால் யாங்கி சோ செய்யும் ஊழயிங்களுக்காகவும், ஜேராக் லீ அவர்கள் மூலமாகவும், செய்யப்படும் தொலை காட்சி ஊழியங்கள் அநேகருக்கு பயனுள்ளதாக அமையவும் ஜெபிப்போம் .

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment