Friday 13 May 2011

அந்நிய நுகம்


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 02-ம் தேதி - வியாழக் கிழமை
அந்நிய நுகம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாகளூ நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?. - (2 கொரிந்தியர் 6:14-15).

காலங்கள் மாறி கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் ஒரு கணவனை அல்லது மனைவியை தெரிந்தெடுப்பதில் தங்களுடைய சுய விருப்பத்தை நிறைவேற்றவே விரும்புகின்றனர். தங்களுடைய பூரண வளர்ச்சியடையாத பருவத்தில் அவர்கள் அழகை, வசீகரத்தை அல்லது செல்வத்தை தங்கள் வாழ்க்கை துணையிடம் எதிர்ப்பார்க்கின்றனர். ஒரு இளைஞன் தன் வாழ்க்கை துணையை தெரிந்தெடுக்கும்போது எவ்விதமான குணாதிசயங்களை எதிர்பார்க்க வேண்டும், பெற்றோரும் எவ்வித குணாதிசயங்களை மனதில் கொண்டு வரன் பார்க்க வேண்டும் என்பதையும் காண்போம்.
வாழ்க்கை துணை ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்ற எண்ணமே முதலும் எல்லாவற்றிற்கும் மேலானதுமாக இருக்க வேண்டும். ஒரு பெண் ஒரு மனிதனை பார்த்து அவரை வாழ்க்கை துணையாகக் தீர்மானிக்கும் முன் கீழ்கண்ட கேள்விகளை கேளுங்கள், இந்த மனிதன் ஒரு கிறிஸ்தவரல்ல என கருதுகிறேன். இவர் எவ்வித பழக்கங்களை கொண்டிருப்பார்? என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொண்டு வருவாரா? அல்லது சண்டையை கொண்டு வருவாரா? மது அருந்துவாரா? புகை பிடிப்பாரா? என்று தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதை மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவ பெண், பார்க்க வந்த ஒவ்வொரு ஆணிடமும் கேள்விகள் கேட்டு, ஒவ்வொருவரையும் தள்ளி, இன்று 35 வயது வரை இன்னும் திருமணம் ஆகாமலேயே இருக்கிறாள்!
ஒரு கிறிஸ்தவனுக்கு தேவனே வாழ்வின் மையம், அடுத்ததாக வாழ்க்கை துணை. தேவனுக்கு எதிலும் இடம் கொடுக்காதவரானால் அது எப்பேர்ப்பட்ட மன வேறுபாடுகளையும் வேதனைகளையும் உருவாக்கும்! ஆகவே கிறிஸ்தவரல்லாத ஒருவரை நேசிக்க ஆரம்பிக்குமுன், உறவாட ஆரம்பிக்குமுன், கிறிஸ்தவ பெண்களும், ஆண்களும் சிந்தித்து, அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்ற வசனத்தை நினைவுகூர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்லி, பின்னர் வாழ்நாளெல்லாம் கண்ணீர் வடித்து கொண்டிருக்க வேண்டாம்!
எனது உறவின் பெண் வேறு மதத்தில் உள்ள வாலிபனை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தாள். அவனிடம் 'நீ கிறிஸ்தவனாக மாறினால், நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்' என கூறவே, அவனும் ஒத்து கொண்டு, ஞானஸ்நானம் எடுத்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்தான். திருமணம் முடிந்து, அந்த பெண் அந்த வாலிபனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது, அந்த பையனின் பெற்றோர், 'எங்கள் சுவாமி கோயிலில் நீ திருமணம் செய்தே ஆக வேண்டும்' என்று சொல்லி, அவளை கோயிலுக்கு கூட்டி சென்று, அங்கு மந்திரங்களை ஓதி, அந்த பையன் அவளுடைய கழுத்தில் தாலி கட்டினான். ஒரு பிள்ளையும் பிறந்தது. அவர்கள் வீட்டில், அந்த பெண் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று வற்புறுத்தல். அவளால் முடியாது போகவே இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது கற்பனை கதையல்ல, உண்மை சம்பவம்!
ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து அவளை வாழ்க்கை துணையாக்க தீர்மானிக்குமுன் கீழ்க்ணட கேள்விகளை கேளுங்கள். இந்த பெண் என்னுடைய பிள்ளைகளுக்கு தாயாகி, நாள் முழுவதும் அதிக நேரம் அவர்களோடிருப்பாள், ஆனால், கிறிஸ்துவை அறியாதவளாக இவள் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய காரியங்களை குறித்து எப்படி கற்பிப்பாள்? மேலும் நான் அவளை கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்த முடியவில்லை என்றால் நித்திய ஜீவனுக்கேதுவான நம்பிக்கையில்லாத அவளுடைய வாழ்வையும், மரணத்தையும் பார்ப்பது மிகவும் வேதனை நிறைந்த காரியமாக இருக்குமே என சிந்தியுங்கள்.
கிறிஸ்தவர்களில் பத்தில் எட்டுபேர் கிறிஸ்தவரல்லாதோரை திருமணம் செய்து கடைசியில் தேவனையும் சபையையும் விட்டு விலகி போகின்றனர் என புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. என்னோடு படித்த ஒரு வாலிபன் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்றவன், கிறிஸ்தவரல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து, விசுவாசத்தை விட்டே விலகி போனான்! என்ன பரிதாபம்! அவனுக்காக கண்ணீர் விட்டு ஜெபிப்பதை தவிர என்ன செய்ய முடியும்?
நான் நடந்து செல்ல திட்டமிட்டிருக்கும் நிலப்பகுதியில் கண்ணிவெடி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் அறிந்தால் நான் அதற்கப்பாலேயே நின்று விட மிக கவனமாயிருப்பேன். அது போல கிறிஸ்தவரல்லாத துணையை தெரிவு செய்தவர்களில் அநேகர் தேவனை விட்டே விழுந்து போயிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, அதே தவறை நாம் செய்யக்கூடாதல்லவா?
பிரியமானவர்களே, நீங்கள் ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவரை திருமணம் செய்தால் கர்த்தருக்குள் இணைந்து வல்லமையாக பலப்பட்டு வளருவீர்கள். முக்கியமாக உங்கள் சந்ததியை விலையேறப்பெற்ற விசுவாசத்திற்குள் கொண்டு வருவீர்கள். ஆனால் மதம் முக்கியமானதல்ல என்று கிறிஸ்தவரல்லாத ஒருவரை இனக்கவர்ச்சியினால் திருமணம் செய்தால் உங்களுடைய ஆத்துமாவிற்கும், பிள்ளைகளின் ஆத்துமாவிற்கும் தனக்கு பின்வரும் சந்ததிகளுக்கும் நித்திய அழிவை கொண்டு வந்து விடுவீர்கள். ஆகவே தயவு செய்து உங்கள் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். கர்த்தர் உங்களை நேசிப்பதால் இந்த கட்டுரையை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளுங்கள். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக சங்கீதம் 128ன்படி, 'உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்' என்று ஆசீர்வாதத்தோடு வாழ வாழ்த்துகிறோம். ஆமென் அல்லேலூயா!
மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள்
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இன்றைய வாலிபர்கள், தங்கள் சொந்த இச்சைகளின்படி, தங்கள் துணையை தெரிந்து கொள்ளாமல், வேத வாக்கியங்களின்படி தெரிந்து கொள்ள உதவி செய்யும். அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக, அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? என்னும் வசனத்தை நினைவுகூர்ந்து, அதற்கு கீழ்ப்படிய கிருபை தாரும். தங்கள் வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமானதாக இருக்கும்படி, தங்களுக்கு பின்வரும் சந்ததிக்கு ஆசீர்வாதமானவர்களாக இருக்கதக்கதாக நல்ல துணைகளை தெரிந்து கொள்ள அவர்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
டிஜ்போட்டி ( Djibouti ) நாட்டிற்காக ஜெபிப்போமா? djibouti

ஆப்பிரிக்க நாடாகிய இந்த நாடு ஒரு இஸ்லாமிய நாடாகும்.

1) வறுமையிலும் பஞ்சத்திலும் வாடும் இந்த தேசம் செழிப்பான தேசமாக மாற ஜெபிப்போமா?


2) இந்த தேசத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


3) இங்குள்ள ஒரு சில கிறிஸ்தவ சபைகள் உயிர்மீட்சி பெற்று இந்த தேசத்தை சுதந்தரிக்க ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna

No comments:

Post a Comment