கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். - (ஆதியாகமம் 18:19).
கர்த்தர் ஆபிரகாமை குறித்து 'தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்' என்று கூறினார். அப்படிப்பட்டதான தகப்பனாக ஆபிரகாம் இருந்ததால், அவருடைய சந்ததி மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக இந்நாளளவும் திகழ்கிறது. நாமும் அவருடைய சந்ததியாக கிறிஸ்துவுக்குள் அழைக்கப்படுகிறோம்.
இந்நாட்களில் அத்தகைய தகப்பன்மார் இல்லாததினால், நாம் பயங்கரமான இளைய தலைமுறையை கண்டுவருகிறோம். இந்நாட்களில் வாலிபர்கள் போதை மருந்துகளுக்கும், திருமணத்திற்கு முன் பாலியல் உறவுகள், தீவிரவாத குழுக்களுடன் சேர்க்கை, குண்டர்களுடன் சேர்க்கை இப்படி கெட்டு போவதற்கு தகப்பன்மார் தங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்றாததே காரணம்.
நமது பிள்ளைகள் சபைக்கும் சமுதாயத்திற்கும் பிரயோஜனமுள்ளவர்களாக விளங்க வேண்டுமென்றால் நிச்சயமாக அதில் தகப்பனின் பங்கு அதிகம் என்பதை நாம் உணர வேண்டும். தேவன் குடும்பத்தின் தலையாக கணவரைதான் வைத்திருக்கிறார். மனைவியின் பங்கும் அதில் உண்டென்றாலும் குடும்ப தலைவன் என்ற முறையில் தகப்பன்மார் நிச்சயமாக அதிக பொறுப்புண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் உண்டென்றால், அந்த பிள்ளைகளின் எல்லா பொறுப்பும், அவர்களின் எதிர்காலமும், அவர்களின் படிப்பும் அவர்கள் திருமணம் செய்து போகும்வரைக்கும் அவர்களை குறித்த எல்லா காரியத்திலும் தகப்பனுக்கு பங்கு உண்டு, பொறுப்பு உண்டு. தகப்பன் இல்லாத தகப்பனை இழந்த குடும்பத்தை குறித்து இங்கு பேசவில்லை. ஒரு கரிசனையுள்ள தகப்பன், தன் பிள்ளைகளின் படிப்பை குறித்தும், உணவை குறித்து மாத்திரம் கரிசனை கொள்ளாமல், அவர்களின் ஆவிக்குரிய ஜீவியம் எப்படி உள்ளது என்பதிலும் அக்கறை கொள்கிறான். பிள்ளைகள் தினமும் வேதாகமம் படிக்கிறார்களா? முழங்கால் படியிட்டு ஜெபிக்கிறார்களா? என்று அவன் காண வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு அவன் போதிக்க வேண்டும். 'எனக்கே நேரம் இல்லை, வேலைக்கு போயிட்டு வருவதே எனக்கு சரியாக இருக்கிறது, இதில் இதை எல்லாம் நான் எங்கு செய்வது' என்று சாக்கு போக்கு சொல்வீர்களானால், நாளை கர்த்தரிடம் அவர் நமக்கு கொடுத்த பிள்ளைகளை எப்படி வளர்த்தோம் என்பதை குறித்து கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒருவேளை வேலையினிமித்தம் வெளிநாட்டில் தகப்பன் இருந்தாலும், எனக்கு பொறுப்பில்லை என்று கைகழுவ விட முடியாது. விடுமுறைக்கு வரும்போது மாத்திரமல்ல, ஒவ்வொரு முறை பிள்ளைகளோடு பேசும்போதும், அவர்களுக்கு கர்த்தரை குறித்த பயத்தோடிருக்க போதிக்க வேண்டும். அவர்களிடம் ஆலயத்திற்கு ஒழுங்காக போக சொல்ல வேண்டும். கர்த்தருக்கடுத்த காரியங்களில் ஈடுபடும்படி சொல்லி போதிக்க வேண்டும். குடும்பமாக ஒரே சபைக்கு செல்லும்படி கற்று கொடுக்க வேண்டும். தாய் ஒரு சபைக்கும், பிள்ளைகள் ஒரு சபைக்கும் நிச்சயமாக செல்ல கூடாது.
இன்று அநேக ஆவிக்குரிய போதகர்களின் பிள்ளைகள் உலகவழிகளில் சென்று விடுவதற்கு காரணம், போதகர்கள் மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது போல தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்காததே! தங்கள் பிள்ளைகள் தவறு செய்யும்போது நிச்சயமாக கண்டிக்க வேண்டும். ஏலி ஒரு உத்தம ஆசாரியனாக இருந்தபோதும், 'நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்' (1 சாமுவேல் 2:29) என்று கர்த்தர் அவனிடம் அவனுடைய பிள்ளைகளை குறித்து வருத்தப்பட்டதையும், பின்னர் அந்த பிள்ளைகள் ஒரே நாளில் மரிக்க நேரிட்டதையும் காண்கிறோம். தீர்க்கதரிசி சாமுவேல் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாயிருந்தும், 'அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்' (1சாமுவேல் 8:3) என்றும் பார்க்கிறோம். தாவீது ராஜாவின் பிள்ளைகள் எப்படி மோசமானவர்களாக இருந்தார்கள் என்றும் நாம் வேதத்தில் கண்கூடாக காண்கிறோம். இந்த தகப்பன்மார், தாங்கள் கர்த்தரோடு உண்மையாக இருந்தால் போதும் என்று சுயநலமாக நினைத்து, தங்களுக்கு பின் வரும் சந்ததியினருக்கு கர்த்தரை குறித்து சொல்லி போதிக்காததால், அவர்கள் கெட்டு போனார்கள்.
நாம் சம்பாதிப்பதும், கஷ்டப்படுவதும் எதற்காக? நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக மாத்திரமே! அவர்கள் உலக பிரகாரமாக நன்றாக இருந்தால் மட்டும் போதாது, கர்த்தருக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான், அவர்களை நாம் பரலோகத்தில் பார்க்க முடியும். என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை (3யோவான் 4ம் வசனம்) என்று யோவான் சொல்வது போல அதை விட மேலான சந்தோஷம் நமக்கு எதுவும் இல்லை!
ஆபிரகாமை குறித்து, தேவனுக்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது, அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்று தைரியமாக கர்த்தர் கூறினார். அதன்படி ஆபிரகாம் கட்டளையிட்டு, ஈசாக்கும், யாக்கோபும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்ததோடு, கர்த்தர் தாம் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் என்று கூறி கொள்ளும்படியாக அவர்கள் வாழ்ந்தார்கள். நம் பிள்ளைகளையும் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தை போதித்து கர்த்தர் மகிழ்கின்ற குடும்பங்களாக, ஆபிரகாமின் சந்ததியாக நம் குடும்பங்களை காத்து கொள்வோமா? கர்த்தர் தாமே அப்படிப்பட்ட தகப்பன்மாராக ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென் அல்லேலூயா!
நாம் ஆராதிக்கும் தேவன் அவர் ஜீவனுள்ள தேவன் - அவர் ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் நம் தேவன்
ஆபிரகாம் விசுவாசித்தார் நீதிமானின் ஆசிகள் பெற்றார் விசுவாச மார்க்கத்தாலே ஆபிரகாமின் பிள்ளைகளாய் ஆசிகளை சுதந்தரிப்போம்
|
No comments:
Post a Comment