Sunday, 10 October 2010

ஜீவனைக் கொடுக்கும் அன்பு

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 10-ம் தேதி - ஞாயிற்றுக் கிழமை
ஜீவனைக் கொடுக்கும் அன்பு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. - யோவான் 15:13.

டைட்டானிக் கப்பலை (Titanic Ship) கட்டிய மனிதரிடம் ஒருவர் ‘இது எவ்வளவு பாதுகாப்பானது’ என்று கேட்டதற்கு, 'அவர் ஆண்டவர் கூட இதை முழ்கடிக்க முடியாது’ என்று ஆணித்தரமாகக் கூறினாராம். ஆனால் அந்தக் கப்பலுக்கு என்னவாயிற்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் பயணம் செய்த 1528 மக்களில், ஆறுப் பேரே காப்பாற்றப்பட்டனர். அதை திரைப்படமாக எடுத்து, Leonardo Caprice யை ஹீரோவாக சித்தரித்திருந்தார்கள். ஆனால் அந்தக் கப்பலில் இருந்த உண்மை ஹீரோவைப் பற்றிதான் இன்றுப் பார்க்கப் போகிறோம்.

ஜான் ஹார்ப்பர் (John Harper) என்னும் அருமையான மனிதர் கிறிஸ்தவ பெற்றோருக்கு 1872-ம் ஆண்டு பிறந்தார். அவர் தனது 13ஆவது வயதில் கர்த்தரை ஏற்றுக்கொண்டு, நான்கு வருடங்கள் கழித்து, கர்த்தரைக்குறித்து அறிவிக்க ஆரம்பித்தார். அவருக்கு திருமணமாகி, மனைவி நான்கு வருடங்களுக்குள் மரித்துப் போனார்கள். அவர்களுக்கு நீனா (Nina) என்னும் பேர் கொண்ட அருமையான பெண் குழந்தை இருந்தது.

ஹார்ப்பர், மூடிபிரசங்கியாரின் ஆலயத்தில் பேசுவதற்காக சிக்காகோவிற்கு (Chicago) அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக 1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அவரும் அவருடைய பிள்ளை நானாவும் டைட்டானிக் கப்பலில் ஏறினார்கள். எதிர்பாராத விதமாக, பனிமலையின்மீது மோதி கப்பல் மூழ்க ஆரம்பித்த போது, அவர் தனது மகள் நானாவை உயிர்காக்கும் (Life Boat) படகில் ஏற்றிவிட்டு, 'நான் உன்னை ஒரு நாள் காண்பேன்' என்றுச் சொல்லி, அனுப்பி வைத்தார். அவருக்கும் படகில் போக இடமிருந்தாலும், அவர் மற்ற மக்களை காக்கும் பொருட்டு அதை விட்டுவிட்டு, தன் மகளை அனுப்பிவைத்தார். பின் மரண பயத்தோடு இருந்த மக்களிடம் வந்து, 'பெண்களும், சிறுபிள்ளைகளும், இரட்சிக்கப்படாதவர்களும், முதலில் உயிர்காக்கும் படகில் ஏறுங்கள்' என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும்போதே கப்பல் மூழ்க ஆரம்பித்தது. கப்பலில் இருந்து பயணிகள், கீழே ஐஸ் தண்ணீர்ரில் குதிக்க ஆரம்பித்தார்கள். அதில் ஹார்ப்பரும் ஒருவராவார்.

அந்த நடுங்கும் குளிரிலும் ஹார்ப்பர், மக்கள் அந்த குளிரில் உறைந்து மரிக்குமுன்னே, அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த ஆரம்பித்தார். அப்போது, ஒரு இளம் வாலிபன், அங்கிருந்த ஒரு கட்டையின் மேல் ஏறி தப்பும்படி போராடிக் கொண்டு இருப்பதைக் கண்டார். அவனிடம், 'நீ இரட்சிக்கப்பட்டாயா? என்றுக் கேட்டார்'. அவன் இல்லை என்றுக் கூறினான். உடனே தன் மேலே இருந்த உயிர்காப்பு மிதவை ஆடை (Life Jacket) எடுத்து, அந்த வாலிபனுக்கு கொடுத்து. 'என்னைவிட உனக்குத்தான் அது தேவை' என்றுக் கூறிவிட்டு, மற்ற பயணிகளுக்கு சத்தியத்தைச் சொல்லச் சென்றார். பின் மீண்டும் அந்த வாலிபனிடம் வந்து, அவனுக்கு சத்தியத்தைச் சொல்லி, கிறிஸ்துவுக்குள் அவனை வழிநடத்தினார். அன்று மூழ்கின 1528 பேரில் ஆறுப் பேரே காப்பாற்றப்பட்டனர். அதில் அந்த வாலிபனும் ஒருவன்.

நான்கு வருடங்கள் கழித்து, அந்த ஆறுப்பேரையும் சேர்த்து நடந்தக் கூட்டத்தில் அந்த வாலிபன் கண்ணீரோடு எழுந்து நின்று, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், ஹார்ப்பர் எப்படி அந்த பனிநீரிலும், மற்றவர்களுக்கு சுவிசேஷத்தைக் கூறினார் என்பதையும், அவர் நீந்த முடியாமல் கடைசியில் பலவீனமடைந்து, தண்ணீரில் மூழ்கும் நேரம் வந்தபோது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கூறிக் கொண்டே மூழ்கியதையும் நினைவு கூர்ந்து கதறினான். மற்றவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற எப்படியாவது உயிர் காப்பாற்றும் படகை பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பையும் மற்றவர்களுக்கு கொடுத்து, தனது உயிரையும் கொடுத்த அற்புத மனிதரை ஹாலிவுட் படமெடுக்காமலிருக்கலாம், ஆனால், பரலோகத்தில் அவருக்கு நிச்சயம் பதில் செய்ப்படும்.

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. ஆமென். நிச்சயமாகவே ஹார்ப்பர் ஒரு அற்புத ஹீரோதான்.

இயேசுகிறிஸ்துவும் நம்மில் அன்பு கூர்ந்து, தமது ஜீவனையே நமக்காக கொடுத்தாரே, தேவனுடைய குமாரனாயிருந்தும், நமக்காக தம் ஜீவனைக் கொடுத்த, தம் மாசில்லாத இரத்தத்தை சிந்தி, நமக்கு இரட்சிப்பை இலவசமாக கொடுத்திருக்கிறாரே அவர், சூப்பர் ஹீரோதான். அவரை விசுவாசித்து, அவருக்காக எந்த தியாகமும் செய்யும் ஒவ்வொருவரும் ஒரு ஹீரோக்கள்தான்.

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
என்னை நேசிக்கின்றாயா?


ஜெபம்
எங்களை அளவில்லமல் நேசிக்கும் நல்ல தகப்பனே, ஒருவன் தன் சிநேகினுக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் அன்பிலும் அதிமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று சொல்லி, எங்கள் மேல் அன்பு கூர்ந்து, எங்களுக்காக தம் ஜீவனை ஈந்த இயேசு கிறிஸ்துவின் அன்பை நினைத்து நன்றி சொல்கிறோம். எப்படியாவது இரட்சிக்கப்படடிராத மக்கள் உம்மை அறிந்துக் கொள்ளும்படி, எந்த தியாகத்தையும் நாங்கள் செய்ய எங்களுக்கு மாதிரியாக நீர் இருக்கிறபடியால் உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் எங்களால் இயன்ற அளவு உமது நாமத்தை எடுத்துக் கூற எங்களை பயன்படுத்தும் தகப்பனே. எங்களை அர்ப்பணிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
சாலமோன் தீவுகளுக்காக - Solomon Islands - ஜெபிப்போமா?

1. 30 ஆண்டுகளுக்கு முன் கர்த்தருக்காக எழுந்து பிரகாசித்த இத்தீவிலுள்ள இன்றைய இளைஞர்களும் அதே எழுப்புதலைக் காண ஜெபிப்போம்.


2. தற்போது நடந்துக் கொண்டிருக்கும் கலவரத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பாதிப்பும் வராதப்படி அவர்களுக்காக ஜெபிப்போம்.

3. இத்தீவிலுள்ள மற்ற மதத்தினரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவை ஏற்றுக் கொள்ள ஜெபிப்போம். .
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment