என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் எனறு கர்த்தர் சொல்லுகிறார். - (1 சாமுவேல் 2:30ன் பின் பாகம்).
நமது தேவன் எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும் பாத்திரர். ஏலியின் இரண்டு குமாரர்கள் கர்த்தரை கனவீனப்படுத்தினபோது, கர்த்தருடைய சாபம் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்டு, அந்த இருவரும் ஒரே நாளில் மரித்த சம்பவம் நாம் அறிந்ததே. ஏலியும் அவரது இரண்டு குமாரரும் தேவனால் ஆசாரிய ஊழியத்திற்கு அழைக்கப்பட்டு, அந்த ஊழியத்தை செய்யும்படிக்கு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். அது ஒரு மிகவும் பரிசுத்தமான ஊழியமாகும். ஆனால் ஏலியின் குமாரர் இருவரும் செய்த பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது என்று வேதம் சொல்கிறது. அவர்கள் கர்த்தருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் மறந்து, தங்கள் இஷ்டத்திற்கு கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். தன்னுடைய குமாரர் செய்த பாவத்தை எல்லாம் கண்டு கொண்டிருந்த ஏலிக்கு தன் பிள்ளைகளை வன்மையாக கண்டிக்காதபடி, மேலாக கண்டித்தார். அதுவே அவர் செய்த பாவமாகும். 'நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்' என்று கர்த்தர் அவரை கேட்கும்படிக்கு, ஏலி தனது குமாரர்கள் செய்த பாவங்களை மிகவும் கவனக்குறைவாக எடுத்து கொண்டதன் பயன், அவர்கள் எல்லார் மேலும் தேவனுடைய கோபம் இறங்கி வந்தது. இதிலிருந்து நாம் முக்கியமான பாடத்தை கற்று கொள்ள வேண்டும். கர்த்தரை விட நமது குடும்பத்தில் உள்ள யாரையும் கனப்படுத்த கூடாது. கர்த்தருக்குத்தான் நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். நாம் எல்லாரும் நம் குடும்பத்தை அதிகமாய் நேசிக்கிறோம் என்பது கர்த்தருக்கு தெரியும், ஆனாலும் அவர்கள் எல்லாரையும் விட தம்மை நாம் அதிகமாய் நேசிக்க வேண்டும், கனப்படுத்த வேண்டும் என்று தேவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார். 'குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம் பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்' (மல்கியா 1:6). ஓவ்வொரு மகனும் தன் தகப்பனை கனம் பண்ணுகிறான், ஒரு மேலதிகாரி என்றால் நாம் எத்தனையாய் அவர்களை கனம் பண்ணுகிறோம். ஆனால், நமது தகப்பன் என்றும், எஜமான் என்றும் நாம் நம் தேவனை அழைக்கிறோம், ஆனால், அப்படி அழைக்கிற நாம், நம் பிதாவாகிய தேவனை கனம் பண்ணுகிறோமா? நம் தேவன் எஜமானனானால், அவருக்கு பயப்படுகிற பயம் எங்கே என்று தேவன் நம்மை பார்த்து கேட்கிறார். இன்று கிறிஸ்தவர்களாயிருக்கிற நம்மிடத்தில் நமது தேவனுக்கு பயப்படும் பயம் இருக்கிறதா? ஆலயத்தில் காலை ஆராதனை காலையில் ஒன்பது மணிக்கு என்றால், ஆடி அசைந்து, ஒன்பதரை மணிக்கு சபைக்கு செல்கிறோம். சபையில் உபவாச கூட்டம் என்றால் அதற்கு வருபவர்கள் சபைக்கு வருபவர்களில் பாதிப்பேர் கூட இருக்க மாட்டார்கள். ஜெபிக்க வேண்டும் என்று சொன்னால், அப்போது தான் கொட்டாவியும், தூக்க மயக்கமும், பாதி பேர் குடும்ப ஜெபம் என்றால், தூக்கம் என்று போய் விடுவார்கள். கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் நமது கர்த்தர் தானே என்று மிகவும் கவனக்குறைவாக நடந்து கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே! மற்ற மதத்தினரை பாருங்கள், காலையில் ஐந்து மணிக்கு அந்த குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, ஈர துணியோடு வந்து, தங்கள் தெய்வத்தை மிகவும் பவ்யமாக தொழுது கொள்வதை பார்க்கும்போது, ஜீவனுள்ள தேவனை நாங்கள் ஆராதிக்கிறோம் என்று சொல்கிற நாம், அதில் பாதியளவாவது பரிசுத்தமாய், பக்தியாய் கர்த்தரை ஆராதிக்கிறோமா என்றால் அது சந்தேகமே! நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? என்று தேவன் கேட்கிறார். எந்த அளவிற்கு நாம் அவரை கனம் பண்ணுகிறோம்? சபைக்கு சரியான நேரத்தில் செல்வதும் அவரை கனம் பண்ணுவதே! தம்மை கனம் பண்ணுகிறவர்களை அவரும் கனம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்கிறார். அதே சமயத்தில் கன ஈனம் பண்ணுகிறவர்களை அவர் கனஈனம் பண்ணுவார். சபைக்கு செல்வது மட்டுமல்ல, நாம் பாவம் செய்யாமலிருப்பதும், மற்ற புறஜாதி மக்களுக்கு முன்பாக நமது சாட்சியை காத்து கொள்வதும், நிச்சயமாக கனம் பண்ணுவதே! நான் என் வேலையிடத்தில் டீ குடிக்க போகும்போது, எதையும் சாப்பிட ஆரம்பிக்கும் போது, நான் ஒரு நிமிடம் கண்களை மூடி ஜெபித்துதான் சாப்பிட ஆரம்பிப்பேன். அது புறஜாதியாயிருக்கிற அநேகருக்கு சாட்சியாக இன்றளவும் இருக்கிறது. இது போல சிறு காரியங்களிலும் நாம் கர்த்தரை வெளிப்படுத்தும்போது, கர்த்தருடைய நாமம் அங்கு மகிமைப்படுகிறது. நம்மை இரட்சித்த தேவனை நாம் கனம் பண்ண வேண்டாமா? அது நமது கடமையல்லவா? உள்ளத்தின் ஆழத்திலிருந்து நாம் அவரை நிச்சயமாய் கனம் பண்ணவேண்டுமே! அப்படி நாம் கனம் பண்ணும்போது, நிச்சயமாகவே தேவன் நம்மை மற்றவர்களுக்கு முன்பாக நம்மை உயர்த்தி, நம்மை கனம் பண்ணுவார் என்பதில் சந்தேகமேயில்லை! ஆமென் அல்லேலூயா! கனத்திற்குரியவரே உம்மை ஆராதனை செய்கிறோம் மகிமைக்கு பாத்திரரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆராதனைக்குரியவரேஉம்மை ஆராதனை செய்கிறோம் துதிக்கு பாத்திரரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆராதனை எங்கள் தேவனுக்கே ஆராதனை எங்கள் கர்த்தருக்கே
|
|
இந்தோனேஷியாவிற்காக - Indonesia - ஜெபிப்பொமா? 1. இந்தோனேஷியாவில் 13,500 தீவுகள் இரக்கின்றன. அங்கு மொத்தம் 600 மொழிகள் பேசப்படுகின்றன. 1965ம் ஆண்டு, கம்யூனிசம் அந்த நாட்டை கைப்பற்ற முயன்றது, ஆனால் இஸலாமியர் போரிட்டு வெற்றி பெற்றனர். சில வருடங்களில் இந்தோனேஷியாவில், பெரிய உயிர்மீட்சியும் எழுப்புதலும் ஏற்பட்டது. ஆனால், அது அப்படியே தொடராதபடி, இந்தோனேஷியா இஸ்லாமிய நாடாக மாறியது. இங்கு வாழும் ஒவ்வொரு மக்களும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். 2. இங்கு கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக நடைபெறும் எல்லாவித எதிர்ப்புகளும், போராட்டங்களும் மாறத்தக்கதாகவும், இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாய் ஜீவனம் செய்யவும் ஜெபிப்போம். 3. இங்கு அடிக்கடி ஏற்படும் சுனாமி மற்றும் பூமி அதிர்ச்சியினால் மக்கள் பாதிக்கபடாதபடிக்கும் இங்கு வாழும் ஒவ்வொரு மக்களும் கர்த்தரே தேவன் என்று அறிந்து கொள்ளவம் ஜெபிப்போம்.
|
|
No comments:
Post a Comment