Friday, 11 February 2011

வேதனைகளை அறிந்த தேவன்


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 நவம்பர் மாதம் 11-ம் தேதி - வியாழக் கிழமை
வேதனைகளை அறிந்த தேவன்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
'நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்' - (யோபு 23:10).

ஒரு ராஜா தனது குடிமக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும்படி, ஆள நடமாட்டம் இல்லாத ஒரு இராத்திரி வேளையிலே, அநேகர் நடந்து செல்லக் கூடிய ஒரு முக்கிய பாதையிலே ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்து விட்டு, மக்கள் என்னதான் செய்கின்றனர் என மறைந்திருந்து கவனித்து கொண்டிருந்தார். அந்த கல் பாதையை அடைத்து கொண்டிருந்தது. சிலர் அதை பார்த்து விட்டு, 'இந்த கல்லை எவன் வழியில் போட்டு விட்டு சென்றானோ' என்று திட்ட துவங்கினர். சிலர் அரசாங்கம் சரியாய் செயல்படவில்லை என்று குறை கூறினார்கள். சிலர் வரிப்பணம் கட்டுவது தண்டம் என்றனர். பலரும் பலவிதமாக சொல்லி கொண்டு அந்த கல்லை தாண்டி சென்றனர்.

அனைத்தையும் நாட்டின் ராஜா கவனித்து கொண்டுதான் இருந்தார். அந்த வழியே வந்த ஒரு ஏழை விவசாயி அந்த கல்லை பார்த்து, 'இது அநேகருக்கு தடையாக இருக்கிறது' என்று சொல்லி அந்த கல்லை கஷ்டப்பட்டு புரட்டி தள்ளினார். என்ன ஆச்சரியம்! அந்த கல்லின் கீழ் அரசர் வைத்திருந்த தங்க நாணயங்கள் இருந்தன. அதன் பக்கத்தில் ஒரு தாளில், 'இந்த கல்லை யார் புரட்டி தள்ளி அப்புறப்படுத்துகிறார்களோ அவர்களுக்கே சொந்தம்' என்று எழுதியிருந்தது. அந்த விவசாயியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இன்றும் அநேகர் நம் வாழ்வின் இடையில் திடீரென்று தடைக்கற்கள் போல் வரும் பாடுகளை கண்டு சோர்ந்து விடுகிறோம். சிலர் நான் ஜெபித்து கர்த்தருக்கு பிரியமாய் வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று தங்களை தாங்களே நொந்து கொள்கின்றனர். இந்த பாடு எப்பொழுதுதான் என்னை விட்டு நீங்கும் என்று முறுமுறுக்கவும் செய்கிறோம். ஆனால் நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தம் பாடுபடவும் நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து நமக்காக உயிரையே கொடுத்திருப்பாரானால் அவருக்காய் நாம் பாடுகளை பொறுமையாய் சகிப்பது ஒன்றும் பிரமாதமல்லவே! இம்மைக்குரிய ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே நாம் அவரை தேடுவோமானால் அது சுயநலமான தன்மை என்று தானே சொல்லமுடியும்.

பிரச்சனைகளும் போராட்டங்களும் இருந்தும் அவரை உண்மையாய் பின்பற்றுவதே கலப்படமற்ற பக்தியாகும். இதை தான் தாவீது செய்தார். அதனால் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவராக கருத்பபட்டார். யோபு தனது பாடுகளின் மத்தியிலே புலம்பினாலும் இறுதியாக அவர் தான் போகும் வழியை கர்த்தர் அறிவார் என்று கூறி அமைதியாகிறார். பாடுகளை பொறுமையாய் சகித்த அவர் இரட்டிப்பான நன்மைகளை பெற்றார்.

பிரியமானவர்களே, நாம் பாடுகளை பொறுமையோடு சகிப்போமானால் அதற்கு பின் ஒரு பெரிய ஆசீர்வாதம் உண்டென்பதை மறக்க வேண்டாம். பாடுகளை நாம் புறக்கணிக்கும்போது பெரும் ஆசீர்வாதத்தையும் நாம் இழந்து போவோம். நமக்கு வரும் துன்பங்களை நாம் எப்படி சகிக்கிறோம் என்று கர்த்தர் கவனித்து கொண்டு தான் இருக்கிறார். நாம் வடிக்கும் கண்ணீரையும் கணக்கில் தான் வைத்திருக்கிறார். ஆகவே மனம் சோர்ந்து போகாதிருங்கள். ஏற்ற காலத்தில் எல்லாவற்றையும் கர்த்தர் நன்மையாக மாற்றி தருவார். ஆமென் அல்லேலூயா!

கண்ணீரை காண்கிறார் – நம்
கதறலை கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார்
நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஜெபம்
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, எங்களுக்கு வரும் பாடுகள் மத்தியிலும் நீர் பெரியவராயிருந்து, அவைகளை எல்லாம் மாற்றி, எங்களுக்கு நன்மை செய்கிற தேவனாயிருக்கிறீரே உமக்கு நன்றி. கண்ணை உண்டாக்கினவர் காணாரோ, காதை உண்டாக்கினவர் கேளாரோ என்று வேதம் சொல்லுகிறபடி, எங்களது பாடுகளை கண்டும், நாங்கள் கதறும் சத்தத்தை கேட்டும் இருக்கிற எங்கள் தெய்வமே, விடுதலையை தருவீராக. எங்கள் பாடுகளை மாற்றி போடுவீராக. பாடுகளுக்கு பின் எங்களுக்கு நீர் தரும் பெரிய ஆசீர்வாதத்திற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
ஜெர்மனி (Germany) தேசத்திற்காக ஜெபிப்போமா? germany

1) கர்த்தருடைய பெரிதான கிருபையால், பெர்லின் சுவரை உடைத்தெறிந்து, அதை போலவே கம்யூனிஸ கொள்கையிலிருந்து விடுபட்ட ஜெர்மனி, தற்போது கிறிஸ்தவ நாடாக இருந்தாலும், உலக ஆடம்பரங்களிலும், நாகரீகத்திலும் சிக்கி, கர்த்தரை மறந்து ஜீவிக்கிறதாக காணப்படுகிறது. இந்த தேசம், கர்த்தரை அறிகிற அறிவினால் மீண்டும் நிரப்பப்படவும், சபைகள் செழித்தோங்கவும் ஜெபிப்போம்.


2) இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் இரட்சிக்கப்படும்படியாக ஜெபிப்போம்.


3) இந்த கடைசி காலங்களில் கர்த்தரே தேவன் என்று உணர்ந்து, அவருக்குள் வளர ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment