Friday, 11 February 2011

யார் பிரிக்க முடியும் நாதா


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 27-ம் தேதி - புதன் கிழமை
யார் பிரிக்க முடியும் நாதா
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
'பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே'. - (எண்ணாகமம் 31:16).

கர்த்தர் மோசேயிடம் மீதியானியர் யாவரையும் பழிவாங்கும்படி கூறினபோது, இஸ்ரவேலர் மீதியானிய புருஷர் யாவரையும் சிறைபிடித்து கொன்று போட்டார்கள். ஆனால், ஸ்திரீகளையோ விட்டுவிட்டார்கள். 'அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு, அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே'(எண்ணாகமம் 31:14-16) என்று கூறினதாக வாசிக்கிறோம்.

பாலாக் என்னும் மோவாபிய ராஜா பிலேயாம் என்னும் தீர்க்கதரிசியினிடம், இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளியிலே வந்து பாளையமிறங்கியிருக்கிறார்கள். இவர்களை இப்படியே விட்டுவிட்டால் 'மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும்' (எண்ணாகமம் 22:4) என்று அவர்களை குறித்து பயந்து அவர்களை சபிக்கும்படி ஆளனுப்பினான். இரண்டு முறை அவர்கள் வந்து, பிலேயாம் அவர்களுடன் சென்று இஸ்ரவேலரை சபிக்க வாயை திறந்த போது, கர்த்தர் அவன் வாயில் வாக்கு அருளி, அவர்களை சபிக்காமல், ஆசீர்வதிக்கவே செய்தான். அவர்களை அவனால் சபிக்கவே முடியவில்லை.

ஆகையால் பிலேயாம், தந்திர உபாயம் செய்து, வேறு எந்தபடியும் அவர்களை அழிக்க வழியில்லை என்று கண்டு, மிகவும் தந்திரமாக, இஸ்ரவேலரை மோவாபிய ஸ்திரீகளுடன், வேசித்தனம் செய்யும்படி, அவர்களுடனே அவன் அந்த ஸ்திரீகளை கலந்து விட ஆலோசனை கொடுத்தான். அதன்படி, 'ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்' - (எண்ணாகமம் 25:1-3).அதுவரை கர்த்தரையே சார்ந்து வாழ்ந்த ஜனங்கள், அந்த மோவாபிய பெண்களுடன் சேர்ந்து, பாகாலை வழிபட ஆரம்பித்தார்கள். ஆகையால் கர்த்தருடைய கோபம் மூண்டு, ஜனங்களுக்குள் வாதை ஏற்பட்டு, அதனால் 24,000 பேர் ஒரே நாளில் மடிந்து போனார்கள். இந்த பிலேயாமின் துராலோசனையை குறித்து, இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷத்தின் அதிகாரங்களில் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 'ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு'- (வெளிப்படுத்தின விசேஷம் 2:14).

நாமும் கூட பாவத்திற்கு விரோதமாக போராடுகையில், சில காரியங்களில நாமும் மெத்தனமாக இருந்திருக்கிறோமில்லையா? சே, இந்த நட்பு நம்மை ஒன்றும் பாதிக்காது, இது நம்மை கர்த்தரிடமிருந்து பிரிக்காது என்று நினைத்து விட்டிருக்கிறோமில்லையா? பாவத்திற்கு விரோதமாக நாம் எது நம்மை பாதிக்காது என்று நினைத்திருக்கிறோமோ அதுவே நம்மை கர்த்தரிடமிருந்து பிரித்து விடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இஸ்ரவேலர் மோவாபிய ஸ்திரீகள் தங்களிடம் வந்து அவர்களை வசீகரித்த போது, அவர்கள் அதை பெரிதாக நினைக்கவில்லை, ஆனால் அது அவர்களை பாவம் செய்ய வைத்தது மட்டுமல்ல, அவர்களை வேறு கடவுள்களை வணங்கவும் வைத்தது. தேவன் அருவருக்கிற காரியங்களை செய்ய வைத்தது. இத்தகைய காரியங்களுக்கு நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மற்ற மதத்தினரோடு நாம் நட்பு கொண்டிருப்பது தவறல்ல, ஆனால் அந்த நட்பு நம்மை அவர்களோடு சேர்ந்து, பாவம் செய்ய வைக்கவோ, அல்லது, தேவன் விரும்பாத மற்ற காரியங்களில் நம்மை ஈடுபடுத்துமானால், அப்படிப்பட்ட நட்புகளுக்கு நாம் விலகியிருப்பது மிகவும் முக்கியம்.

தேவனால் தெரிந்து கொண்ட மக்கள் மேல், பிலேயாம் சாபத்தை கூற முயன்ற போது, அவனால் முடியவில்லை, ஏனெனில் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்பதை அவன் கண்டு கொணடான். ஆகவே கர்த்தருடைய பிள்ளைகளை யாரும் சபிக்க முடியாது. அவர்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம். ஆனால் நம்மை பாவ காரியங்களில் ஈடுபட வைப்பதன் மூலம் சாத்தான் கர்த்தருடைய கோபத்திற்கும், வாதைக்கும் நம்மை இலக்காக்கிவிட முடியும். ஆகவே கர்த்தரை விட்டு பிரிய வைக்கும் எந்த காரியத்தையும் நாம் நம் வாழ்வில் அனுமதிக்கவே கூடாது. 'அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது' (2 கொரிந்தியர் 6:14-15). ஆமென் அல்லேலூயா!

நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா


ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, தேவையற்ற, எங்களை பாவத்திற்குட்படுத்துகிற நட்போ அல்லது வேறு எந்த காரியமோ எங்களுக்குள் காணப்பட்டால், அதை நாங்கள் உடனே விட்டுவிட கிருபை செய்யும். கிறிஸ்துவின் அன்பிலிருந்து எந்த காரியமும் எந்த நபரும் எங்களை பிரித்து விடாதபடி, நாங்கள் உம்மையே பற்றி கொள்ள கிருபை தாரும். அந்நிய நுகமும், அந்நிய காரியங்களும் எங்கள் வாழ்க்கையில் காணப்படாதபடி எங்களை கழுவி சுத்திகரித்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
மாலத்தீவிற்காக - Male Island - ஜெபிப்போமா?

இயற்கை எழில் வாய்ந்த, கடலினால் சூழப்பட்டுள்ள இந்த தீவு ஒரு இஸ்லாமிய தீவாகும். இந்த தீவில் வேறு எந்த மதத்திற்கும் அனுமதியில்லை. இங்கு அநேக இலங்கை மக்கள் வந்து குடியேறி இருக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு.


1) இந்த தீவில் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். 


2) இந்த தீவில் உள்ள மக்கள் ஆவிகள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும், இரவு ஒனபது மணிக்கு மேல் யாரும் வெளியே வரமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய கிறிஸ்து இவர்களுக்குள் பிரகாசிக்கவும், இந்த தீவில் உள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அறிந்து இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment