Friday, 11 February 2011

கிரியைகளினாலே கர்த்தரை மறுதலித்தல்


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 29-ம் தேதி - வெள்ளி கிழமை
கிரியைகளினாலே கர்த்தரை மறுதலித்தல்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்னுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள். - (தீத்து 1:16).

கிறிஸ்தவர்கள் முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அதனால் பள்ளியிலோ, கல்லூரிகளிலோ நல்ல கோர்ஸ் கிடைப்பது அரிதான காரியமாயிருக்கிறது. ஒரு தாயார் தனது மகனை ஒரு சிறந்த பள்ளியில் 11ம் வகுப்பு சேர்க்க சென்ற போது, கிறிஸ்தவர் என்ற வார்த்தைக்கு பதிலாக வேறு மதத்தை குறிப்பிட்டால் உங்கள் மகனுக்கு சீட் கிடைக்கும் என்று ஒருவர் கூறினார். 'ஆண்டவரே உம்மை மறுதலிக்காதபடி என்னை காத்து கொள்ளும்' என ஜெபித்து விட்டு வேறு பள்ளியில் சேர்த்து விட்டார் அந்த தாயார். ஒரு மாதம் கழித்து மீண்டுமாக முதலில் கேட்ட பள்ளியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. 'நீங்கள் கேட்ட குரூப்பில் ஒரு இடமுள்ளது. உங்கள் மகனை சேருங்கள்' என்று. அன்றே போய் அந்த பள்ளியில் சேர்த்தனர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவன் எவ்வளவு உண்மையுள்ளவர். ஆகவே அவர் நம்மிடமும் அதே உண்மையை எதிர்ப்பார்க்கிறார்.

தாவீது தேவனிடம் இவ்வாறு முறையிடுகிறார், 'இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்று போகிறான்' (சங்கீதம் 12:1) மீகா தீர்க்கதரிசியும் இவ்வாறே புலம்புகிறார். 'தேசத்தில் பக்தியுள்ளவன் அற்று போனான். மனுஷரில் செம்மையானவன் இல்லை' (மீகா 7:2). ஆம் நமது பக்தியும், வைராக்கியமும் வெயிலை கண்ட பனியை போலத்தான் அநேக நேரங்களில் இருக்கிறது. அரசின் சலுகைகைள பார்த்தால் பக்தி வைராக்கியத்தை அடகு வைத்து விடுகிறோம். அவரை மிக எளிதாக மறுதலித்து விடுகிறோம். ' நான் மனதில் இயேசுவைத்தான் நினைத்து கொண்டிருக்கிறேன். சான்றிதழில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என கூறினாலும், தேவ நாமம் மகிமைப்படுமா? தாவீதை குறித்து அபிமெலேக் சவுல் ராஜாவிடம் கூறும்போது, 'உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல.. உம்முடைய வீட்டிலே உண்மையுள்ளவன் யார்?' அதே போல மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராயிருந்தார். அதனால் தான் திக்குவாயும் மந்த நாவுமுள்ளவராயிருந்தாலும் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் தலைவனாக உயர்த்தப்பட்டார். ஆம் தேவனுக்கு உண்மையாயிருந்த ஒவ்வொருவரையும் தேவன் உயர்த்தினார்.

பிரியமானவர்களே, நீங்கள் கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? அல்லது அவரை மறுதலிக்கிறீர்களா? நான் சான்றிதழ்களில் கிறிஸ்தவன் என்பதை மாற்றவில்லை, ஆகவே நான் கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை' என்று நீங்க்ள சொல்லலாம். ஆனால் உங்களது செயலால் தேவனை மறுதலியாமல் இருக்கிறீர்களா? டிக்கட் எடுக்க மறந்த கண்டக்டரிடம் நீங்களே போய் டிக்கட் எடுத்ததுண்டா? மீதி பணத்தை அதிகமாக தந்த கடைக்காரரிடம் அதை திருப்பி கொடுத்ததுண்டா? நமது சிறு சிறு செயலில் கூட தேவனை மறுதலிக்காமல் இருப்போம்.

சிலர் வாலிப வயதில் கர்த்தருக்காக மிகவும் பக்தி வைராக்கியமாக இருந்திருப்பார்கள். உயிரை கொடுக்க சொன்னாலும் கூட கொடுத்திருப்பார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது, கர்த்தர் மேல் இருந்த வைராக்கியம் போய், தகப்பனும் தாயும் காட்டின, கர்த்தரை அறிந்திராத பெண்ணை அல்லது பையனை திருமணம் செய்து, கர்த்தரை மறுதலித்து இப்போது எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டின நீங்கள் ஏன் திருமண காரியத்தில் மட்டும் கர்த்தரை விட்டு கொடுத்தீர்கள்? அப்படிப்பட்ட வாலிபர்களை பார்க்கும்போது, வேதனையினால் கண்களில் கண்ணீர்தான் வருகிறது. 'மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்' (மத்தேயு 10:33) என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறாரே. இவர்கள் மீண்டும் கர்த்தரிடம் திரும்பினால் எத்தனை நலமாயிருக்கும்!

ஆதி அப்போஸ்தலர்களிலிருந்து இன்று வரை எத்தனையோ பரிசுத்தவான்கள் தேவனுக்காக தலை வெட்டப்பட்டும், எண்ணெய் சட்டியிலே போட்டு பொரித்தெடுக்கபட்டும் பல்வேறு சித்திரவதை அனுபவித்த போதிலும் அவரை மறுதலியாமல் நின்றனர். இன்று அற்ப உலக காரியத்திற்காக அவரை மறுதலிக்க நீங்கள் துணிந்தது ஏன்? பேதுருவை போல நீங்கள் மறுதலித்திருப்பீர்களானால் மனங்கசந்து அழுது மீண்டும் அவரண்டை திரும்புங்கள். கர்த்தர் உங்களை ஏற்று கொள்ள தயவு பெருத்தவராகவே இருக்கிறார். ஆமென் அல்லேலூயா!

உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே

நான் பாவம் செய்தேன்
உம்மை நோக செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே (2)
இயேசுவே என் தெய்வமே
என்மேல் மனமிரங்கும்


ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். தகப்பனே, நாங்கள் எந்த சிறு காரியத்திலோ, பெரிய காரியத்திலோ நாங்கள் அறிந்தும் அறியாமலும் உம்மை மறுததலித்திருந்தால் எங்களை மன்னித்தருளும் தகப்பனே. எங்கள மேல் அன்பு கூர்ந்து எங்களுக்காக தமது ஜீவனையே கொடுத்த கிறிஸ்துவை நாங்கள் மறுதலித்து ஜீவிப்பது எப்படி ஐயா, எங்களை மன்னித்தருளும். எங்களுக்கு நஷ்டம் வந்தாலும் எந்த விதத்திலும் நாங்கள் உம்மை மறுதலிக்காதபடி எங்களை காத்து கொள்ள கிருபை செய்யும். ஏங்கள் வாழ்க்கையை மீண்டுமாய் எங்கள் தேவனின் கரங்களில் அர்ப்பணிக்கிறோம். தயவாய் ஏற்று எங்களை மன்னித்து, மீண்டும் இரட்சிப்பின் சந்தோஷத்தை எங்களுக்கு தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
போர்ச்சுக்கல் தேசத்திற்காக - Portugal - ஜெபிப்போமா?

1) ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்து அந்த தேசத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2) இந்த தேசத்தில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனை கொடுக்க ஜெபிப்போம்.


3) இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் சாட்சியை காத்து கொள்ள ஜெபிப்போம்.
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment