Wednesday, 6 October 2010

பாவ மன்னிப்பின் நிச்சயம்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 04-ம் தேதி - திங்கள் கிழமை
பாவ மன்னிப்பின் நிச்சயம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். - (அப்பொஸ்தலர் 10:43).

ஒரு வாலிபன் ஒரு கனவு கண்டான். அதில் அவன் ஒரு பிரகாசமான ஒரு இடத்தை கண்டு வியந்தான் பார்க்கும் எவரையும் தன் பக்கம் ஈர்க்கும் அளவிற்கு அது மகிமையாய் இருந்தது. அங்கிருந்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. உடனே இவனுக்கு தானும் அந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. உடனே அதை நோக்கி ஓட ஆரம்பித்தான். மிக வேகமாக ஓடினான். களைப்பை பொருட்படுத்தாமல், ஓடினான். பாடல் சத்தமும் கீத வாத்தியங்களின் முழக்கமும் அவனது ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது, திடீரென்று அந்த வாலிபனுக்கும் பிரகாசமான இடத்திற்கும் நடுவாக ஒரு சுவர் வேகமாக எழும்பி கொண்டிருந்தது. அவன் அந்த சுவரை எப்படியாகிலும் தாண்டி விடலாம் அல்லது அந்த சுவர் மேலே வரும் முன் ஓடி விடலாம் என நினைத்து முன்னிலும் சற்று வேகமாக் ஓடினான். ஆனால் அந்த சுவர் மிக வேகமாக எழும்பி அந்த பிரகாசமான இடத்தையே மறைத்து விட்டது.

வாலிபன் என்ன செய்வது என்று அறியாமல் 'ஓ' வென்று அழுதான். அச்சுவரில் முட்டி முட்டி அழுதான். அப்போது அந்த சுவரில் அநேக சொற்றொடர்கள் எழுதப்படட்டிருப்பதை கவனித்தான். அதை உற்று பார்த்த போது, அதில் அவன் சிறுவயதிலிருந்த செய்த பாவங்கள், பேசிய பொய்கள், களவுகள் பொறிக்கப்பட்டிருந்தன. அவன் சிந்தையில் கற்பனையில் நினைத்த பாவக் காரியங்களும் இதில் எழுதப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தபோனான். 'ஐயோ நான் இப்பாவத்தையெல்லாம் செய்யவில்லையே, மனதிற்குள் நினைத்து பார்த்து தானே மகிழ்ந்தேன்' என கதறினான். அவற்றை கையினால் அழித்து பார்த்தான். ஆனால் அவை அழிக்க முடியாதபடி பொறிக்கப்பட்டிருப்பதை எண்ணி குற்ற உணர்வினால் கூனி குறுகினான். தனது பாவத்தை யாரும் வாசித்து விடுவார்களோ என அங்கலாய்தான். அந்த நொடிப்பொழுதில் அவன் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றிற்று. 'எவ்வளவு கொடிய பாவத்தையும் இயேசு கிறிஸ்துவால் மன்னிக்க முடியும்' என்று. உடனே அந்த இடத்தில் முழங்கால் படியிட்டு, தன் பாவங்களை மன்னிக்கும்படி கண்ணீரோடு ஜெபித்தான் மறு கணமே வானத்திலிருந்து ஒரு சொட்டு இரத்தம் இற்ங்கி வந்து அந்த சுவரில் மேல் விழுந்தது, அந்த நொடி பொழுதில் தானே இந்த சுவர் கரைந்து போனது, அந்த இடமும் தெரியவில்லை. அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை, அப்படியே விழித்து கொண்டான்.

பிரியமானவர்களே, நன்மைகள் பலவற்றை நாம் அனுபவிக்க முடியாதபடி நமது பாவங்கள் தடையாய் அமைகின்றன. அநேக ஆசீர்வாதங்களை நாம் இழந்து விடுகிறோம். ஆம், பாவம் நமது சந்தோஷத்தை, சமாதானத்தை தடுத்து விடுகிறது. குற்ற உணர்வற்ற மகிழ்ச்சியான வாழ்விற்கு பாவம் தடையாக வந்து நிற்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பாவத்தினால் பரலோக இன்பத்தை நாம் அடைய முடியாது.

நாளைய தினம் நம்முடையதல்ல, ஆகவே இன்றே உங்களது பாவத்தை தேவ சமுகத்தில் அறிக்கை செய்து, பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்ளுங்கள். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது என்ற நிச்சயத்தை பெற்று கொண்டவர்களே இவ்வுலகிலே பாக்கியவான்கள். உலகின் பெரும் பணக்காரர்களை காட்டிலும், உலக அழகிகளை காட்டிலும், பெரும் அரசியல் தலைவர்களை காட்டிலும் நாமே விசேஷித்தவர்கள். தேவனுடைய சொந்த பிள்ளைகள் என முத்திரையும் பெற்று விடுவோம்.

பாவ மன்னிப்பின் நிச்சயயத்தை பெற்று கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓரிடம் நீ பெற வேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத்தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார்

இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசுராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை


ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தி வருகிற நல்ல தகப்பனே, எங்கள் பாவங்களை மன்னித்து, புது வாழ்வு தருகிறவரே, எங்கள் பாவங்களே உமக்கும் எங்களுக்கும் இடையில் பிரிவினை உண்டாக்குகிற படியால் அப்பா என்னுடைய பாவங்கள் ஒரு சுவரை போல இருந்து, உம்முடைய சமுகத்திலிருந்தும், பரலோக ஆசீர்வாதங்களுக்கும் தடையாக இராதபடி, என்னை கழுவி சுத்திகரித்தருளும். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி என்னை சுத்திகரிக்க வல்லமையுள்ளதாய் இருக்கிறபடியால், தயவாய் என்னுடைய பாவங்களை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள இரத்தத்தால் கழுவி சுத்திகரித்தருளும். என்னை கழுவி உம்முடைய பிள்ளையாக மாற்றியதற்காக உமக்கு கோடி நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
தேவனுடைய நாடாகிய இஸ்ரவேலுக்காக - Israel - ஜெபிப்போமா?

1. இஸ்ரவேல் மக்கள் மேசியாவாகிய கிறிஸ்துவை தங்கள் தேவனாக கண்டு கொள்ளத்தக்கதாக ஜெபிப்போம்.

2. எருசலேமே உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்கள் என்ற வார்த்தையின்படி நாம் இஸ்ரவேலை நேசிக்கவும் ஜெபிப்போம்.


3. அங்கு பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்படியாகவும் ஜெபிப்போம்.


4. இஸ்ரவேலுக்கு எதிராக உருவாகும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்படியாகவும், இஸ்ரவேலர் சமாதானமாய் தங்கள் தேசத்தில் வாழும்படியாகவும் ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment