Wednesday, 6 October 2010

உபத்திரவத்திலும் உன்னதரின் கிருபை

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 06-ம் தேதி - புதன் கிழமை
உபத்திரவத்திலும் உன்னதரின் கிருபை
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
..என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். .அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக வேலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். - (1 பேதுரு 1:6-7)

ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டு பூச்சி புழுவை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டை கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டு பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை. பல மணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியே வர வேண்டும். ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம் பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே ஒரு கூரிய பிளேடினால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டு பூச்சியை சுலபமாக வெளியே எடுத்து விட்டான். ஆனால் அந்த பட்டு பூச்சியினால பற்க்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்து விட்டது. முடிவில் அதை எறும்புகள் இழுத்து சென்றன.

அச்சிறுவனின் தகப்பன் சொன்னார், 'மகனே அந்த பூச்சி கூட்டிலிருந்து வெளிவர பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை நார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளிவர பாடுபடுவதால் அதன் உடல் வற்றி எடை குறைந்து பறந்து செல்ல வசதியாக இருக்கும். அது சகல முயற்சியும் செய்து தானாகவே வெளியே வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சியடைந்திருக்குமே! நீயோ அதன் வாழ்க்கையையே கெடுத்து விட்டாயே' என்றார்.

இதுபோலத்தான், ஒரு நோயாளியின் சரீரத்தில் எந்த ஒரு வருத்தத்தையும் உருவாக்ககூடாது என ஒரு மருத்துவர் நினைத்தால் அந்த நோயாளி ஒரு போதும் சுகமடைய முடியாது. ஊசிகளையும், மருந்துகளையும் எடுத்து கொள்வதும், உரிய அறுவை சிகிச்சைகளை செய்வதும் நோயாளியை வருத்தமடையவே செய்யும். இருப்பினும் சுகமடைய வேண்டுமானால் அவற்றை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அது போல நாம் என் வாழ்வில் ஒரு சிறு கஷ்டமும் வரக்கூடாது என்று எண்ணினால், நாம் ஒரு போதும் ஆவிக்குரிய வாழ்வில் பூரணமடையவே முடியாது. தேவனுடைய திட்டமும் நம் வாழ்வில் நிறைவேறவே முடியாது. பிறருக்கு பயனுள்ள ஒரு வாழ்க்கையும் நாம் வாழ முடியாது. ஆகவே நாம் பாடுகளை பொறுமையாய் சகித்தும், துன்பத்தில் துவண்டு விடாமலும், பொறுமையாய் தேவனிடமிருந்து ஆவிக்குரிய பாடங்களை கற்று கொள்ள பிரயாசப்பட வேண்டும்.

வேதத்திலே, சாலமோன் ராஜா சகல சம்பூரணத்திலும் திளைத்து வாழ்ந்தார். எந்த பாடுகளுமற்ற பஞ்சு மெத்தை வாழ்வே வாழ்ந்தார். ஆனால் இன்று நாம் பின்பற்றக்கூடிய எந்த குணநலன்களும் அவரிடம் காணப்படவில்லை. ஆனால் தாவீதின் வாழ்விலே தடுக்கி விழுந்தால் துன்பம், எப்போதும் தன்னை விரட்டும் ஒரு கும்பல், அந்த துன்ப பெருக்கிலே தேவனை உறுதியாய் சார்ந்து கொண்டார். இயேசுவை 'தாவீதின் குமாரன்' என அழைக்கும் பாக்கியத்தை பெற்றார்.

பிரியமானவர்களே, 'தேவனே பாடுகளையும், துன்பங்களையும் தாரும்' என நாம் ஜெபிக்க் வேண்டியதல்லை, ஆனால் தேவன் பாடுகளின் வழியாய் நம்மை நடத்தும்போது பொறுமையாய் கற்று கொள்வோம். அச்சூழ்நிலைகளே நம்மில் பொறுமை, சாந்தம் நற்குணத்தை உருவாக்கும். கிறிஸ்துவுக்குள் நம்மை பூரணப்பட்டவர்களாக நிறுத்தும். இயேசுகிறிஸ்து பாடுகளே இல்லாத ஒரு வாழ்க்கையை நமக்கு வாக்களிக்கவில்லை, அவர் சொன்னார், 'உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்' என்றார் (யோவான் 16:33 பின்பாகம்). அவர் உலகத்தை ஜெயித்தபடியால், அவருடைய பிள்ளைகளாகிய நாமும் உலகத்தை ஜெயிக்கிறவர்களாக, உபத்திரவத்தின் ஊடே வெற்றி கொள்கிறவர்களாக மாறமுடியும். உலகத்தின் மக்கள் துன்பம் வரும் நேரத்தில் சோர்ந்து போவார்கள், ஆனால் நாமோ, துன்பங்களையே ஏணிப்படிகளாக வைத்து, ஜெயத்தின் மேல் ஜெயம் பெற்று முன்னேறுவோம். ஏனெனில் நமக்கு முன்பாக நம் இயேசு அந்த பாதையில் நடந்து சென்று நமக்கு வழியை காட்டி விட்டபடியால், நாம் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம். ஆமென் அல்லேலூயா!

துன்பமா துயரமா அது தண்ணீர்பட்ட உடை போன்றதம்மா
காற்றடிச்சா வெயில் வந்தா
காய்ந்து போகும் கலங்காதே

இயேசுதான் நீதியின் கதிரவன்
உனக்காக உதயமானார் உலகத்திலே
நம்பிவா வெளிச்சம் தேடிவா
உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது

உன் துக்கங்கள் இயேசு சுமந்து கொண்டார்
உன் பிணிகள் எல்லாம் ஏற்று கொண்டார்
நீ சுமக்க இனி தேவையில்லை
ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது



ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலேயும் எங்களுக்கு துணையாக இருப்பவரே உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் பாடுகளை படும்போது, உபத்திரவங்கள் எங்களுக்கு பொறுமையையும், சாந்தத்தையும், எங்களுக்குள் உருவாக்குகிறபடியால், நாங்கள் சோர்ந்து போகாதபடி காத்து கொள்ளும். எங்களை உருவாக்கும் அந்த உபத்திரவங்களிலேயும் நாங்கள் உம்மையே சார்ந்து ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் உபத்திரவங்களில் எங்களுக்கு உதவி செய்யும் தகப்பனே, நாங்கள் மனம் உடைந்து போய் விடாதபடிக்கு, எங்களை பெலத்தினால் தாங்குவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
நியூசிலாந்திற்காக - New Zealand - ஜெபிப்போமா?

1. கிவி என்னும் பறவை இனம் வாழும் இந்த தேசத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் பேர் இருந்தாலும் வேதத்தை வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டாலும் கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிப்பவர்கள் மிகவும் குறைவு. இவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம்.

2. அதுமட்டுமல்லாமல் அசரசாங்கமே இந்தோனேஷியாவிலிருந்து இஸ்லாமியரை அழைத்து, இஸ்லாமிய மதத்தை பரப்ப சொல்லியிருப்பதால், இங்கு இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது. இந்த தேசத்தின் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படும்படியாக ஜெபிப்போம்.

3. அல்பேனியாவிலிருந்து வந்த அகதிகளும் இங்கு இருப்பதால், அவர்களையும் தேவன் சந்திக்கும்படியாக ஜெபிப்போம்.

4. இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் சாட்சிகளை காத்து கொள்ளவும், உண்மையாய் கர்த்தரை தொழுது கொள்ளவும் ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment