Wednesday, 5 January 2011

எஜமானருடைய தொடுதல்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 21-ம் தேதி - வியாழக் கிழமை
எஜமானருடைய தொடுதல்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - சங்கீதம் 118:22-23.

ஒரு இடத்தில், ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (Violin) எடுத்து, ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக, தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் எல்லாம் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது. ஏலம் விடுபவர் நினைத்தார், இதைப் போய் நான் ஏலம் விடுகிறேனே, யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம் இதற்காக வீணாகப் போவதுதான் மிச்சம் என்று நினைத்தவராக, அதை ஏலம் விடுவதற்க்கு, ஒரு டாலர், இரண்டு டாலர் என்று ஆரம்பித்தார். ஓருவர் மூன்று டாலர் என்றுக் கூறவும், மூன்று டாலர் ஒரு தரம், மூன்று டாலர் இரண்டு தரம், மூன்று டாலர் மூன்று தரம் என்று கூறி முடிப்பதற்குள், ஒரு சத்தம், ‘பொறுங்கள்’ என்றுக் கேட்டது. ஒரு உயரமான மனிதர், முன்பாக வந்துக் கொண்டிருந்தார், அவர் வந்து, அந்த வயலினைக் (Violin) கையில் எடுத்து, அதைத் துடைத்து, தொய்ந்துப போயிருந்த அதன் நரம்புகளை சரியாக டியூன் பண்ணி, அதை மெருகேற்றினார். இப்போது அந்த வயலின் (Violin) புதுப் பொலிவோடு ஜொலித்தது. அதிலே அழகான ஒருப் பாடலை இசைக்க ஆரம்பித்தார்.

பாடல் நின்றவுடன், ஏலம் விடுபவர், மெதுவான சத்தத்தில், அந்த வயலினின் (Violin) அருமையை உணர்ந்தவராக, இப்போது, இந்த வயலின் (Violin) 1000 டாலர் ஒரு தரம் என்று கூற ஆரம்பித்தார். ஒருவர் 2000 என்றுக் கூற, இன்னொருவர், 3000 என்று போட்டியிட ஆரம்பித்தனர். கடைசியாக 4000த்தில் அதன் ஏலம் முடிந்தது. கூடியிருந்த மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ‘2 டாலருக்குப் விலைப் போன அந்த வயலின் இப்போது 4000 டாலருக்கு எப்படி போயிற்று’ என்று அந்த ஏலம் விடுபவரை கேட்டபோது அவர் சொன்னார், ‘அதுதான் எஜமானனுடைய கைகளின் தொடுதல்’, (The Touch of the Master’s Hand) என்று.

அன்பானவர்களே, ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம், ‘என்னால் என்ன பிரயோஜனம்?’ பாவத்திலும், துன்பத்திலும் அடிபட்டு, பொலிவிழந்து இருக்கிற என்னால் என்ன பிரயோஜனம்? என்று நினைக்கிறீர்களா? எஜமானர் உங்களை தொடும்போது நீங்கள் ஜொலிக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கு தெரியுமா? ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். - (1கொரிந்தியர் 1:27-28).

சமீபத்தில் ஒரு அருமையான ஊழியர் எங்கள் சபைக்கு வந்திருந்தார். அவர் இந்துக் குடும்பத்தை சேர்ந்தவராக, ஏழு தலைமுறையாக மந்திரவாதத்தில் ஈடுபட்டு, தன் குடும்பத்தில் அநேகர் பைத்தியங்களாக திரிந்து, வாழ்க்கையில் சந்தோஷத்தைக் காணாதவராக, அவருக்கு பிறந்த ஆறு குழந்தைகள் அடுத்தடுத்து, மரித்துப் போய் அவரும் அவருடைய மனைவியும் தற்கொலைதான் முடிவு என்று முடிவுசெய்து அதற்கு ஆயத்தம் செய்தபோது, கர்த்தர் “மகனே” என்று அவரை அழைத்து, தம்மை வெளிப்படுத்தி, அவரை தமது கனமான ஊழியத்திற்கு தெரிந்துக் கொண்டார். அவர் செய்த ஒவ்வொரு பிரசங்கங்களும் முத்தானவை. வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - சங்கீதம் 118:22-23).

ஆம் பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஒரு பயங்கர மந்திரவாதியை கர்த்தர் எடுத்து, அவருக்கென்று உபயோகிக்க கூடுமானால் உங்களை உபயோகிப்பது அவருக்கு லேசான காரியம்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள் என்பது கர்த்தருக்குத் தெரியும். லேகியோன் பிசாசு பிடித்திருந்த ஒருவனுக்காக இயேசுகிறிஸ்து கலிலேயாவைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்கு வந்து, அவனை சுகப்படுத்தி, அவனை கிறிஸ்துவின் அற்புதங்களை சொல்லும் ஊழியக்காரனாக மாற்றினார், அவர் ஒரு ஆத்துமாவிற்காக கரிசனையுள்ள தேவன். நான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லதவன், என்னால் கர்த்தருக்கு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? அந்த லேகியொன் பிசாசு பிடித்திருந்த ஒருவனால் ஒரு பட்டணத்தை ஆதாயப்படுத்த முடியுமானால்(லூக்கா 8:39-40) எல்லா ஞானத்தோடும் உங்களை உருவாக்கின கர்த்தருக்கு உங்களால் எதையும் செய்ய முடியும். இயேசுகிறிஸ்துவுடன் உரையாடிய சமாரிய ஸ்திரீ வேறு ஒன்றும் செய்யவில்லை. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி; நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள் (யோவான் 4:28,29,39). அவள் போய் மற்றவர்களுக்கு ‘வந்துப் பாருங்கள்’ என்று மட்டுமே கூறினாள். அதைப் போல உங்கள் சபைக்கு மற்றவர்களை வந்துப் பாருங்கள் என்று நீங்கள் அழைக்கலாம். அவர்கள் வந்து, ஜீவனுள்ள தேவனை அவர்களே அறிந்துக் கொள்வார்கள்.

அந்த பழைய வயலின் (Violin) எஜமானனுடைய கைகளில் பட்டவுடன் எப்படி ஜொலித்து ஒரு பிரயோஜனமுள்ள ஒரு இசைக்கருவியாக மாறினதோ அதைப்போல, நம் தேவனின் கரத்தில் நாம் நம்மை அர்பணிக்கும் போது, தேவனே என்னை எடுத்து உபயோகியும் என்று உள்ளான இருதயத்தின் வாஞ்சையோடு அவரிடம் கேட்டுக் கொள்ளும்போது அவர் நிச்சயமாகவே உங்களை எடுத்து ஆயிரங்களுக்கு பிரயோஜனமாக வைப்பார். ஆமென் அல்லேலூயா!

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச் சித்தம்போல் வனைந்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே


ஜெபம்
எங்களை வனைந்து உருவாக்கும் எங்கள் நல்ல கர்த்தரே, உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். குயவனாம் உமது கரத்தில் எங்களை அர்ப்பணிக்கிறோம். நீர் எங்களை உருவாக்கும். அநேகருக்கு பிரயோஜனமுள்ள ஊழியராக எங்களை எடுத்து பயன்படுத்தும். நாங்கள் ஒரு தகுதியுமில்லதவர்கள் என்பது உமக்குத்தெரியும் அப்பா, ஆனாலும் எஙகளை தகுதிப்படுத்தும் கர்த்தர் எங்களை தகுதிப்படுத்தி உமக்கென்று உபயோகப்படுத்தும். நீர் அப்படி செய்யப்போகிறதற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
ட்ரினிடாட் டொபாகோ -Trinidad and Tobago- தேசத்திற்காக ஜெபிப்போமா?

இத்தேசத்தில் பல நாட்டு மக்கள் வாழ்கிறார்கள். இந்தியர்களும் இத்தேசத்தில் வாழ்கிறார்கள். ஆகையால் பலவிதமான மதங்கள் தங்களுடைய கொள்கைகளில் மக்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த வாக்கின்படி மத்தேயு 16:19 - பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.



1) இத்தேசத்தை கட்டி வைத்திருக்கும் விக்கிரக ஆவிகளின் வல்லமைகள் அழிக்கப்பட ஜெபிப்போம்.



2) இத்தேசத்தில் உள்ள சுவிசேஷ தடைகள் மாற ஜெபிப்போம். இங்குள்ள மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.



3) இத்தேசத்தில் நடக்கும் ஊழியங்களையும், ஊழியகாரர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.



அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment