Monday 3 January 2011

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 18-ம் தேதி - திங்கள் கிழமை
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். - (ரோமர் 12:6-8).

பீத்தோவன் ( Beethoven ) என்னும் புகழ்பெற்ற இசை நிபுணர் தன்னுடைய செவிட்டு குறையினால் மற்றவர்களோடு அதிகமாக பேச மாட்டார். காது கேளாதததினால் அவருக்கு பேசுவதும் கடினம். ஓரு முறை தன் நண்பனின் மகன் இறந்த செய்தியை கேட்டு அவர் மிகவும் வருத்தப்பட்டவராய், நண்பனின் வீட்டிற்கு சென்றார். அவருக்கு எந்த வார்த்தைகள் சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை. ஏனெனில் அவருக்கு பேசுவது கடினமானதினால். அப்போது அவர் அங்கு மூலையில் இருந்த ஒரு பியானோவை பார்த்தார். உடனே அங்கு சென்று அமர்ந்து, ஒரு அரை மணிநேரம் தன் இருதயத்தின் வியாகுலங்களையெல்லாம், துயரத்தையெல்லாம் அதில் கொட்டி வாசித்து முடித்தார். அதை வாசித்து முடித்து. அவர் அந்த இடத்தை விட்டு சென்றார். பின் அவரது நண்பர், மற்ற யாரை பார்க்கிலும் பீத்தோவனின் வருகை தனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது என்று கூறினார்.

நம்மிலும் நாம் யாரும் மற்றவர்களை போல இருப்பதில்லை. நாம் மற்றவர்களை போல இருக்க முயற்சித்தாலும் அது கடினமே. ஆனால் தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆற்றலையும், தாலந்துகளையும் கொடுத்துள்ளார். மேலே கூறப்பட்டுள்ள வசனத்தில் ஆறு வகையான தாலந்துகளை நாம் பார்க்கிறோம். அதில் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். ஊழியம் செய்வதில் நாம் வாஞ்சை உள்ளவர்களாயிருந்தால் அதிலும், பகிர்ந்து கொடுப்பதில் நாம் வாஞ்சை உள்ளவர்களாயிருந்தால் அதிலும், இரக்கம் உடையவர்களாயிருந்தால்,மற்றவர்களுக்கு அவர்களுடைய தேவைகளில் இரக்கத்துடன் இருப்பதிலும் நாம் முந்தி கொள்ள வேண்டும்.

பீத்தோவன் தன்னால் இயன்றதை தன் நண்பனுக்கு செய்து, அவருக்கு ஆறுதலை கொடுத்ததை போல நாமும் நம்மால் இயன்றதை செய்து, தேவனுடைய ராஜ்யத்தை கட்ட வேண்டும். அதற்கென்றே தேவன் நம் ஒவ்வொருவருக்கும் கிருபாவரங்களை கொடுத்திருக்கிறார். அவற்றை பெற்று கொண்ட நாம் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க கூடாது. தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக நாம் ஒவ்வொருவரும் எதையாவது செய்யவே வேண்டும். கர்த்தருடைய வருகை மிக சமீபமாய் இருப்பதால் நாம் இன்னும் இந்த உலகத்தவர்களை போல வாழ்ந்து, நம்முடைய திருப்திக்காகவே இருக்க கூடாது. எழுந்துகட்டுவோம் வாருங்கள், தேவ ராஜ்ஜியம் எழும்பட்டும்!

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியால் வைத்து அடித்தல்ல
ரம்பத்த்தால் மரத்தை அறுத்தல்ல

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவே அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்


ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் அன்பின் பரலோக தந்தையே, நீர் எங்களுக்கு பகிர்ந்து கொடுத்த கிருபையின் அளவின்படியே நாங்கள் எங்களால் இயன்ற அளவு தேவ ராஜ்ஜியத்தை கட்டி எழுப்ப எங்களுக்கு கிருபை தாரும். கிறிஸ்துவின் வருகை சமீபமாயிருப்பதால் நாங்கள் துரிதமாய் கட்டவும், அநேகரை கொள்ளை பொருளாய் உம்மண்டை சேர்க்கவும் எங்களுக்கு கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
துருக்கி தேசத்திற்காக - Turkey - ஜெபிப்போமா?

துருக்கி ஒரு இஸ்லாமிய நாடு. இந்த நாடு ஐரோப்பிய கண்டத்துடனும், கிழக்கில் மத்திய கிழக்கு நாடுகளோடு இணைக்கப்பட்டிருப்பதாலும் இரண்டு வகையான பழக்க வழக்கங்களோடு இந்த நாடு காணப்படுகிறது.


1. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2. இந்த நாட்டிலுள்ள் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்காகவும், மிகவும் சொற்பமான கிறிஸ்தவர்கள் இருந்தாலும், அவர்கள் மூலம் தேசம் சந்திக்கப்படவும்.

3. இங்கு செய்யப்படும் ஊழியங்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதையை போல பலன் கொடுக்கவும் ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment