Monday, 3 January 2011

நினையாத நாழிகையிலே

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 17-ம் தேதி - ஞாயிற்றுக் கிழமை
நினையாத நாழிகையிலே
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். - (மத்தேயு 24:41,42,44)

ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் அதிகமாய் நேசித்து வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவள். மற்றவள் ஏற்றுக் கொள்ளாதவள். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவள், எப்போதும், மற்றவளிடம், இயேசுகிறிஸ்துவைப்பற்றிக் கூறி, அவளும் எப்படியாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் தன்னோடு ஆலயத்திற்கு வரும்படி வருந்திக் கேட்டுக் கொண்டாள். அவளும் ஒத்துக் கொண்டு, இருவரும் அன்று இரவில் ஆலயத்திற்குச் சென்றார்கள். அன்று சபை போதகர், மத்தேயு 24ம் அதிகாரத்திலிருந்து, இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும், அவர் திடீரென்று ஒருநாள் மத்திய ஆகாயத்தில் வந்து, தம்முடையவர்களை தம்மோடு சேர்த்துக் கொள்வார் என்றும் இரகசிய வருகையைக் குறித்து மிகவும் ஊக்கத்தோடு பகிர்ந்துக் கொண்டார். கிறிஸ்தவளான சகோதரி, இவளை எப்படியும் வசனம் தொட்டிருக்கும், இவள் இரட்சிப்படைந்து விடுவாள் என்று மிகுந்த எதிர்ப்பார்ப்போடு அவளை பார்த்தபோது, அவள் எதுவுமே நடக்காததுப் போல இருந்தததைக் கண்டு மிகவும் சோர்வடைந்தாள். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். இருவரும் ஒன்றாக படுக்கைக்குச் சென்றனர்.

கிறிஸ்தவளான சகோதரிக்கு இரவு தூக்கம் வரவில்லை. தன் சகோதரி இன்னும் இரட்சிக்கப்படவில்லையே என்று மிகுந்த பாரத்தோடு, பக்கத்து அறைக்கு ஜெபிக்க எழுந்துச் சென்றாள். மற்ற சகோதரி, திடீரென்று கண் விழித்துப் பார்த்தபோது, தன் சகோதரியை பக்கத்தில் இல்லாததைக் கண்டு, எங்கே போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது போதகர் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வரவே, திடுக்கிட்டு, தன் சகோதரி கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக் கொள்ளப் பட்டாளோ என்று எண்ணி, தூக்கிவாரிப்போட்டு, கதறி, ‘இயேசுவே என்னை இரட்சியும், என்னையும் எடுத்துக் கொள்ளும்’ என்று கண்ணீh விட்டு கதற ஆரம்பித்தாள். சத்தம்கேட்டு, மற்ற சகோதரி ஓடிவந்து, இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து, அந்நேரமே, அவிசுவாசியான சகோதரி கர்த்தரை ஏற்றுக் கொண்டாள். ஆம்! ஒரு நாள் இப்படிதான் நடக்கப் போகிறது. நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. புலி வருகிறது புலி வருகிறது என்று சொல்லி சொல்லி ஒரு நாள் புலி வந்துவிட்டதைப் போல, இயேசு வருகிறார் என்று அநேக இடங்களில் சொல்லி சொல்லி ஒரு நாள் அவர் வரத்தான் போகிறார். அவர் ஏன் தாமதிக்கிறார் என்றால் ‘தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்’ என்று 2பேதுரு 3:9-10 ல் பார்க்கிறோம். நாம் ஆயத்தமில்லா நிலையில் இருந்தால் கைவிடப்படுவோம் அதற்கு பின் எத்தனை கதறியும் கண்ணீர் விட்டும் பிரயோஜனமில்லை. அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் உபத்திரவ மற்றும் மகா உபத்திர காலத்தை சந்திக்க வேண்டி வரும். ஆகையால் இன்றே இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுவோம்.

அமெரிக்காவில் ஏரோப்பிளேனில் ஓட்டிச் செல்வதற்கு ஒரு இரட்சிக்கப்பட்ட பைலட்டும்; மற்றவர் இரட்சிக்கப்படாதபைலட்டும் இருப்பார்கள். ஏனென்றால், இரட்சிக்கப்பட்டவர் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், மற்றவர் பத்திரமாக தரை இறக்குவார் என்று அப்படி அவர்கள் செய்கிறார்கள். இது சும்மா ஏதோக் கட்டுகதை அல்ல. கர்த்தருடைய நாள் மிகவும் சமீபம். அவர் கூறின தீர்க்க தரிசனங்கள் எல்லாம் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. வெளிப்படுத்தின விசேஷத்தில் 6ம் அதிகாரத்தில் காணப்;படும் ஏழு முத்திரைகளில் இரண்டு முத்திரை ஏறகனவே உடைக்கப்பட்டது என்றுக் கூறுகிறவர்களும் உண்டு.

ஆகவே இனி காலம் செல்லாது, ஆகவே இரட்சிக்கப்படாதவர்கள் இரட்சிப்படைந்து, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வோம். அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுபோம்.

திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
காலையோ மாலையோ நள்ளிராவிலோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்


ஜெபம்
கன்மலையும் கோட்டையுமாகிய எங்கள் நல்ல தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்கள் வெகு சீக்கிரமாய் நிறைவேறிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இருக்கும் நாங்கள் அவருடைய வருகைக்கு ஆயத்தமாக்கப்பட எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறோம். எங்களை மன்னித்து, அவருடைய வருகைக்கு எங்களை ஆயத்தப்படுத்தும். அவர் வருகையில் கைவிடப்பட்டு போய் விடாதபடிக்கு எங்களை இந்நேரமே சுத்திகரித்து உமது பிள்ளைகளாய் மாற்றிவிடும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
டோங்கா தேசத்திற்காக - Tonga - ஜெபிப்போமா?

1. 1995-ம் ஆண்டு இதன் தலைவர் தன்னையும், இத்தேசத்தையும் தேவனுக்கு அர்ப்பணித்தார். இப்போதுள்ள ஆவிக்குரிய மறுமலர்ச்சிக்காய் ஜெபிப்போம்.


2. இங்கு மிஷ்னரியாக இருக்கும் சகோ. பாப், சேலா, மார்க் இவர்களக்காகவும், இவர்கள் செய்யும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.


3. சமீபத்தில் நடக்க போகும் தேர்தலில் ஒரு நல்ல அரசாங்கம் ஆட்சிக்கு வர ஜெபிப்போம்.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment