நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். - (யோவான் 14:3)
மாரநாதா என்பதற்கு நமது ஆண்டவர் வருகிறார் (Our Lord comes) என்று அர்த்தமாகும். ஆதி அப்போஸ்தலர் காலத்தில் விசுவாசிகள் ஒருவரையொருவர் பார்க்கும்போது, ஹலோ என்று சொல்ல மாட்டார்கள், Praise the Lord என்று சொல்லமாட்டார்கள். மாறாக, மாரநாதா என்று கூறி வாழ்த்துவார்கள்.
சர் எர்னஸ்ட் ஷேக்லடன் (Sir Ernest Shackleton) என்பவர் கடலில் சென்று, பகுதிகளை ஆராய்பவர் தென் பகுதியை சென்று ஆராய்வதற்கு சென்றபோது, தன்னுடைய மனிதர்களில் சிலரை யானை தீவு (Elephant Island) என்னுமிடத்தில் விட்டு விட்டு, தான் திரும்ப வந்து அவர்களை கூட்டி கொண்டு போவதாக சொல்லிவிட்டு, மற்ற சில பேருடன் ஆராய்வதற்காக சென்றார். ஆராய்ந்து முடித்துவிட்டு, திரும்ப மற்றவர்களை அழைத்து செல்வதற்காக திரும்பும்போது, பெரிய பெரிய பனி மலைகள் அவர் அங்கு செல்வதற்கு தடை செய்வதை கண்டார். என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தபோது, அந்த மலைகளில் அதிசயவிதமாக ஒரு வழி திறக்கப்பட்டு, அவர் மற்றவர்களிடம் வந்து சேர்ந்தார். அங்கு அவர்கள் ஆயத்தமாய் இருந்தார்கள். உடனே அவருடன் வந்து கப்பலில் ஏறினார்கள். அவர்கள் ஏறினவுடன் அவர்கள் இருந்த இடம் (எல்லாம் பனிகட்டியாக இருந்தது) அப்படியே நொறுங்கி விழுந்தது. அதை கண்ட எர்னஸ்ட் அவர்கள், 'நல்ல வேளை நீங்கள் தயாராக இருந்தீர்கள், இல்லாவிட்டால் கடலில் விழுந்து மரித்து போயிருப்பீர்கள்' என்று கூறினார். அப்போது அவர்கள் 'நீரில் பனி விலகினவுடனே, நீர் இன்று வருவீர் என்று நாங்கள் எதிர்ப்பார்த்து, நாங்கள் எங்கள் உடைமைகளை எடுத்து தயாராக இருந்தோம், நீங்கள் வந்தவுடனே உங்களை எதிர்கொண்டு வந்தோம்' என்றார்கள்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து 'நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்' என்று கூறி சென்றிருக்கிறார். அவர் வரும் காலம் மிகவும் நெருங்கி விட்டது. தாம் வரும்போது என்னென்ன அடையாளங்கள் நடைபெறும் என்று அவர் கூறினாரோ அந்த அடையாளங்கள் எல்லாம் நிறைவேறி முடிந்து கொண்டிருக்கிறது. அவர் தாம் சொன்னபடியே, நமக்கென்று ஒரு இடத்தை பரலோகத்தில் ஆயத்தம் செய்து விட்டு, நம்மை அவரோடு கூட என்றும் இருக்கும்படி, நம்மை கூட்டி செல்ல சீக்கிரமாய் வரப்போகிறார்.
அவர் தாம் வாக்களித்தபடியே நம்மை கூட்டி செல்ல வரப்போகிறார். ஆனால் நாம் ஆயத்தமா? சர் எர்னஸ்ட் அவரோடு இருந்தவர்கள், பனிகட்டி விலகியிருந்ததை பார்த்து, உடனே ஆயத்தப்பட்டார்கள். ஆகையால், அவர் வந்த உடனே அவரோடு சென்றார்கள். நாமும் ஆயத்தமாயிருந்தால், அவர் வரும் போது நம்மை தம்மோடு கூட்டி செல்வார். ஆனால் நாம் ஆயத்தமாயிராதிருந்தால், நாம் கைவிடப்படுவோம். அந்த நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும். ஆயத்தமாவோமா? 'ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்' (1தெசலோனிக்கேயர் 4:16-17).எக்காள சத்தம் எந்த நேரத்திலும் தொனிக்கலாம். ஆயத்தமாயிருப்பவர்களுக்கு மட்டுமே அதன் தொனி கேட்கும். மற்றவர்களுக்கு அந்த சத்தம் கேட்காது. ஆயத்தமாவோமா? எப்படி ஆயத்தமாவது? மனம் திரும்பி இரட்சிக்கப்பட்டு, பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுத்து, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, உலக வாழ்க்கைக்கு விடை கொடுத்து, பரிசுத்தமாய் நம்மை காத்து கொண்டு வாழும்போது, நாம் அவருடைய வருகைக்கு ஆயத்தம் என்று அர்த்தமாகும். நாம் பெற்று கொண்ட இரட்சிப்பு ஒவ்வொரு நாளும் பூரணப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவு படுக்குமுன், கர்த்தரிடம் அந்த நாள் முழுவதும், நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பின் நிச்சயத்தோடு நித்திரைக்கு செல்ல வேண்டும். அவர் இரவில் வருவாரென்றாலும், அப்போது நாம் ஆயத்ததமாக காணப்படுவோம். ஆயத்தமாவோமா? இந்த நாளில் நாம் வீட்டை விட்டு போகும்போது பை என்று சொல்லாமல் மாரநாதா என்று சொல்லிவிட்டு போவோமா? ஆம் கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும்! மாரநாதா அல்லேலூயா!
மணவாளன் வருகைக்கு காத்திருக்கும் சபையே மாரநாதா சொல்ல நீ மறந்து போனதேனோ ஒருவரை யொருவர் சந்திக்கும் வேளையிலே மறவாமல் மாரநாதா சொல்லி வாழ்த்துவோம் அல்லேலூயா அல்லேலூயா சொல்லும் போதினிலே ஆனந்தம் ஆனந்தம் நமது வாழ்விலே
|
|
No comments:
Post a Comment