Monday, 3 January 2011

வழுவாத விசுவாசம்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 13-ம் தேதி - புதன் கிழமை
வழுவாத விசுவாசம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். - (மத்தேயு 11:6).

சார்லஸ் டெம்பிள் டான் என்ற பெயரை கேட்டவுடன் யாரேனும் உங்களுடைய ஞாபகத்திற்கு வருகிறார்களா, அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் பில்லி கிரஹாம் என்றவுடன் உங்களுக்கு அநேகமாக தெரிநதிருக்கும், இன்று உலகப்புகழ் பெற்று விளங்கும் பில்லி கிரஹாமும், சார்லசும் இளவயது நண்பர்கள். 1945ல் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ வாலிபர் கூட்டத்தில் நண்பர்கள் ஆனார்கள். பின் இவர்கள் இருவரும் சேர்ந்து ஐரோப்பா முழுவதும் பிரயாணம் செய்து சுவிசேஷ கூட்டங்கள் நடத்தினர். பின் நாட்களில் இந்த சார்லஸ் 1200 பேர் கொண்ட ஒரு சபையை தனி மனிதனாக உருவாக்கினார். அந்நாட்களில் அநேகர் பில்லி கிரஹாமை விட சார்லஸ்தான் மிக வல்லமையான ஊழியராக வருவார் என கருதினார்கள்.

இப்படி வல்லமையாக ஊழியம் செய்த சார்லஸ் வாழ்வில் திடீரென ஓர் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணம் வாழ்க்கை என்ற மாதப்பத்திரிக்கையே ஆகும். அதில் வட ஆப்ரிக்காவில் நிலவிவரும் கடும் பஞ்சத்தை குறித்த புகைப்பட செய்தி வெளியாயிருந்தது. அதில் ஒரு நீக்ரோ பெண்மணி பஞ்சத்தால் இறந்த ஒரு குழந்தையை கையில் வைத்தவாறு வானத்தை அண்ணாந்து பார்ப்பது போல படமிருந்தது, இந்த படத்தை பார்த்த சாலஸ்க்கு ஒரு சந்தேகம் எழும்பலாயிற்று. அன்பு நிறைந்த தெய்வம் இந்த உலகில் இருந்தால் மழை இல்லாமல் இந்த குழந்தை இறக்க நேரிடுமா? இந்த தாயின் வேதனையை அவர் அறிந்திருந்தாரானால் நிச்சயம் இது நடக்காது என்ற சிந்தனை உருவானது. அவரது வலுவான விசுவாசம் மிகுந்த ஆட்டம் கண்டது. அநேக கேள்விகளால் குழப்பப்பட்டு விசுவாசத்தை முற்றிலும் இழந்து ஊழியத்தை விட்டு விலகலானார். அதோடு பில்லி கிரஹாமையும் தேவனை நம்புவது மடத்தனம் என்றார். ஆனால் அவரோ கேள்வி அநேகம் இருந்தாலும், தன் விசுவாசத்தை காத்து கொணடு கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்தார். சார்லஸோ தீவிர நாஸ்திகவாதியாகி, அதன் கொள்கையை தனது நாவல்களிலும் புத்தகங்களிலும எழுத ஆரம்பித்தார்.

வேதத்திலே யோவான்ஸ்நானகன் இயேசுகிறிஸ்துவை இவ்வுலகிற்கு காட்டுவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி. இயேசுகிறிஸ்துவை உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி என இஸ்ரவேலருக்கு ஆணித்தரமாக அறிவித்தார். ஆனால் பின்நாட்களில் ஏரோது ராஜாவினால் சிறையில் அடைக்கப்பட்டபோது, இயேசுகிறிஸ்துவால் அற்புதங்கள் எதுவும் நடந்து, தான் விடுவிக்கப்படாததால் வரப்போகிற மேசியா நீர் தானா என்று இயேசுவிடம் கேட்டனுப்பினார். அப்போது இயேசுகிறிஸ்து 'என்னிமித்தம் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான்' என்றார்.

பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் திறனிலும், ஒரு காரியத்தை ஆராய்வதிலும் வித்தியாசமுண்டு, ஆகவே பிசாசானவன் நம்மை வீழ்த்த பலவகையான வழிமுறைகளை கையாளுகிறான். சிலரை பாவத்திலும், சிலரை குழப்பமான தத்துவங்களினாலும், சந்தேகங்களினாலும் விசுவாசத்தினின்று விழப்பண்ணுகிறான். பிசாசின் தந்திரங்களுக்கு ஜாக்கிரதையாய் நம்மை காத்துக கொள்ள வேண்டும். விசுவாசத்தையும் சத்தியத்தையும் பற்றிய சந்தேகங்கள் நமக்கு வரும்போது, பொறுமையாக தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபிக்க வேண்டும். ஆண்டவர் நமது விசுவாசம் வழுவாதபடி போதித்து நடத்துவார். வேத வசனத்திற்கு முதலிடம் கொடுத்து, இரவும் பகலும் ஆசையாய் தியானம் பண்ணும்போது நாம் சார்லஸை போல வழி விலகாமல் பில்லி கிரஹாமை போல தேவனுக்கென்று எழுந்து பிரகாசிப்போம். நித்திய ஜீவனையும் சுதந்தரித்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடகத்தால் நாம்
பிசாசை வென்றிடுவோம்

வெற்றி கொடி பிடித்திடுவோம்
நாம் வீர நடை நடந்திடுவோம்

காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்


குறிப்பு: அன்பு நண்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களையும், அனுதின மன்னாவின் வலையத்தில் (Website: www.anudhinamanna.net ) இருக்கும் Guest Book -ல் தேவன் உங்கள் வாழ்வில் அனுதின மன்னா மூலமாக செய்யும் கிரியைகளையும் மற்றவர்களும் படிக்கும்படியாகவும் அதன் மூலம் தேவ நாமம் மகிமை படும்படியாக எழுத வரவேற்கப்படுகிறீர்கள். உங்கள் ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி!

ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் பரலோக பிதாவே, எங்கள் விசுவாசம் வழுவி போக தக்கதாக பிசாசானவன் கொண்டு வருகிற எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் உம்மை விட்டு பின் வாங்கி போகாத வண்ணம் விசுவாசத்திலே உறுதியாய் தரித்திருக்க உதவி செய்யும். எங்கள் விசுவாசத்தை வர்த்திக்க பண்ணும் தகப்பனே. நாங்கள் உம்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையும், விசுவாசமும் எத்தனை புயல் வந்தாலும், காற்று வீசினாலும் மாறாதபடிக்கு, உம்மிலே ஆழமாய் வேரூன்றி நிலைத்திருக்கவும், எந்த காரணத்தினாலும் உம்மிடத்திலே இடறலடையாதபடிக்கும் எங்களை காத்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
குவைத் - Kuwait - நாட்டிற்காக ஜெபிப்போமா?

குவைத் நாடு சிறிய நாடாக இருந்தாலும், மிகவும் வளமிக்க நாடு. அதனால் பக்கத்து நாடாகிய ஈராக் அதை கைப்பற்ற அந்த நாட்டை ஊடுருவினபோது, அமெரிக்க நாடு அதற்கு உதவியாக வந்து, மீண்டும் அவர்களுக்கு அந்த நாட்டை பெற்று தந்தது. விடுதலையோடு ஆராதிக்கப்படும்படியாக, தேவாலயங்கள் உள்ள இந்த தேசத்தில், கிறிஸ்தவர்கள், ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரை தொழுது கொள்ளம்படிக்கும், இந்த தேசத்தில் கேம்ப் மக்களிடையே நடைபெறும் ஊழியங்கள் மூலம் அநேகர் சந்திக்கப்படும்படிக்கும், இந்த நாட்டை ஆளுகிற ராஜாவும், மந்திரிகளும். ஓவ்வொரு குவைத்தியரும் கர்த்தரை அறிந்து, அவரை ஏற்று கொள்ளவும் ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals

No comments:

Post a Comment