Wednesday 29 December 2010

உங்கள் இருதயமே சொல்லும்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 21-ம் தேதி - செவ்வாய் கிழமை
உங்கள் இருதயமே சொல்லும்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். - (1யோவான் 3:20).


உலகத்தில் மிகப் பெரிய போதகர் யார் தெரியுமா? ஒரு வேளை நீங்கள் ஒரு பெரிய லிஸ்டே போடலாம். ஆனால் உண்மையில் யார் தெரியுமா? அது உங்கள் இருதயமே! நீங்கள் தவறாமல் ஆலயத்திற்கு சென்று கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டும், அதை தள்ளலாம், அல்லது உங்கள் உயிர் நண்பனின் ஆலோசனையை மறுக்கலாம், ஆனால், உங்கள் இருதயத்திலிருந்து வரும் குரலை நீங்கள் தள்ளவோ, மறுக்கவோ முடியாது.

சில வருடங்களுக்கு முன்பு இரு சகோதரர்கள், ஒரு பல்சுவை அங்காடியை வைத்திருந்தார்கள். அதில் அடிக்கடி சிறு சிறு பொருட்கள் காணாமற் போயின. அது விற்கப்படவுமில்லை. இதை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்து, அந்த கடையின் மேல் கூரையில் ஒரு ஓட்டையைப போட்டு, இருவரில் ஒருவர் அமர்ந்து, அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தனர். அப்போது ஒரு சிலர் பொருட்களை எடுப்பதை கண்டனர். ஆனால் அவர்கள் மேல், அவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், ஒரு பலகையில், ‘இந்த கடையின் கூரையில் ஓட்டைப் போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்று எழுதி முன்னால் வைத்தார்கள். அன்றிலிருந்து அந்தக்கடையில் திருடு போவது நின்றது. ஆனால் அந்தக் கடையில் வருபவர்களில் ஒரு சிலர் தங்களையும் மீறி அவர்கள் இருதயம் உறுத்துவதால், மேலே நோக்கிப் பார்த்தனர்.

இந்த உலகத்தில், உங்கள் இருதயத்தைவிட வேறு எதுவும், வேறு யாரும் நீங்கள் கர்த்தரிடம் சரியான உறவில் இருக்கிறீர்கள் என்பதை சரியாக சொல்ல முடியாது. உங்கள் இருதயமே எல்லாவற்றையும் அறியும். நீஙகள் பாவம் செய்யுமபோது, உங்கள் இருதயமே உங்களுக்கு சொல்லும், ‘அதைச செய்யாதே, அது பாவம்’ என்று. ஆனால் அந்த சத்தத்தை புறக்கணித்து, அல்லது ஆவியானவர் உங்கள் இருதயத்தில், உணர்த்தும் காரியங்களை புறக்கணித்து, நீங்கள் இன்னும் பாவம் செய்துக கொண்டே இருப்பீர்களானால், ஒரு நாள் கர்த்தரின கிருபை உங்களைவிட்டு எடுபட்டு போகும். அதனால் உங்கள் இருதயம் கடினப்பட்டு போகும். பின் யார் வந்து சொன்னாலும், எது நடந்தாலும், மனந்திரும்பாது. ஏனென்றால் அங்கு கர்த்தருடைய கிருபை இருக்காது. பார்வோன் இஸ்ரவேல் மக்களை விடுதலையாக்க மறுத்து, ஒவ்வொரு வாதை வரும்போதும் தன் இருதயத்தை கடினப்படுத்தி, அவர்களை தேவனை ஆராதிக்க விட மறுத்தான் (பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; யாத்திராகமம் 7:13) கடைசியில் தேவன் அவனுடைய இருதயத்தை கடினப்படுத்த ஆரம்பித்தார், ஏனெனில் அவருடைய கிருபை அவனை விட்டு எடுபட்டு போயிற்று. (கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; யாத்திராகமம் 10:27)

கடைசியில் தான் அழியுமட்டும், அவன் இருதயம் கடினப்பட்டது, 'பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது’ –(சங்கீதம் 136:15).

ஆகையால் நம் இருதயம் கடினப்பட்டு போகாதபடிக்கு நம் இருதயத்தை கர்த்தருடன் சரியான உறவில் வைத்துக் கொள்வோம். ஆகவே ‘பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்’- (1யோவான் 3:21-22) நம்முடைய இருதயத்தை கடினப்படுத்தாமல் இருந்தால், தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொளவோம். ஆமென் அல்லேலூயா!

பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை

யாரும் காணா உள் அலங்கோலத்தை

மனம் நொந்து மருளுகின்றேன்

பரிசுத்தம் கெஞ்சுகிறேன்


ஜெபம்

எங்கள் மேல் கண்களை வைத்து ஆலோசனை சொல்லும் எங்கள் நல்லக் கர்த்தரே உம்மைத துதிக்கிறோம். எங்கள பாவத்தின் கோரத்தினால், எங்கள் இருதயம் கடினப்பட்டு போகாதபடிக்கு, அதனால் உம்முடைய கிருபை எங்களை விட்டு எடுத்துப் போடப்படாதபடிக்கு எங்களை காத்தருளும், எங்கள் இருதயம் எங்களை குற்றவாளிகளாக சொல்லும்போது அந்த சத்தத்திற்கு நாங்கள் செவிக் கொடுத்து, எங்கள் பாவ வழிகளை விட்டுவிட உதவிச் செய்யும். உம்முடைய கிருபை இல்லாமல் நாங்கள் ஒரு நிமிடமும் வாழ முடியாதே, தேவரீர் எங்கள் மேல் உம்முடைய கிருபையைப் பாராட்டும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


ஜெபக்குறிப்பு

பல்கேரியா (Bulgaria) தேசத்திற்காக ஜெபிப்போமா? bulgaria


1) 50 சதவீத மக்கள் இன்னும் வறுமை நிலையில் வாழ்கிறார்கள், இவ்வறுமை நீங்க ஜெபிப்போம்.


2) 1990-ம் ஆண்டில் ஒரு பெரிய ஆத்தும அறுவடையால் குறைந்தது 10,000 பேர்கள் கர்த்தரை ஏற்றுக்கொண்டார்கள், அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிப்போம்.


3) இந்நாட்டில் உள்ள ஊழியர்களையும், ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment