Wednesday, 29 December 2010

கடந்து வந்த பாதைகள்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 29-ம் தேதி - புதன் கிழமை
கடந்து வந்த பாதைகள்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. - (சங்கீதம் 34:2-3).


நாம் கடந்து வந்திருக்கிற இந்த 2010ம் ஆண்டை சற்று திரும்பி பார்த்தால், பருவநிலை மாறுவதை போல எத்தனை எத்தனை மாற்றங்கள்! இன்பம் துன்பம், மகிழ்ச்சி, கவலை சுகம், சுகவீனம், பிறப்பு, இறப்பு, வெற்றி தோல்வி, களிப்பு, கண்ணீர் இலாபம், நஷ்டம், தனிமை, போன்ற விதவிதமான திருப்பங்களால் நிறைந்திருந்தன அல்லவா?

மகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தவை என்றும், துக்கம் தொண்டையை அடைத்த நேரமெல்லாம் எதிரியான பிசாசு அனுப்பினவை என்றும் சொல்லிவிட முடியாது. விதவிதமான சூழ்நிலைகள் மூலமாக தேவன் தமது பிள்ளைகளை நடத்துகிறார். ஒரு வேளை நீங்கள் யோசிக்கலாம், 'இந்த பிரச்சனைகளெல்லாம் வாராமல் என்றும் மகிழ்ச்சியாக இருநதிருந்தால் என் வாழ்வு எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும்' என்று. அது எப்படியிருக்கும் தெரியுமா? உதாரணமாக கடலில் வாழும் ஜெல்லி மீன் மிக அழகானவையே. அதன் ஒவ்வொரு அசைவுகளும் நம்மை கண் சிமிட்டாமல் பார்க்க செய்ய கூடியவையே. ஆனால் கடல் முழுவதும் இந்த ஜெல்லி மீனால் நிறைந்திருந்தால் எப்படி இருக்கும்? அதோடு சாதாரண நெத்திலி மீன், இறால், நண்டு நத்தை, நட்சத்திர மீன், கடற்குதிரை, திமிங்கலம், சுறா, ஆமை என எல்லாம் கலந்திருக்கும்போது தானே கடல் அழகு பெறுகிறது! அதுபோல இன்பம் துன்பம் என அனைத்தும் கலந்ததுதான் வாழ்ககை! துன்பமற்ற இடத்தை நாம் வாஞ்சிப்போமானால், அது பரலோகம் தான்.

ஆனால் துன்பத்தில் தேவன் நம்மை அப்படியே விட்டுவிடுவதில்லை. நாம் சோர்ந்து போன நேரத்தில் தேவன் ஒரு வெற்றியை கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். தலை கனத்தால் மண்டை பெரிதாக கொண்டே போனால் ஒரு தட்டு தட்டுகிறார். நம்மை உருவாக்க நினைக்கும்போது, சில உபத்திரவங்களை அனுமதிக்கிறார். பொன்னாக விளங்க செய்ய சில சோதனைகளையும் அனுமதிக்கிறார். இன்பமோ, துன்பமோ எந்த ஒரு காரியமானாலும் முறுமுறுப்பதும், தேவனை ஸ்தோத்தரிப்பதும் அவரவர் மனப்பாங்குகளை பொறுத்தது. ஒரு இழப்பிற்காக முறுமுறுத்து தேவனை குறை சொல்லவும செய்யலாம். அல்லது இதைவிட பெரிய இழப்பு ஏற்படவில்லை என்று எண்ணி தேவன் இதையும் நன்மைக்காகவே அனுமதிக்கிறார் என்று ஸ்தோத்திரிக்கவும் செய்யலாம். அது அவரவருடைய மனப்பான்மையை பொறுத்தது என்றாலும், கர்த்தர் நம்மை அருமையாக நடத்தி வந்த விதத்தை நினைத்து நாம் அவரை ஸ்தோத்திரிக்கவே செய்ய வேண்டும்.

நாம் கடந்து வந்திருக்கிற இந்த 12 மாதங்களில் தேவன் நம்மை நடத்தி வந்த வழிகளை நினைத்து நம்முடைய இருதயம் நன்றியால் துதிக்க வேண்டும். தாவீது ராஜா அபிமெலேக்குக்கு முன்பாக வேஷமாறினபோது அவனால் துரத்திவிடப்படுகையில் பாடின சங்கீதம் என்று 34-ம் சங்கீதம் தாவீதினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர் எந்த நேரத்திலும் துன்பங்கள் மத்தியிலும் துக்கங்கள் மத்தியிலும் கடந்து வந்த போதெல்லாம், கர்த்தரை நோக்கி பார்த்து, அவருடைய கிருபைகளை பெற்று, அவரை துதித்து பாடி மகிழ்ச்சியடைந்தார். 'கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்' என அவரை துதித்து பாடி கொண்டே தன் துக்கங்களையும், துன்பங்களையும் மறந்தார். அந்த சங்கீதம் முழுவதையும் வாசித்து பாருங்கள்! எத்தனை அருமையானது!

நாமும் கூட தேவன் இந்த வருடம் முழுவதும் நமக்கு நல்லவராகவே இருந்தாரே என்று அவருடைய கிருபைகளை நினைத்து அவரை துதித்து பாடிகொண்டே இருக்க வேண்டும். சோதனைகள் வந்தது உண்மைதான், துன்பங்கள் வந்தது உண்மைதான், கண்ணீரின் பாதையில் நடந்து வந்தது உண்மைதான், ஆனாலும், அவற்றின் மத்தியிலும் தேவன் நம்மை கரம்பிடித்து இந்த வருடத்தின் கடைசி நாட்களையும் ஜீவனோடு சுகத்தோடு சந்தோஷத்தோடு காணும்படி கிருபை பாராட்டினாரே அவரை துதிப்போமா? சந்தோஷமாய் புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைப்போமா? கர்த்தர் கிருபை என்றுமுள்ளது என்று துதித்தபடியே நாம் புதுவருடத்திற்குள் செல்ல தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

தனித்து நின்று திகைத்த நேரம்

தகப்பன் என்னை அணைத்தீரே

என்னில் ஒன்றும் இல்லை தேவா

எல்லாம் உம்மால் ஆனதே

கடந்து வந்த பாதைகளை

திரும்பி நானும் பார்க்கிறேன்

கர்த்தர் செய்த நன்மைகளை

நினைத்து நினைத்து துதிக்கிறேன்


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த வருடம் முழுவதும் எங்களுக்கு நீர் நல்லவராகவே இருந்தீரே உமக்கு நன்றி ஐயா. எங்களுடைய துன்பத்தின், துயரத்தின், கண்ணீரின் பாதைகளிலும் நீர் எங்களை கரம்பிடித்து நடத்தினீரே உமக்கு நன்றி, எங்களுக்கு இன்பத்தின் நாட்களையும் தந்தீரே உமக்கு நன்றி. நீர் செய்த நன்மைகளை நினைத்து உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை துதிக்கிறோம் தகப்பனே. எங்கள் துதி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


ஜெபக்குறிப்பு

சாட் (Chad) நாட்டிற்காக ஜெபிப்போமா? chad


ஆப்பிரிக்க கண்டத்தை சேர்நத இந்த தேசம் இஸ்லாமியர் அதிகமாக இருந்தாலும், மத சுதந்திரம் இருப்பதால், கிறிஸ்தவர்களும் சமமாக உள்ளனர்.


1) உள்நாட்டு போரினால், சீர்குலைந்துள்ள இத்தேசத்தின் பொருளாதார நிலை மாறவும், இந்த நாட்டு மக்கள் கர்த்தரை அறிந்து கொள்ளவும் ஜெபிப்போம்.


2) இந்த நாட்டில் மிஷனரிகள் மூலம் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலன் கொடுக்க ஜெபிப்போம்.


3) இந்த நாட்டில் பேசப்படும் 126 மொழிகளில் வேதம் மொழியாக்கம் செய்யப்பட ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment