Tuesday 28 December 2010

நான் பாவிதான்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 28-ம் தேதி - செவ்வாய் கிழமை
நான் பாவிதான்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. - (எபேசியர் 2:8-9).


நான் பாவிதான் என்றாலும் நீர்

மாசற்ற இரத்தம் சிந்தினீர்

இந்தப்பாடலை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. இந்தப் பாடல், ஆத்தும இரட்சிப்பின் பாடல் என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய தேவ ஊழியரான, பில்லி கிரகாம் அவர்கள், தன்னுடைய கூட்டங்களின் முடிவில், ஆத்துமாக்களை இரட்சிப்புக்கென்று அழைக்கும் போது இந்தப் பாடலை பாடி அழைப்பது வழக்கம்.

இந்தப் பாடலை எழுதியவர் சார்லட் எலியாட் (Charlotte Elliot) என்னும் அம்மையார் ஆவார். அவர் தனது 30 வயது வரை மிகவும், சந்தோஷமாய், எதைக் குறித்தும் கவலையில்லாதவராக, உற்சாகமானவராய், பாடிப் பறக்கும் பறவையைப போல வாழ்ந்து வந்தார். அவர் 30 வயதை தாண்டிய போது, அவருக்கு ஒரு வியாதி வந்தது. அது அவரை படுக்கையை விட்டு எழுந்தரிக்க முடியாதபடி, அந்தப் பறவையின் காலை ஒடித்துப் போட்டதுப் போல படுக்கை கிடையாக்கிப் போட்டது.

அந்த அம்மையார் மனம் ஒடிந்துப் போனார்கள். தேவன் மேலும் உலகத்தில் உள்ள யாவர் மேலும் அவர்களுக்கு கோபம் வந்தது. சுயபரிதாபம் அவர்களை ஆட்கொண்டது. அப்பொழுது அவருடைய தகப்பனார், தங்கள் குடும்ப உறவினரும் கர்த்தருடைய ஊழியரும் பாடகருமான டாக்டர், சீசர் மலான் (Dr. Caesar Malan) என்னும் ஊழியரை தங்களது வீட்டிற்கு அழைத்தார். அவர் வந்துப் பேசினால் மகளுடைய இருதயம் மாறும் என்று நினைத்தார். அதுப்போல, அந்த டாக்டரும் வந்து சார்லட்டிடம் பேசிய போது, அவர்கள் தன் இருதயத்திலுள்ள வெறுப்பை எடுத்துக் கொட்டினார்கள். தேவனைப் பற்றிக் குறை கூறினார்கள். அதைக் கேட்ட அந்த டாக்டர், ‘நீங்கள் மிகவும் களைத்து இருக்கிறீர்கள், வெறுப்பையும், கோபத்தையும் உள்ளடக்கி, சோர்ந்துப் போயிருக்கிறீர்கள்’ என்றுச் சொன்னார். அப்போது, சார்லட், ‘நான் சந்தோஷத்தை பெற்றுக் கொள்வதற்கு என்னச் செய்ய வேண்டும் என்றுக் கேட்டார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவேண்டும்’ என்றார். அப்போது அவர்கள், ‘நான் என்வாழ்வில் சில காரியங்கள் சரிசெய்ய வேண்டி உள்ளது. அவற்றை சரிசெய்தப் பிறகு நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன்' என்றுக் கூறினார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள், அவர் உங்களை ஏற்றுக் கொள்வார். மட்டுமல்ல, உங்கள் வெறுப்பு, கோபத்திற்கு பதிலாக, சந்தோஷத்தையும் சமாதானத்தையம் தருவார்’ என்றுக் கூறினார்.

அப்போதே அந்த அம்மையார், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அந்த நாளில்தானே இரட்சிக்கப்பட்டார்கள். அன்றிலிருந்து அந்த நாளை தனது ஆவிக்குரிய பிறந்தநாள் என்று ஒவ்வொரு வருடமும் கொண்டாடினர்கள்.

பதினான்கு வருடங்கள் கழித்து, அவருடைய சகோதரன் ஒரு போதகராக இருந்தவர், அவர் ஏழையான ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, ஒரு பள்ளியை ஆரம்பிக்க விழைந்தார். ஆனால், அவருக்கு போதிய பண உதவி இல்லாததால், என்ன செய்வது என்று சார்லட்டிடம் கேட்டபோது, அவர்கள் ஒரு பாடலை எழுதி அதை வைத்து, நிதியை திரட்டலாம் என்றுக் கூறினார்கள். அப்போது அந்த சீசர் மலான் என்ற டாக்டர் சொன்ன ‘இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள்’ என்றுச் சொன்ன வார்த்தைகளை, ஞாபகத்தில் வைத்து, இந்தப் பாடலை எழுதி, அதன் மூலம் பணத்தை திரட்டி, அந்தப் பள்ளியைக் கட்டினார்கள்.

சார்லட் தன் வியாதியிலிருந்து கடைசி வரை சுகமடையவில்லை என்றாலும், கடைசி வரை வீட்டிலேயே சிறைப்பட்டு இருந்தாலும் அவர்களுடைய இருதயம் தன் சிருஷ்டிகராகிய கர்த்தரை நித்தமும் துதித்து, அவர்கள், தன் தேவனிடத்தில் நேசத்தை வைத்திருந்தபடியால், 150 பாடல்களை இயற்றினார்கள். அவை ஆங்கில கிறிஸ்தவ வரலாற்றில், ஒரு எழுப்புதலை உருவாக்கிற்று என்பது உண்மை.

தங்கள் பெலவீனத்திலும் கர்த்தருக்கென்று பாடல்களை இயற்றி பாடிய அந்தக் கவிக்குயில், தனது 82ஆவது வயதில், நித்தியமான சுகத்தோடு, பெலவீனங்கள் மாறி தான் நேசித்த தேவனோடு என்றென்றும் வாழும்படி பறந்துச் சென்றது. ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அல்லேலூயா!

நான் பாவிதான் மெய்யாயினும்

சீர் நேர்மை செல்வம் மோட்சமும்

உம்மாலே பெற்று வாழவும்

என் மீட்பரே, வந்தேன் வந்தேன்


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுக்கு முன் வாழ்ந்த பரிசுத்தவான்கள், எங்களுக்கு கற்பித்துக் கொடுத்த பாடல்கள், இன்றளவும் எங்கள் ஆத்துமாவிற்கு பிரயோஜனமாயிருக்கும்படி, இருக்கிறபடியால் அந்த பரிசுத்தவான்களுக்காக உம்மைத துதிக்கிறோம். எங்கள் வாழ்க்கையிலும், எங்கள் கிரியைகளினால் அல்ல, உமது கிருபையினாலே நாங்கள் இரட்சிக்கப்படுகிறபடியால் உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் இருக்கிறவண்ணமாகவே வந்து, உம்மிடத்தில் கிருபைகளை பெற்றுக் கொள்ள உதவிச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


ஜெபக்குறிப்பு

தென் கொரியா (South Korea) நாட்டிற்காக ஜெபிப்போமா?

southkorea

1. அநேக கிறிஸ்தவர்கள் இருக்கும் இந்த நாட்டில் கர்த்தருக்குள் இன்னும் அதிகமாக அவர்கள் வளர்ந்து, மற்ற தேசங்களுக்கு அவர்கள் மூலம் எடுத்து செல்லப்படவும் ஜெபிப்போம்.

2. வட கொரிய மக்களை அவர்கள் நேசித்து, எப்படியாவது கிறிஸ்துவின் அன்பை அந்த மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஜெபிப்போம்.

3. தென் கொரிய மக்கள் உலகமெங்கும் செய்யும் ஊழியங்களில் தேவ நாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.

4. உலகிலேயே மிகப்பெரிய ஆலயம் உள்ள அத்தேசத்தில், பாஸ்டர் பால் யாங்கி சோ செய்யும் ஊழயிங்களுக்காகவும், ஜேராக் லீ அவர்கள் மூலமாகவும், செய்யப்படும் தொலை காட்சி ஊழியங்கள் அநேகருக்கு பயனுள்ளதாக அமையவும் ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment