Wednesday, 29 December 2010

திருப்தியான வாழ்வு

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 23-ம் தேதி - வியாழக் கிழமை
திருப்தியான வாழ்வு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். - (பிலிப்பியர் 4:11-12).


ஒரு சிற்பி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதில் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். தலைக்கு மேலே சூரிய வெப்பம் அவரை தாக்கவே, 'சே, இது என்ன வாழ்க்கை, எப்போது பார்த்தாலும், இந்த வெயிலில் நின்று இந்த உளியை கையில் வைத்து செதுக்கி கொண்டே இருக்கிறேனே! எனக்கு வேறு நல்ல வேலையும், எளிதாக அதிகமாக சம்பளமும் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று நினைத்தார். அப்போது அந்த வழியாக அந்த நாட்டு ராஜா குதிரையில் வருவதை கண்டார். ஆ, இந்த ராஜாவை போல் தானிருந்தால் எத்தனை நலமாயிருக்கும் என்று எண்ணினார், என்ன ஆச்சரியம், உடனே அவர் ராஜாவாக மாறினார். அவர் குதிரையில் பயணித்து கொண்டிருந்தபோது, சூரிய வெப்பம் அவர் மேல் அதிகமாக பாய்ந்தபோது, இந்த சூரியன் தான் இந்த ராஜாவை விட பெரியது என்று நினைத்த மாத்திரத்தில், உடனே சூரியனாக மாறினார். அப்படி சூரியனாக பிரகாசித்து கொண்டிருந்தபோது, ஒரு மேகம் தோன்றி, பூமியின்மேல் மழையை பொழிந்தது. தண்ணீரை அடித்து கொண்டு போகிறபோது, ஒரு பெரிய கல்லை தவிர வேறு எல்லாவற்றையும் அது போகிற வழியில் அடித்து கொண்டு சென்றது. உடனே அந்த சிற்பி, ஆ, அந்த கல்தான் மிகவும் உறுதியானது, என்னவந்தாலும் அசையவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பெரிய கல்லாக மாறினார்.

அப்போது ஒரு சிற்பி, ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு வந்து, அந்த கல்லை செதுக்க ஆரம்பித்த போதுதான், அந்த சிற்பிக்கு தன்னுடைய நிலைமையும், தான் எவ்வளவு வல்லமையுள்ளவரென்பதும் தெரிய வந்தது.

நம்மில் அநேகர் நமக்கு இருக்கிற வசதிகளையும், தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் கண்டு, திருப்தி அடைவதில்லை. மற்றவர்களை பார்த்து, அவர்களை போல எனக்கு இல்லையே என்று அதிருப்திபடுகிறவர்களாகவும், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று முறையிடுகிறவர்களாகவும் காணப்படுகிறோம். என்னதான் நன்றாக கணவர் வாங்கி தந்திருந்தாலும், அந்த பெண் அணிந்திருப்பது போல இல்லையே என்று குறைசொல்வது சில பெண்களுக்கு இயல்பாகவே காணப்படுகிறது. நாம் இருக்கிற நிலைமை நினைத்து திருப்தி அடைவதேயில்லை! எவ்வளவு தான் சம்பளம் உயரட்டும், இன்னும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்ப்பார்ப்பது மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. அந்த சம்பளத்திற்கு ஏற்ற வேலை செய்கிறோமா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை.

பவுல் சொல்கிறார், 'என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்' என்று. நாம் எந்த நிலைமையில் இருந்தாலும், நாம் மனரம்மியமாக இருக்க கற்று கொள்ளும்போது, தேவன் அதில் மகிழ்ந்து, நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கிறார். தேவன் நம்முடைய பெலவீனங்களை அறிந்திருக்கிறபடியால், நம்மை ஒருபோதும் கைவிடாதவராக நம்மை தாங்கி வழிநடத்த வல்லவர். அவரே நம் தேவைகளில் அவைகளை சந்தித்து, நம்மை அதிசயமாய் வழிநடத்துவார்.

எகிப்திலிருந்து கானானுக்கு சென்ற இஸ்ரவேலர் கர்த்தரையே சார்ந்து ஜீவித்தபடியால், நாற்பது வருடங்கள் அவர்கள் வனாந்தரத்திலே இருந்தபோதும், அவர்களுக்கு ஒரு குறையையும் தேவன் வைக்கவில்லை. அங்கு அவர்களுக்கு சென்னை சில்க்ஸ் மாதிரியும், போதீஸ் டெக்ஸ்டைல் மாதிரியும், கடைகளும், செருப்பு கடைகளும் இல்லை. ஆனால் சிறுபிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் துணிகளும் அதற்கேற்றாற்போல பெரிதானது. செருப்புகளும் பெரிதானது. அவர்களுக்கு சாப்பிட மாம்சம் வேண்டும் என்று கேட்ட போது, கீழ்காற்று சிவந்த சமுத்திரத்திலிருந்து, காடைகளை கொண்டுவந்து போட்டது. மாராவின் கசந்த தண்ணீர் மதுரமாக மாறியது. ஒருவரும் வியாதிபடுக்கையில் படுக்கவில்லை. கர்த்தர் அதிசயவிதமாக சந்தித்தார். அதே தேவன் நம் தேவனாய் மாறாதவராய் இருக்கிறபடியால் நாம் அவரை சார்ந்து கொள்கிறபோது, நம் தேவைகளை அதிசயமாய் சந்திப்பார். நாம் மற்றவர்கள் போல இல்லையே என்று முறுமுறுக்க தேவையில்லை, கர்த்தர் அதினதின் நேரத்தில் நம் தேவைகளை சந்தித்து அதிசயமாய் நடத்துவார். நாம் கர்த்தரையே சார்ந்து கொள்கிறபோது இந்த அற்புதங்கள் நம் வாழ்விலும் நிச்சயமாய் நடக்கும். ஆமென் அல்லேலூயா!

தூதர்கள் உண்ணும் உணவால்

உந்தன் ஜனங்களை போஷித்தீரே

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

என்றும் வாக்கு மாறாதவர்

உமக்கொப்பானவர் யார்

உமக்கொப்பானவர் யார்

வானத்திலும் பூமியிலும்

உமக்கொப்பானவர் யார்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிறவைகளில் நாங்கள் திருப்தியாக வாழ எங்களுக்கு கற்று தாரும். மற்றவர்களை பார்த்து, அவர்களோடு நாங்கள் எங்கள் ஜீவியத்தை ஒப்பிட்டு, முறுமுறுக்கிறவர்களாக இல்லாதபடி, போதும் என்கிற நிறைவோடு வாழ கிருபை செய்யும். நீர் எங்கள் தேவைகளை சந்திக்கிற தேவனாக எங்களோடு என்றும் இருக்கிறபடியால் எதை குறித்தும் நாங்கள் கவலைபடாதபடி, உம்மையே சார்ந்து ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


ஜெபக்குறிப்பு

சாலமோன் தீவுகளுக்காக (Solomon Islands) ஜெபிப்போமா?solomonislands


பசிபிக் கடலில் அமைந்துள்ள இத்தீவுகள் கிறிஸ்தவ தீவுகளாகும். மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள இத்தீவுகளின் முக்கிய வருமானம் மீன்பிடித்தல் மூலமே.


1) இத்தீவுகளிலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2) இந்த தீவுகளில் வாழும் மக்களின் வறுமை நீங்கி, செழுமையாக மாற ஜெபிப்போம்.


3) இந்த தீவுகளில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனை கொடுக்க ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment