Tuesday 28 December 2010

நம்மை அறிந்த தேவன்

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 டிசம்பர் மாதம் 27-ம் தேதி - திங்கள் கிழமை
நம்மை அறிந்த தேவன்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. - (யோசுவா 1:5).


நம் தேவன் நம்மை ஒவ்வொரு வினாடியும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. இதை நம்மில் எத்தனைப் பேர் உணர்ந்திருக்கிறோம்? அவர் நம்மை நேசிப்பது மாத்திரமல்ல, நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.

ஒரு ஊழியர் தன் மனைவி பிள்ளைகளோடு, காரில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு வந்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும், வெகுநேரம் காரில் இருந்தபடியால், ஒரு ஹோட்டலில் சாப்பிட வேண்டி இறங்கினார்கள். அந்த ஊழியர், வண்டி ஓட்டி வந்தபடியால், காலை கொஞ்சம் நீட்டி மடக்க வேண்டி, ‘நீங்கள் போங்கள், நான் கொஞ்சம் நடந்து விட்டு வந்து உங்களோடு சேர்ந்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார். அவர் அப்படி நடக்கும்போது, அவருடைய மனதில், ‘நான் கர்த்தருடைய ஊழியத்தை விரும்பிதான் செய்கிறேன். ஆனால் என்ன பிரயோஜனம், எனக்கு மனது பாரமாயிருக்கிறதே, நான் நினைக்கிற மாதிரி ஊழியத்தில் கனிகள் இல்லையே, என்னை விசாரிக்க யாரும் இல்லையே’ என்று சுய பரிதாபம் கொண்டு, அப்படி நினைத்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த பொது தொலைபேசி அறையில் (Public Telephone Booth)-ல் டெலிபோன் ஒலிக்க ஆரம்பித்தது. அதை எடுக்க யாருமில்லை. அங்கு வேலை செய்துக் கொண்டிருந்தவரோ, அங்கு வந்திருந்த மக்களுக்கு சேவை செய்துக் கொண்டிருந்தார். அந்த போனை எடுக்க ஆளில்லை. இவர் யாருக்கோ வருகிற போன் என்று நினைத்து, அங்கிருந்து நகர்ந்த போதிலும், நானும் வேறு நகரத்திலிருந்து, இந்த நகரத்திற்கு வேறொரு காரியமாக வந்திருக்கிறேன், ஆனால் இந்த போன் அடித்துக் கொண்டே இருக்கிறதே, ஒருவேளை என்ன அவசர காரியமோ, யாரும் எடுக்கிற மாதிரி தெரியவில்லை, சரி போய் எடுத்துப் பேசுவோம் என்று எண்ணியபடி, மெதுவாக, அங்குச் சென்று, அந்த போனை எடுத்து, ‘ஹலோ’ என்றுச் சொன்னார்.

அந்த போனிலிருந்து உடனே, ‘இது தூர இடத்திலிருந்து வருகிற கால், என்றும், அந்த ஊழியரின் பெயரைச் சொல்லி, அவர் இருக்கிறாரா?’ என்று டெலிபோன் எக்ஸ்சேஞ்சலிருந்து ஒரு ஆண்குரல் கேட்டது, அந்த ஊழியருக்கு தூக்கி வாரிப் போட்டது, ‘நான் இங்கு இருப்பது யாருக்குத் தெரியும்? நான் சற்று காலார நடந்து வரத்தானே வந்தேன், இது எப்படி சாத்தியமாகும்?’ என்று நினைத்தவராக, ஒரு வார்த்தையும் பேசாமல், அப்படியே மலைத்து நின்றார். அந்த போனிலிருந்த குரல் மீண்டும், அந்த ஊழியரின் பெயரைச் சொல்லி, ‘தயவுசெய்து சொல்லுங்கள், அவர் அங்கிருக்கிறாரா?’ என்றுக் கேட்டது, அப்போது அவர் தன் நிலைக்கு வந்தவராக, ‘ஆம் நான் தான் பேசுகிறேன்’ என்றுச் சொன்னார். அப்போது ஒரு சகோதரி, அந்த போனில், ‘ஐயா, நான் இந்த இடத்திலிருந்து பேசுகிறேன். உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனால் நீங்கள் தேவ ஊழியர் என்று எனக்குத் தெரியும், தயவுசெய்து எனக்கு உதவுங்கள்’ என்று போனில் அழ ஆரம்பித்தார்கள். அப்போது, அந்த ஊழியர், ‘நான் உங்களுக்கு என்னச் செய்ய வேண்டும் சொல்லுங்கள்’ என்றுக் கேட்டார். அப்போது அந்த சகோதரி, ‘நான் என் பிரச்சனைகளினால் தற்கொலை செய்ய நினைத்து, ஒரு பேப்பரில், நான் ஏன் தற்கொலை செய்கிறேன் என்பதையும் எழுதிவிட்டு, தேவனிடம், நான் இதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் என்ன செய்வது என்று அழுதபோது, எனக்கு நீங்கள் டெலிவிஷனில் பேசியக் காரியம் ஞாபகத்தில் வந்தது, அப்போது நான் உங்களோடு பேசினால் என் துயரம் தீரும் என்று எண்ணி, உங்களை அழைக்க நினைத்தேன். ஆனால் உங்கள் நம்பர் எனக்கு தெரியாது, உதவிச் செய்யவும் யாரும் இல்லை, என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் சில நம்பர்கள் தோன்றியது, அந்த நம்பர்களை எழுதி வைத்து, இது தேவனிடமிருந்து வருகிற அற்புதமாயிருந்தால், இது உங்களுடைய நம்பராக இருக்கும் என்று எண்ணி, அழைத்தேன், அது சரியாக உங்கள் நம்பராக இருக்கிறது, இது உங்களுடைய ஆபீசின் நம்பரா?’ என்று கேட்டார்கள். அப்போது அந்த ஊழியர் நடந்த காரியங்களை அந்த சகோதரிக்கு அறிவித்தபோது அவர்களும் வியந்து, கர்த்தருடைய வழிநடத்துதலுக்காக தேவனை ஸ்தோத்தரித்தார்கள். பின் அந்த ஊழியர், அந்த சகோதரியின் பிரச்சனைகளுக்கு ஆவியானவரின் நடத்துதலின்படி, உதவி செய்தபோது, அவர்கள் சந்தோஷமாய் அந்த தற்கொலையின் எண்ணத்திலிருந்த விடுபட்டு, தேவனை அந்த போனின் மூலமாகவே ஏற்றுக் கொண்டு, இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவித்தார்கள்.

அந்த ஊழியர், மிகவும் சந்தோஷப்பட்டவராய், ‘நான் எங்கு இருக்கிறேன் என்பதையும் என்ன செய்கிறேன் என்பதையும் அறிந்த தேவன் என்னோடு இருக்கையில் நான் எதற்காக தேவையில்லாமல் கவலைப்பட வேண்டும்’ என்று, விசுவாசத்தில் உறுதியடைந்தார்.

அன்பு நண்பர்களே, இந்த சம்பவம் உண்மையில் நடந்த சம்பவமாகும். நம் தேவன், நம் மேல் கரிசனையுள்ளவர், நாம் சிந்திக்கிற சிந்தனைகளையும், எண்ணங்களையும்கூட அறிந்தவராக இருக்கிறார். எனக்கு யாருமில்லை, நான் கைவிடப்பட்டவன் என்று துயரத்தோடு இருக்கிறீர்களா? வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள தேவன், உங்களோடு இருக்கிறார், அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களை கைவிடுவதுமில்லை. நாமாக நினைத்துக் கொள்கிறோம் தேவன் என்னை கைவிட்டாரென்று. அவர் வார்த்தையில் உணமையுளளவர். அவர் நம்மை எந்த சூழ்நிலையிலும், கைவிடமாட்டார். நம் தாயும் நம் தந்தையும் கைவிட்டாலும் நம்தேவன் நம்மை சேர்த்துக் கொள்வார். கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களை நேசிக்கிற தேவன் உண்டு, உங்களை விசாரிக்கிற தேவன் ஒருவர் உண்டு, நீங்கள் அநாதையில்லை. உங்களை அன்போடு அரவணைக்கிற தேவன் இருக்கையில் நீங்கள் ஏன் சோர்ந்துப் போக வேண்டும்? அந்த ஊழியர் எங்கோ சென்றுக் கொண்டிருந்தவரை தேவன் அறிவாரானால், நீங்கள் இருக்கிற நிலைமையையும் கர்த்தர் நன்கு அறிவார். உங்களை தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். அதை அறிந்து அவர் சும்மா இருப்பாரா? உடனே உங்களுக்கு உதவ வருவார், சோர்ந்துப் போகாதிருங்கள். தேவன் உங்கள் பட்சத்தில் இருந்தால் உங்களுக்கு விரோதியாயிருப்பவன் யார்? கவலைப்படாதிருங்கள், தேவன் உங்கள் பக்கத்தில் உண்டு. அல்லேலூயா!

உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ

உன்னை உண்டாக்கியவர் உன்னை விடுவாரோ

கலங்கிடும் மாந்தரே கண்ணீரை துடைத்திடு

கவலையை விட்டுவிட்டுவா

இயேசுவை பின்பற்றிவா


ஜெபம்

எங்கள் உட்காருதலையும் எங்கள் எழுந்தரிக்குதலையும் அறிந்த எங்கள் நல்ல தேவனே உம்மைத் துதிக்கிறோம். உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே நாங்கள் போக முடியும்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடமுடியும் தகப்பனே? எங்களை தள்ளிவிடாமலும், எங்களை விட்டு விலகாமலும் இருக்கிறவரே, அதை நாங்கள் உணர்ந்து, எங்கள் கவலைகளை விட்டுவிட உதவிச் செய்யும். எங்கள் மேல் கரிசனையுள்ள தேவன் உண்டு என்பதை நாங்கள் மறந்துப் போகாதிருக்க கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


ஜெபக்குறிப்பு

எகிப்து (Egypt) நாட்டிற்காக ஜெபிப்போமா?egypt

1. எகிப்து ஒரு இஸ்லாமிய நாடாகும். இங்குள்ள ஒவ்வொரு மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.

2. இங்கு இருக்கிற ஆர்த்தோடாக்ஸ் மற்றும் காப்டிக் கிறிஸ்தவர்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் சத்தியத்தை அறிந்து சத்தியத்தின்படி தேவனை ஆராதிக்க ஜெபிப்போம். அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

3. அன்று மேல்வீட்டறையில் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்த போது எகிப்தியர்களும் அங்கு இருந்து அப்போஸ்தலர் அந்நிய பாஷைகளில் பேசுவதை கேட்டனர். அப்போது கிறிஸ்துவின் அன்பை கண்ட அவர்களின் ஆரம்ப நாட்களில் எகிப்து கிறிஸ்தவ நாடாக இருந்தது. கி.பி. 642 ல் அரபியர் படையெடுத்து நாட்டை கைப்பற்றியவுடன் இஸ்லாமிய நாடாக மாறியது. இங்குள்ள மக்கள் மீண்டும் கிறிஸ்துவை கண்டு கொள்ள நாம் ஜெபிப்போமா?


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment