அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள். ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். - (யாத்திராகமம் 32:4,5). இந்த நாட்களில் எங்கு பார்த்தாலும், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, கேரல் பாட்டுகளும், தங்கள் வீடுகளில் நட்சத்திரத்தை தொங்கவிட்டு, சீரியல் விளக்குகளை போட்டு, வீட்டையே ஜொலிக்க வைத்து, பண்டிகையை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இதில் என்னென்ன பலகாரம் செய்ய வேண்டும், என்ன உடை வாங்க வேண்டும் என்றும் திட்டமிட்டு, அதன்படி செய்யவும் நாம் ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் தவறில்லை. சிலருக்கு கிறிஸ்மஸ்க்கு மட்டும் தான் புதிய உடை கிடைக்கும், சிலருக்கு விடுமுறை கிடைக்கும்.
ஆனால், கிறிஸ்மஸ் பண்டிகையை மிக உற்சாகமாக பாட்டுக்களை பாடி கொண்டாடும் நாம், கிறிஸ்து வந்த நோக்கத்தை புரிந்திருக்கிறோமா? இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு அழைத்து செல்ல தேவனால் நியமிக்கப்படட தலைவனாகிய மோசே, தேவனால் ஜனங்களுக்காக எழுதி கொடுக்கபபட்ட உடன்படிக்கை பலகையை பெற்று கொள்வதற்காக 40 நாட்கள் இரவும் பகலும் சீனாய் மலையுச்சியில் தேவனோடிருந்தார். அவ்வேளையில் இஸ்ரவேல் ஜனங்கள் பொறுமையற்றவர்களாயினர். அவர்கள் ஆரோனிடத்திற்கு சென்று, 'மோசேக்கு என்னவாயிற்றோ தெரியவில்லை. அவர் வருவதும் நிச்சயம் என எங்களுக்கு தோன்றவில்லை. ஆகவே நீர் எழுந்து எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை உண்டு பண்ணும்' என்றார்கள். வணங்கா கழுத்துள்ள மக்களின் தவறுக்கு ஆரோனும் இசைந்து விட்டான். கண்டித்து உணர்ந்த தவறி, 'உங்களிடமுள்ள தங்க நகைகளை கொண்டு வாருங்கள்' என்று சொல்லி அவற்றை வைத்து ஒரு கன்றுகுட்டியை உருவாக்கினான். அப்பொழுது அவர்கள்: 'இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே' என்றார்கள். ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, 'நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை' என்று கூறினான். முன்னால் இருப்பதோ கன்றுகுட்டி, ஆனால் அவன் அறிவித்ததோ, நாளைக்கு கர்த்தருக்கு பண்டிகை என்று! என்ன ஒரு துணிகரம்! மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள். - (யாத்திராகமம் 32:6). கர்த்தருக்கு அவர்கள் பண்டிகை கொண்டாட ஆரம்பித்தார்கள். அப்போது அவர்கள் மேல் கர்த்தருடைய கோபம்; இறங்கி வர இருந்தது. மோசே அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று, கர்த்தரிடம் வேண்டி கொண்டபோது, கர்த்தர் அவர்கள் மேல் தீங்கு செய்யாதபடிக்கு பரிதாபங்கொண்டார். - (யாத்திராகமம் 32:14). இன்றைய நாட்களிலும், பண்டிகை என்னவோ கிறிஸ்து பிறந்தார் என்பதற்காக இருந்தாலும், முன்னால் இருப்பதோ வேறு காரியங்கள்! அந்த நாளிலே அதிகமாய் குடிப்பதும், இரவு முழுவதும் நடனமாடி கொண்டிருப்பதும், கர்த்தர் விரும்பாத செய்கைகளை செய்வதுமே கிறிஸ்மஸ் பண்டிகை என்றாகி விட்டது. கர்த்தர் இந்த காரியத்தில் பிரியப்படுவாரோ? நம்மையே ஆராய்ந்து பார்ப்போம்! தேவகுமாரன் பிறந்த நாளை இப்படியெல்லாம் கொண்டாடுகிறீர்களே என்று அவர் சந்தோஷப்படுவாரோ? சிலர் ஆலயங்களிலும் ஆராரோ பாட்டு பாடி கொண்டிருக்கிறார்கள்! இன்னும் உலக இரட்சகரை சிறுகுழந்தையாக பாவித்து, தாலாட்டு பாட்டு பாடி கொண்டிருக்கிறார்கள். அவர் இன்னும் குழந்தையல்ல, அவர் இரண்டாவது முறை வரப்போகிறார். குழந்தையாக அல்ல, நீதியை செலுத்த போகும் இராஜாதி இராஜனாக! அவரது இரண்டாவது வருகை மிகவும் சமீபித்த விட்ட இந்த நேரத்திலும், இன்னும் ஆராரோ பாட்டு பாடி அவரை தாலாட்டி தூங்க வைத்து கொண்டிருப்பது எத்தனை வேதனையான காரியம்! 'பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது' - (1 தீமோத்தேயு 1:15) என்ற வார்த்தையின்படி முதலாவது முறை பாவிகளை இரட்சிக்க வந்த கிறிஸ்து இப்போது இரண்டாவது முறையாக வரப்போகிறார். எல்லா மக்களும் தம்மை ஏற்று கொள்ள வேண்டும் என்கிற காரணத்தினால், தாழ்மையாக அரச அரண்மனையிலல்ல, இருக்க இடமில்லாமல், தாழ்மையுள்ள மாட்டுகொட்டிலில் பிறந்த இயேசு, இப்போது வருகிற போதோ, இராஜாதி இராஜாவாக, உலகத்தை ஜெயித்தவராக, ஜெய கிறிஸ்துவாக, ஆயிரம் வருஷம் இந்த உலகத்தை சமாதானத்தோடு ஆளப்போகிறவராக வரப்போகிறார். அதற்கு முன் நடைபெற இருக்கிற இரகசிய வருகைக்கு நாம் ஆயத்தப்பட்டிருந்தால், அவரது இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்பட்டு, அவர் இராஜாதி இராஜாவாக வரும்போது, அவரோடு கூட வந்து, அவரோடு கூட ஆளுகையும் செய்வோம். கர்த்தருக்கு பண்டிகை என்று சொல்லி கொண்டு, நாம் நம் மனவிருப்பத்தின்படி வாழ்கிறவர்களாக இல்லாதபடி, கிறிஸ்து நம் ஒவ்வொரு உள்ளத்திலும் பிறந்திருக்கிறவராய், அவரது இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்த தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா! எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம் இயேசு வருகின்றார் ஒரு நொடி பொழுதில் மறுரூபமாவோம் மகிமையில் பிரவேசிப்போம் குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அன்பரின் திருப்பாதத்தில்
|
No comments:
Post a Comment