பிசாசானவன்.. ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். - (யோவான் 8:44).
அப்போஸ்தலனாகிய யோவான் இயேசுகிறிஸ்து எதற்காக உலகத்தில் வெளிப்பட்டார் என்று கூறும்போது, பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே வெளிப்பட்டார் என்று கூறுகிறார். - (1 யோவான் 3:8).
அந்த பிசாசின் கிரியை ஏதோ ஒரு காலத்தில் மட்டுமல்ல, பிசாசின் கிரியை எல்லா மனிதர்களுக்குள்ளும் இயற்கையாக நிகழ்கிறது. அந்த செயல்பாடுள்ள ஒவ்வொரு மனிதர்களிடத்திலிருந்தும் வெளிப்படும் தவறான குணங்கள், விரும்பத்தகாத சுபாவங்கள், முரட்டாட்டமான இயல்புகள், தப்பிதமான பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவை அடையாளப்படுத்துகின்றன. கோபம், பொறாமை, எரிச்சல், விரோதம், கசப்பு, பொருளாசை, பெருமை, பழிக்குபழி போன்ற துர்க்குணங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்குள் பிசாசின் செயல்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. சமுதாயத்தில் நிலவும் அனைத்து தீவினைகளுக்கும் காரணம் தனி மனிதர்களின் இருதயம் பிசாசின் ஆளுகைக்கு உட்பட்டு, அவனுடைய பொல்லாத கிரியைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதினாலேயே. எனவே மனிதனுக்குள் நடைபெறும் பிசாசின் கிரியைகளை அழிக்க இருதயத்திற்குள் ஒரு இரட்சகர் வரவேண்டிய தேவை உள்ளது. அவ்விதம் வந்து பாவத்தின் கட்டுகளையும், பிசாசின் கிரியைகளையும் அழித்து அவனை விடுதலையாக்க கிறிஸ்து உலகத்திற்கு வ்நதார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமது கனத்தையும், ஆராதனையையும், காணிக்கைகளையும், துதி ஸ்தோத்திரங்களையும் பெறுவதை பிரதான நோக்கமாக கொண்டு பூமிக்கு வரவில்லை. அவர் ஒரு விசேஷ செயலை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் செய்ய வந்தார். நமக்குள் இயங்கி கொண்டிருக்கும் பாவத்தின் ஆதிக்கத்தை அழித்து அப்புறப்படுத்தவே வந்தார். மருத்துவரை வரவேற்பதிலேயே முழு கவனம் செலுத்தி, சிகிச்சை பெறாமல் போன மக்களை போல நாம் இராமல், முதலாவது ஆண்டவரை நமக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறின்றி, நாம் செய்கின்ற அத்தனை வழிபாடுகளும், ஆராதனைகளும் பண்டிகை கொண்டாட்டங்களும் அர்த்தமற்றவைகளே. அவைகள் தேவனை பிரியப்படுத்தாமல், கோபப்படுத்தவே செய்யும். அன்று பஸ்கா பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடிய எருசலேம் மக்களை பார்த்து இயேசு கண்ணீர் விட்டார் - (லூக்கா 19:41). ஏனென்றால் பஸ்கா பண்டிகை என்பது விடுதலையை நினைவு கூரும் பண்டிகை. ஆனால் அந்த மக்கள் விடுதலையின்றி, விடுதலையை அளிக்கும் தேவனை குறித்தோ சிந்தியாமல் வெறும் பாரம்பரிய பணடிகை கொண்டாட்டத்தில் மூழ்கி போயிருந்தனர். அன்று எருசலேமை பார்த்து அழுத இயேசு இன்று நம்மை பார்த்து மகிழ முடியுமா? அவர் நமக்காக ஆயத்தமாக்கிய பாவ விடுதலையையும், இரட்சிப்பையும் பரிசுத்த வாழ்கையும் நாம் விரும்பி பெற்று கொண்டிருந்தால், அவர் நம்மையும், நம்முடைய ஆராதனைகளையும் கண்டு மகிழுவார். நாம் பாவத்தை குறித்தும் பரிசுத்த வாழ்கை குறித்தும் கவலைப்படாமல் இருப்போமானால் அவர் நம்மை பார்த்து கண்ணீர் விடத்தான் முடியும், இனியாவது கிறிஸ்து உலகிற்கு வந்ததன் நோக்கத்தை நம்மில் நிறைவேற கர்த்தருக்கு நம்மை ஒப்புகொடுப்போமா? பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரையா மனுஷரை மீட்கவே பரலோகம் சேர்க்கவே சிலுவையை சுமந்தாரையா நான் தேடி போகவில்லை என்னை தேடி வந்தாரையா எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
|
No comments:
Post a Comment