மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. - (யாத்திராகமம் 15:25).
மாரா என்பதற்கு கசப்பு என்று அர்த்தமாகும். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து அதிசயவிதமாக புறப்பட்டு, செங்கடலை கடந்து, வெறும் மூன்று நாட்களே ஆகியிருந்தது. அவர்கள் சந்தித்த முதல் பிரச்சனை தண்ணீர் இல்லாததே! எப்படியோ தண்ணீரை அவர்கள் தேடி கண்டு பிடித்தாலும், அதை ஆவலோடு குடித்த போது, அது குடிக்க முடியாதபடி கசப்பாயிருந்தது. உடனே ஜனங்கள் முறுமுறுக்கவும், மோசேயிடம் குறை சொல்லவும் ஆரம்பித்தார்கள்.
இப்போது மோசேக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆறு இலட்சம் புருஷர் மாத்திரம் அது தவிர பெண்களும் பிள்ளைகளும் சூழ நின்று தண்ணீருக்காக கதறி கொண்டிருந்தபோது, மோசே கர்த்தரை நோக்கி கூப்பிட்டார். கர்த்தர் உடனே அவருக்கு ஒரு மரத்தை காண்பித்தார்.
முறுமுறுக்கிறவர்களாயிருந்தாலும், தேவன் நம்மை ஆதரிக்கிற மற்றும் நம் தேவைகளை சந்திக்கிறவராயிருக்கிறார். நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் எதற்காவது காத்திருந்து, ஆனால் அது கிடைத்த போதோ கசப்பானதாக, விரும்பத்தகாததாக இருப்பதினால் இன்று நீங்கள் முறுமுறுத்து கொண்டிருக்கிறீர்களோ? அதை விட்டுவிட்டு, கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள். அவர் உங்களை அற்புதமாக வழிநடத்துவார்.
இப்போது ஒரு மரம் மோசேக்கு காண்பிக்கப்பட்டது. ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம், இந்த சிறிய மரத்துண்டு, என் பெரிய பிரச்சனையை தீர்க்குமா? என்று. நிச்சயமாக இல்லை. ஆனால் கர்த்தர் அநத மரத்துண்டை எடுத்து உபயோகிக்கும்போது, நிச்சயமாகவே அது பெரிய காரியங்களை சாதிக்கும். ஒருவேளை உங்களுடைய பிரச்சனைக்கு அந்த மரத்துண்டு, வெறும் மரமாக காட்சியளிக்கலாம், ஆனால் கர்த்தர் அதை உங்களுக்கு காட்டியிருந்தால், அதுவே உங்கள் கசப்பான வாழ்க்கையை மதுரமாக்க கூடியதாக மாறும்.
மோசே அந்த மரத்தை எடுத்து தண்ணீரில் போட்ட போது, அது சுவைமிக்க தண்ணீராக மாறியது. உண்மை என்னவென்றால், கர்த்தர் அந்த தண்ணீரை சுவையாக மாற்றவில்லை. ஆனால் அதை மாற்றக்கூடிய மரத்தை அவர் காண்பித்தார். மோசே அதற்கு கீழ்ப்படிந்த போது, அந்த தண்ணீர் சுவையானதாக மாறியது. உங்கள் வாழ்க்கையிலும், வந்திருக்கும் கசப்பான காரியங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் நீங்கள், முறுமுறுத்து கொண்டிராமல், கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டும். கர்த்தர் நம் ஜெபங்களை நிச்சயமாய் கேட்கிறவர். மோசே கர்த்தரை நோக்கி கூப்பிட்ட போது, கர்த்தர் உடனடியாக அந்த கசப்பான நீரை மதுரமாக்கி விடவில்லை. மாறாக, ஒரு மரத்தை காண்பித்தார். ஆகையால், நாம் தேவனை நோக்கி கூப்பிடுவது மட்டுமல்ல, சில நேரங்களில் அவர் சொல்லும் காரியத்தை நாம் செய்ய வேண்டும். அவர் சொல்லுவதை செய்யாமல், கர்த்தர் எல்லாம் பார்த்து கொள்வார் என்று சும்மா இருந்தோமானால், ஒரு நாளும், கசப்பான நீர் மாறப்போவது இல்லை. உங்கள் தாகமும் தீரப்போவது இல்லை. உங்கள் வாழ்க்கையிலும் இருக்கிற கசப்பான காரியங்கள் மாற, நீங்கள் தேவன் சொல்வதை செய்வதினால், உங்கள் வாழ்க்கை சுவையானதாக தேவன் மாற்றுவார்! ஆமென், அல்லேலூயா!
வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது மாராவின் நீரை தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு
தேவா நான் எதினால் விசேஷித்தவன் ராஜா அதை தினம் யோசிப்பவன் எதினால் அது எதினால் நீர் என்னோடு வருவதினால்
|
|
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும், எங்கள் வாழ்க்கையிலும் நாங்கள் மாராவின் கசப்பை போன்ற சூழ்நிலைகளில் கடந்து வருகிறோம் ஐயா. அதனால் நாங்கள் முறுமுறுக்கிறவர்களாக மாறி விடாதபடி எங்களை காத்து கொள்ளும். மாராவின் கசப்பை மதுரமாக மாற்றின தேவன், நாங்கள் உம்மை நோக்கி கூப்பிடும்போது, எங்களுக்கு கசப்பு மாறும்படியான வழியை வெளிப்படுத்துவீராக. அதனால் நாங்கள் தேவ கிருபையினால், எங்கள் வாழ்க்கையை சுவையுள்ளதாக மாற்றவும் உமக்கு சாட்களாக வாழவும் கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
|
|
No comments:
Post a Comment