இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).
ஒரு வயதான மனிதருக்கு, ஒரு பழைய வீடு ஒன்று இருந்தது. அதை விற்கக் கேட்டு சிலர் அவரை அணுகினார்கள். அந்த மனிதரும் சந்தோஷமாய் அதை விற்க ஒப்புக் கொண்டு, அவர்கள் கேட்ட பணத்திற்கு விற்க ஒத்துக் கொண்டார். பிறகு, அந்த வீட்டிற்கு வெளியே பெயின்ட் அடித்து, மேலே கூரையை திரும்ப சரியாக்கி, அந்த வீட்டைக் கொடுக்கும்போது அழகாக கொடுக்க வேண்டும் என்று, வீட்டின் முன்னால் இரண்டு மரங்களையும் நட்டார். அதை வாங்கியவர்கள் இந்த வீட்டை வாங்கியதற்காக பெருமைப்பட வேண்டும் என்று அவற்றை செய்து முடித்து, அதை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அந்த வீட்டை வாங்கியவர்கள், ஒரு புல்டோசரைக் கொண்டு வந்து அந்த வீட்டை இடிக்கத் தொடங்கினார்கள். அதைக் கண்ட அந்த வயதான மனிதன், பதறிப் போய், ‘ஏன் இடிக்கிறீர்கள்?’ என்றுக் கேட்டார். அதற்கு அந்த வீட்டை வாங்கியவர்கள், ‘ஐயா, எங்களுக்கு ஒட்டுப் போடப்பட்ட இந்த பழைய வீடு வேண்டாம், இந்த இடத்தில், வானளாவும் கட்டிடம் கட்டப் போகிறோம். அந்த கட்டிடத்திற்கு முன்னால், நீரூற்று இருக்கும். கார்கள் நிறுத்தப்பட பெரிய இடம் இருக்கும். அநேகர் வந்து குடியிருக்கத்தக்கதான பெரிய அபார்ட்மென்டை இந்த இடத்தில் கட்டப் போகிறோம்’ என்றுக் கூறினர்.
நமது தேவனும் நம்மிடத்தில் காணப்படும் சில நல்லக்காரியங்கள், சில நல்ல செய்கைகள் இவற்றைக் கொண்டு ஒட்டுப் போடப்பட்ட வாழ்க்கையை விரும்புவதில்லை. நம்முடைய நீதிகள் அழுக்கான கந்தை என்று அவர் அறிவார். அவர் நம்மை முற்றிலும், புதிய சிருஷ்டியாக, தம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றவே விரும்புகிறார். ‘தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்’ - (ரோமர் 8:29).
சிலர் நினைக்கிறார்கள், தாங்கள் செய்யும் நல்லக் காரியங்களைக் கண்டு, தேவன் அவர்களை பாராட்டி, அவர்களுக்கு பரலோகத்தில் இடம் தருவார் என்று நினைத்து, ‘நான் யாருக்கும் கெடுதல் செய்வதில்லை, மற்றவர்களுக்கு உபகாரம்தான் செய்கிறேன், ஏன், என்னுடைய நிலைமைக்கும் மீறி நான் உதவி செய்கிறேன்’ என்று தங்களையே புகழ்ந்துக் கொள்வார்கள். தேவன் இரட்சிக்கப்படுவதற்கு என்று தம் சொந்தக் குமாரனையே அனுப்பி, அவருடைய இரத்தத்தினாலேயே மனுக்குலத்திற்கு இரட்சிப்பு என்று நியமித்திருக்க, நம்முடைய எந்த நல்ல காரியங்களும் நம்மை இரட்சிக்காது, பரலோகத்தில் சேர்க்காது. இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்று வேதம் நமக்கு கூறுகிறது.
ஒரு மனிதன், தன் வாழ்நாள் முழுவதிலும், ஒரே ஒரு பாவத்தை மட்டும்தான் செய்தான் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஒரே ஒரு பாவத்தினிமித்தம் அவன் பரிசுத்தமுள்ள தேவனை தரிசிக்க முடியாது. ஏனெனில் அவர் பாவத்தைக் காணாத சுத்தக் கண்ணர். மகா பரிசுத்தமுள்ள தேவன். அப்போ யார்தான் இந்த மகா பரிசுத்தமுள்ள தேவனிடத்தில் சேர முடியும்? என்று நாம் நினைக்கலாம், அதற்காகவே, தேவன் ஒரு அருமையான வழியை மனுக்குலத்திற்கு வைத்திருக்கிறார். அதுதூன் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவமன்னிப்பு, அவருடைய இரத்தத்தினால் நித்திய ஜீவன் நமக்கு இலவசமாக அருளப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் ஒவ்வொரு மனிதனுடைய சுய விருப்பத்திற்கு விடப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக் கொண்டால் நமக்கு நித்திய ஜீவன், நிராகரித்தால், நித்திய அழிவு. இதற்கு மேல் வேறு ஒரு Option or Choice யாருக்கும் கிடையாது. கர்த்தர் உங்களை நேசிப்பதால், இந்த கட்டுரையை நீங்கள் படிப்பதற்கு ஒரு தருணததைக் கொடுத்திருக்கிறார். இது ஏதோ கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட ஒன்று என்று நினைக்காதபடிக்கு சிந்தியுங்கள். கிறிஸ்தவம் ஒரு மதமல்ல, அதுவே வழி.
தேவன் அளிக்கும் கிருபையை பெற்றுக் கொண்டு, அவருடைய நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். - (ரோமர்:6:23). ஆமென் அல்லேலூயா!
வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? பாவியை ஒரு போதும் தள்ளாத நேசர் வாவென்று உன்னை அழைக்கிறாரே
|
|
எங்களை அளவில்லாமல் நேசிக்கும் எங்கள் நல்ல தேவனே, உம்முடைய மட்டற்ற கிருபையால் நாங்கள் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி, பாவத்தை காணாத சுத்தக் கணணராகிய நீர், ஒரு வழியையும் கொடுத்து, உம்முடைய குமாரனுடைய இரத்தத்தினால் பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பையும் அருளியிருக்கிறீரே அதற்காக உமக்கு நன்றி. அதை ஏற்றுக் கொள்ளும் இருதயத்தை ஒவ்வொருவருக்கும் கிருபையாக கட்டளையிடுவீராக. இருதயம் கடினப்பட்டு போகாதபடிக்கு, காத்துக் கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
|
|
No comments:
Post a Comment