Friday 25 March 2011

உண்மையுள்ள ஊழியக்காரன்


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 நவம்பர் மாதம் 15-ம் தேதி - திங்கள் கிழமை
உண்மையுள்ள ஊழியக்காரன்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
'நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று' - (2தீமோத்தேயு 4:5).

வருகையின் தூதன் என்னும் பத்திரிக்கையை நம்மில் அநேகர் படித்ததுண்டு. அதன் ஆசிரியரான போதகர் தேவதாசனையும் நாம் அறிவோம். வருகையின் தூதன் மொத்தம் ஏழு மொழிகளில் வெளிவந்தது.

போதகர் தேவதாசன் அவர்கள் மெல்லிய சரீரத்தை உடையவர், மேடையில் ஒரு நிமிடம் கூட நிற்காமல், ஓடியாடி இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து எப்போதும் பிரசங்கிப்பார். அவர் 'நீங்கள் மட்டும் ஆயத்தமாவது போதாது, மற்றவர்களையும் ஆயத்தப்படுத்த வேண்டும்' என்று போதிப்பார். அவர் ஒரு நிகழ்ச்சியை சொல்லி, எப்படி நாம் கர்த்தருக்காக உழைக்க வேண்டும் என்று சொல்வார். ஒரு முறை அவர் நாகர்கோவிலில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் கூட்டமான மக்கள் கூடியிருந்தனர். அவர் எட்டி பார்த்தபோது, அங்கு ஒரு மாடு மாட்டு வண்டியின் பக்கத்தில் படுத்து கிடந்தது. அதன் சொந்தகாரரும் மற்ற மக்களும் அந்த மாட்டை எழுப்ப முயற்சித்தும் அது அசையவேயில்லை. அது சாகும் தருவாயில் இருந்தது. போதகர் தேவதாசன் அவர்கள், அந்த மாட்டின் கண்களை பார்த்தபோது, அந்த மாடு, 'மாட்டுகாரனே, மாட்டுக்காரனே, இத்தனை வருடங்கள் நான் உமக்கு பாரத்தை சுமந்து என்னால் இயன்றதை உமக்கு செய்து முடித்து விட்டேன். இப்போது நான் மரிக்கும் நேரம் வந்து விட்டது' என்று சொல்வதாக கண்டார். அந்த இடத்திலேதானே அவர் ஒரு தீர்மானத்தை எடுத்தவராக ஒரு ஜெபத்தை செய்தார். 'என்னுடைய கடைசி மூச்சி நிற்கும்வரை இந்த மாட்டை போல நான் உமக்கு உண்மையாக உழைக்க எனக்கு உதவி செய்யும்' என்று ஜெபித்தார்.

அதன்படியே அவர் தன் இறுதி மூச்சுவரை கர்த்தருக்காக வைராக்கியமாக உழைத்து, 2005ம் ஆண்டு, நவம்பர் மாதம் 13ம் தேதி கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அவர் மரிக்கும்போது, அவருக்கு வயது 100க்கும் மேல்.

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. தீங்கநுபவித்தும், மனத்தெளிவுள்ளவனாக, கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த கடைசி நாட்களில் தேவனுடைய சுவிசேஷத்தின் நற்செய்தியை உண்மையாக எடுத்து கூறவேண்டும். போலி தீர்க்கதரிசிகளாக அல்ல, கள்ள தீர்க்கதரிசிகளாக அல்ல! தேவனுடைய சமுகத்தில் காத்திருந்து அவரிடமிருந்து பெற்று கொண்ட வார்த்தைகளை போதிக்கிற போதகர்கள் இந்த நாட்களில் பார்ப்பது எவ்வளவு கடினம்!

சனிக்கிழமை இரவு வரை உலக காரியங்களில் மூழ்கியிருந்து விட்டு, கடைசி நிமிஷத்தில் உட்கார்ந்து, இன்டர்நெட்டிலிருந்தும், கையில் இருக்கிற எத்தனை ரெபரன்ஸ் வேதாகமங்களையும் உருட்டி, ஏதோ ஒரு செய்தியை எடுத்து மக்களுக்கு போதித்தால் நிச்சயமாக மக்களுக்கு அது ஒரு செய்தியாக இருக்கவே முடியாது. ஏதோ வேதாகமத்தை வாசித்தது போல தான் இருக்கும். நம் தேவன் பேசுகின்ற ஆண்டவர். தமது சமுகத்தில் காலையில் ஆவலோடு மக்கள் வந்து தம்முடைய செய்திக்காக காத்திருப்பார்கள் என்று அவருக்கு தெரியும், அந்த மக்கள் எந்த சூழ்நிலையிலிருந்தும், கஷ்டத்திலுமிருந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிவார். அவர் தம்முடைய ஊழியக்காரர் மூலம் அவர்களை ஆறுதல் படுத்த வேண்டும் என்று நினைக்கும்போது, அந்த ஊழியக்காரர்கள் அவருடைய வார்த்தையை கேட்காமல், அவருடைய சமுகத்தில் காத்திருக்காமல், தாங்களாக எதையாவது சொல்லும்போது, அவருடைய மனம் எத்தனை வேதனைப்படும்?

ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை (எபிரேயர் 4:5). இப்படி கனமான ஊழியத்தை பெற்றவர்கள் ஏனோதானோவென்று ஊழியம் செய்யலாமா? உண்மையாக செய்யும்போதுதானே கர்த்தரால் உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று மெச்சி கொள்ளப்பட முடியும்?

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2தீமோத்தேயு 4:7) என்று நற்சாட்சி சொல்லும்படியாக ஒவ்வொரு ஊழியக்காரர்களும் மாறும் படியாக தேவன் தாமே கிருபை செய்வாராக!

ஜெபத்தின் ஜெயங்களாய் முன் செல்வோம்
தியான ஊற்றுகளில் தூது பெறுவோம்
மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கர்த்தரை காண்போம்
லேவியரே ஆசாரியரே
ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே 
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்முடைய சமுகத்தில் காத்திருந்து உம்முடைய வார்த்தைகளை பெற்று போதிக்கிறவர்களாக ஒவ்வொரு போதகர்களையும் மாற்றுவீராக. குனமான ஊழியத்தை பெற்று கொண்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்பை உணர்ந்து, உமக்கென்று உண்மையாக தங்கள் இறுதி மூச்சு வரை ஊழியம் செய்ய கிருபை தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
இந்த நாளில் காமிரூன் (Cameroon) நாட்டிற்காக ஜெபிப்போமா?
cameroon

1) 260 மொழிகளுக்கும் மேலாக பேசும் இந்த நாட்டில், மத சுதந்திரம் உண்டு. கிறிஸ்தவ நாடு என்னப்பட்டாலும், மற்ற மதத்தினரும் அதிகமாக உள்ள இந்த நாட்டில் அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2) இங்கு பேசப்படும் ஒவ்வொரு மொழியிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட ஜெபிப்போம்.


3) இந்த நாட்டில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனை கொடுக்க ஜெபிப்போம்.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment