கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும்,நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். - (2 கொரிந்தியர் 2:14-15)
ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கிறஸ்தவ குடும்பம் மிஷனரிகளாக ஒரிசாவில் தங்கி ஊழியம் செய்து வந்தார்கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவு குஷ்டரோகிகளுக்கும், சமுதாயத்தில் துச்சமாக எண்ணப்பட்டவர்களுக்கும் நடுவில் இருந்து கிறிஸ்துவின அன்பை வெளிப்படுத்தி, அங்கு அவர்கள் மத்தியில் 34 வருடங்களாக ஊழியம் செய்து வநதனர். அவர்களுக்கு ஒரு மகளும். இரண்டு மகன்களும் இருந்தனர். அவர்கள், கிரஹம் ஸ்டெயின் மற்றும் அவரது மனைவி கிளாடிஸ் ஸ்டெயின் ஆவர்.
1999-ம் வருடம் ஜனவரி மாதம் 23ம் தேதி இந்தியர்களை தலை குனிய வைத்த நாள். கிரஹம் ஸ்டெயின் தன் மகன்கள் பிலிப்பு (11 வயது), தீமோத்தேயு (6 வயது) அவர்களோடு, ஒரிசாவில் இருந்த காட்டில் தங்கள் ஊழியத்தை முடித்து, இரவில் தங்கள் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு 50 பேர் அடங்கிய அரக்கர் கூட்டம், ஒன்றுமறியாத ஆடுகளைப் போன்று உறங்கிக் கொண்டிருந்த, அந்த களங்கமில்லாத மூவர் இருந்த ஜீப்பின் மேல் கெரோசினை ஊற்றி தீக்கொளுத்தியது. ஜீப் பற்றி எரிந்துக் கொண்டிருந்தபோது, ஒரு வேளை கிரஹம் தன் பிள்ளைகளையாவது விட்டுவிடுமாறு அந்த ஓநாய் கூட்டத்திடம் மன்றாடியிருந்திருப்பார். ஆனால் மூர்க்க வெறிக் கொண்ட அந்தக் கூட்டம் மூவரையும் துடிக்க துடிக்க உயிரோடு எரிந்ததைக் கண்டு ரசித்தது. பாவமறியாத பிள்ளைகள் துடிப்பதைக் கண்டும் அந்த அரக்கர்களின் மனம் இரங்கவில்லை. அப்போது கிரஹம், தன் பிள்ளைகளை தன் மார்போடு அணைத்தவராக, அந்நாளில் அம்மூவரும் கர்த்தருக்கென்று இரத்த சாட்சிகளாக மரித்தார்கள்.
கிரஹம் மிகவும் தாழ்மையுள்ளவராக, அற்புதமானவராக, மற்றவர்களுடைய குறைகளைக் கேட்டு அதைத் தீர்த்து வைப்பவராக, விசுவாசவீரனாக, தேவனுடைய மனிதனாக வாழ்ந்தவர். அவருடைய அடக்க ஆராதனையில், அநேக இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் என்று நாடே திரண்டு வந்திருந்து, அவர்களை கொன்றவர்களை வன்மையாக கண்டிக்கும் வகையில் கூடி, அவர்களை கௌரவித்தனர்.
அப்போது அவரது மனைவியாகிய கிளாடிஸ் ஸ்டெயின் அவர்கள் பேசிய வார்த்தைகள், அநேகருடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சொன்னார்கள், ‘எனக்கு சொல்வதற்கு ஒரே ஒரு செய்திதான் உண்டு, அது என்னவென்றால் எனக்கு யார் மேலும் கசப்பு இல்லை. யாரையும் நான் வெறுக்கவுமில்லை. எனக்கு ஒரே ஒரு பாரம்தான் உண்டு, அது, இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்களுக்காக, தங்கள் பாவங்களுக்காக மரித்த இயேசுகிறிஸ்துவின் அன்பை உணர வேண்டும். நாம் வெறுப்பை எரித்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம்’ என்று கூறி தன் கணவரையும், தன் இரண்டு சிறிய மகன்களையும் உயிரோடு எரித்தவர்களை ‘மன்னிக்கிறேன்’ என்று மன்னித்தார்களே அங்கு அவர்கள் ‘இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்’ என்று தங்களுடைய நற்கந்தத்தை வெளிப்படுத்தினார்கள். எந்த ஒரு தாயும் சொல்ல முடியாத வார்த்தைகளை அவர்கள் அன்று சொன்னார்கள். அவர்களுடைய 13 வயது நிரம்பிய மகள் எஸ்தரிடம், தகப்பனுடைய இந்த கொடூர மரணத்தைக் குறித்து கேட்டபோது, அவள் சொன்னாள், ‘தமக்காக என் தகப்பன் மரிக்கும்படி என் தேவன் அவரை தகுதியாக எண்ணினாரே அதற்காக அவரை நான் ஸ்தோத்தரிக்கிறேன்’ என்றாள். என்ன ஒரு விசுவாச அறைகூவல்!! என்ன ஒரு ஞானமுள்ள வார்த்தைகள்! பெற்றோரின் விசுவாசம் சிறுவயதிலிருந்தே அவளுடைய இருதயத்தில் வேர் கொண்டிருப்பதை அவளுடைய பேச்சின் மூலம் அறியலாம்.
‘கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்ளூ உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை’ -(எபிரேயர் 11:37-38). ஆம் இந்த உலகம் அவர்களுக்கு பாத்திரமாயிருக்கவில்லை..
நாம் இன்று கர்த்தருக்காக நற்கந்தம் வீசுகிறோமா? அல்லது துர்க் கந்தம் வீசுகிறோமா? நம்மையே ஆராய்ந்துப் பார்ப்போம். அநேகருக்கு இந்த உலகம் பாத்திரமாயிருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தங்கள் நற்கந்தங்களை இந்த உலகத்தில் வீசி, கிறிஸ்துவின் அன்பை மற்றவர்கள் காணும்படியாக, ருசிக்கும்படியாக செய்தார்கள். நாமும் நம்மால் இயன்ற மட்டும், அவருக்கென்று நற்கந்தம் வீசுவோமா? கிறிஸ்து நமக்காக தன் ஜீவனைக் கொடுத்து, நற்கந்தம் வீசினாரே! அவருடைய நற்கந்தத்தை நாம் எடுத்து மற்றவர்களுக்கு பரப்ப தேவன் நமக்கு கிருபைச் செயவாராக! ஆமென்!
அந்த மாது கண்களின் நீரை அன்பரே உம் பாதம் ஊற்றினாளே! என் இதயமே தைலக் குப்பியே என்னை நொறுக்கி ஒப்படைத்தேன்
|
|
No comments:
Post a Comment