பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். - (மத்தேயு 6:19-21).
வில்லியம் போர்டன் (William Borden) என்னும் மிஷனரி, உயர்ந்த கல்வி கற்றவரும், பணக்காரருமாயிருந்தார். ஆனால் அவர் அந்த உலக செல்வங்களையெல்லாம் துச்சமாக எண்ணி, இஸ்லாமியர் மத்தியில் கிறிஸ்துவை அறிவிப்பதற்காக எகிப்து நாட்டிற்கு சென்றார். அங்கு அவர் தனக்கென்று ஒரு கார் கூட வாங்காமல் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஊழியத்திற்காக கொடுத்து, உற்சாகமாக அங்கு எகிப்தில் ஊழியம் செய்து வந்தார். ஆனால், அங்கு இருந்த நான்கே மாதங்களில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் Spinal card Meningitis என்னும் வியாதியால் பீடிக்கப்பட்டு, தனது 25ஆவது வயதில் அங்கு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அவரது சடலம் அங்கு எகிப்து நாட்டில் புதைக்கப்பட்டது.
எகிப்தை மிகவும் சிறு வயதில் ஆண்ட King Tutankhamen சாகும் போது வயது பதினேழுதான். அந்தக் காலத்தில் எகிப்தியர் மரணத்திற்குப்பின் வாழ்க்கை உண்டு என்று நம்பினபடியால், அந்த அரசன் மரித்த போது, தூய தங்கத்தில் செய்யப்பட்ட இரதங்களையும், ஆயிரக்கணக்கான தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களையும் கூட வைத்து புதைத்தனர். அந்த அரசனின் சடலம் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் தங்கத்தாலே செய்யப்பட்டு, அது தங்கத்தாலான குகைக்குள், அது ஒரு தங்கத்தாலான குகைக்குள் என்று அப்படியே மூன்று நான்கு தங்கத்தாலான குகைகளுக்குள் உள்ளே வைக்கப்பட்டு இருந்தது. ஏனெனில் தங்கள் அரசன் அங்கு தன் வாழ்வை சந்தோஷமாய் கழிக்கும்படியாக அதை அவர்கள் அமைத்திருந்தனர். 1922ஆம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டர் (Howard Carter) என்பவர் அதைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் 3000 ஆண்டுகள் அது அப்படியே வைக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு பேருடைய கல்லறைக்கும் தான் எத்தனை வித்தியாசம்? ஒருக் கல்லறை ஏதோ ஒரு இடத்தில் தூசி படிந்ததாக, கேட்பாரற்று, ஒரு மூலையில் இருக்கிறது. மற்ற கல்லறையோ ஆடம்பரமாக, எல்லா வசதிகளும் நிறைந்ததாக, செல்வாக்கு நிறைந்ததாக, எல்லாரும் வந்து கண்டு வியக்கும் வண்ணமாக உள்ளது. ஆனால் இந்த இரண்டு வாலிபர்களும் இப்போது எங்கே? என்றுப்பார்த்தால், தன்னை ஒரு இராஜாவாக, எல்லா சுகங்களையம் அனுபவித்த அரசன், கிறிஸ்து அல்லாத நித்தியத்திலே எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாதவனாக தன் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறான். மற்றவரோ தன் செல்வத்தையெல்லாம் கிறிஸ்துவுக்காக இழந்தவராக, உண்மையான இராஜாவுக்கு உண்மையாய் ஊழியம் செய்து, நித்திய நித்தியமாய் தேவனோடு சந்தோஷமாய் தன் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார்.
அரசன் டுட்டுவின் (King Tut) வாழ்க்கை சோகமானது. ஏனெனில் மிகவும் தாமதமாக அவன் கண்டுக் கொண்டான், தான் கொண்டு வந்திருந்த எந்த தங்கமும் செல்வமும் தன்னால் எங்கும் கொண்டு போக முடியாது, அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை. ஆனால் மற்றவரோ ‘பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை’ என்ற சத்தியத்தை அறிந்தவராக தன் பொக்கிஷத்தை பரலோத்தில் சேர்த்து வைத்தார். அதனால் தன் நித்தியத்தை வெற்றியாக முடிவு செய்தவராக அவர் நித்தியநித்தியமாக வாழ்கிறார்.
நம் பொக்கிஷங்களையும், பூச்சியாவது துருவாவது கெடுக்காத இடமாகிய கிறிஸ்துவினிடத்தில் சேர்த்து வைப்போம். உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். நம்பொக்கிஷம் உலகத்தின் காரியங்களிலே இருந்தால், நம் இருதயமும் அதிலே தான் இருக்கும். அதை எப்படி பாதுகாப்பது, அதை எப்படி பெருகச் செய்வது என்று அதன் மேலேதான் நம் இருதயம் இருக்கும். ஆனால் நம் பொக்கிஷம் ஜீவனுள்ள தேவனின் மேலே இருக்கும்போது, அது நிச்சயமாக பரலோகத்திலே சேர்த்து வைக்கப்படும். நாம் அங்கு செல்லும் போது, அதற்கான பதில் நமக்கு செய்யப்படும். பொக்கிஷம் என்பது, நாம் சம்பாதிக்கிற அல்லது நமக்கு நம் பெற்றோர் சுதந்தரமாக வைத்துக் போகிற சொத்துக்கள் மட்டுமல்ல, நாம் கிறிஸ்துவுக்குள் இருந்து செய்கிற ஒவ்வொரு நற்செயலும் ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. கிறிஸ்துவுககுள் இல்லாமல் இருந்து, நாம் செய்கிற எந்த நற் செயலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. அது சன்மார்க்க நெறியாகும். அது அல்ல பொக்கிஷம், நீதிமார்க்கமாய் நடந்து அல்லது நீதிமானாய் நடந்து, கர்த்தருக்குள் செய்கிற காரியங்களே நித்திய மகிமைக்குள் சேர்க்கப்படும். ஆமென் அல்லேலூயா!
திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி செல்வாக்குகள் மிக விருப்பினும் குருசை நோக்கி பார்க்க எனக்கு உரிய பெருமை யாவும் அற்பமே
|
|
பெல்ஜியம் (Belgium) நாட்டிற்காக ஜெபிப்போமா?
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் வளமிக்க தேசமாகும். கிறிஸ்தவ நாடு என்று சொன்னாலும், சுவிசேஷத்தை அறியாத மக்கள் இங்கு அதிகம். ஆடம்பரமும் செல்வ செழிப்பும், இந்த நாட்டு மக்களை தேவனை தேட விடவில்லை.
1) இந்த நாட்டில் சுவிசேஷம் பரவவும், சுவிசேஷத்திற்கு இந்த நாட்டு மக்கள் செவிகொடுக்கவும், இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.
2) பெல்ஜியத்தில் இருக்கிற சில சபைகளும் கர்த்தருக்கு உண்மையாக இருக்கவும், சத்தியத்தின்படி ஆராதிக்கவும் விசுவாசத்தில் ஊன்றி கட்டப்படவும் ஜெபிப்போம்.
3) இந்த நாட்டில் நடக்கும் எல்லா ஊழியங்களையும், ஊழியகாரர்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
|
|
No comments:
Post a Comment