'அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்'. - (ஆபகூக் 3:17-18)
தீர்க்கதரிசியாகிய ஆபகூக் தேவனிடம் இப்படியாக முறையிடுகிறார், 'தேவனே பாவிகள், கொடுமையானவர்கள், இருதயத்தில் தீங்கை பிணைக்கிறவர்கள் இவர்களெல்லாரும் சகல வசதிகளுடன் செல்வ செழிப்பாக வாழுகிறார்களே! உமக்கு பயந்து நடக்கும் நானோ இவ்வளவு கஷ்டப்படுகிறேனே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன், நீர் கேளாதவர் போல மௌனமாயிருக்கிறீரே' என்ற புலம்பினார். பின்பு தேவனது செயலையும், அவரது கிரியைகளையும் அறிந்தவுடன், எல்லாவற்றையும் விட தேவ உறவினால், வரும் சந்தோஷமே மேலானது என உணர்ந்து மிக அற்புதமாக தன் ஆத்துமாவை தேற்றி கொள்கிறார்.
அத்தி மரம் இருக்கிறது. ஆனால் துளிர்விடவில்லை, திராட்சை செடி வளர்ந்துள்ளது, ஆனால், பழம் உண்டாகவில்லை, ஒலிவ மரம் இருக்கிறது, ஆனால் அதில் பலன் இல்லை, வயல்கள் இருக்கிறது, ஆனால் தானியம் விளையவில்லை, தொழுவம் இருக்கிறது, ஆனால் ஆடுகளும், மாடுகளும் இல்லை. எல்லாம் இருந்தும், ஒன்றும் இல்லாத நிலைமை! இந்த நிலையில் தேவனையும், அவரோடுள்ள உறவின் ஆழத்தையும் அறிந்து கொண்ட ஆபகூக், 'இவைகளின் மத்தியிலும், குறைவிலும், ஒன்றுமில்லாமையிலும் நான் கர்த்தருக்கள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் தேவனுக்குள் களிகூருவேன்' என்கிறார். ஏனென்றால், அவருடைய மகிழ்ச்சியின் ஆதாரம் உலக பொருட்களை சார்ந்தவைகளாக இல்லை, உலகை சிருஷ்டித்த தேவனோடுள்ள உறவிலே இருந்தது. ஆகவே வயலின் விளைச்சலோ, நஷ்டமோ, ஆட்டு மந்தையின் பெருக்கமோ, நலிவோ, அவருடைய மகிழ்ச்சியை பாதிக்கவில்லை.
ஒரு மனிதனுக்கு குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதும், பிள்ளைகளுக்கு உயர்கல்வி கிடைத்திடும் போதும், வயலில் விளைச்சல் அதிகமாக இருக்கும்போதும், உறவினர்கள் எல்லாரும் அவர்களை நேசித்து, மதிப்பாய் நடத்தும்போதும் ஒருவன் மகிழ்ச்சியாய் இருப்பது இயற்கையானது. அதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டோர், கிறிஸ்துவை ஏற்று கொள்ளாதோர் என வித்தியாசம் காண முடியாது. ஆனால், இல்லாமையிலும், வெறுமையிலும், வறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்க ஒரு உண்மை கிறிஸ்தனாலேயே முடியும். அவன் மெய்தேவனின் உறவை அனுதினமும் அனுபவிப்பதால் அவனது சந்தோஷம் தேவனையே மையாமாக கொண்டுள்ளதால், உலக செல்வத்தின் போக்கும் வரத்தும் அவனது மகிழ்ச்சியை பாதிக்காது.
பிரியமானவர்களே, உங்கள் வீட்டில் பாத்திரமிருக்கிறது, ஆனால் உணவில்லையோ, உறவினர்கள் இருக்கிறார்கள், ஆனால் ஆதரவு இல்லையோ? எதிலும் தோல்வியின் மேல் தோல்வியோ? பிள்ளைகள் இருந்தும் அவர்களால் சமாதானமில்லையோ? எதுவானாலும் நீங்கள் தேவனோடு கொண்டுள்ள உறவு மட்டும் சரியாக இருந்தால் எப்போதும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் காணப்படலாம். எந்த பிரச்சனைகளின் மத்தியிலும் கர்த்தரை மாத்திரம் சார்ந்து கொண்டு, எந்த சூழ்நிலையிலும் முறுமுறுக்காமல் மனரம்மியமாய் இருக்கும் உங்களை அவர் வெறுமையாக விட்டு விடுவாரோ, நிச்சயமாக இல்லை! உங்கள் எல்லா குறைவுகளையும் நிறைவாக்குவார். உங்களுக்கு தேவையான யாவற்றையும் கூடவே கொடுத்து ஆசீர்வதிப்பார்.
உலக பொருளை விட தேவ உறவினால் வரும் சந்தோஷமே மேலானது என உணரும் உண்மை கிறிஸ்தவனாய் கிறிஸ்தவளாய் நாம் இருக்கிறோமா என சிந்தித்து பார்ப்போம். அப்படி கர்த்தருககுள் சந்தோஷமாய் இருந்தால், 'ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்' (ஆபகூக் 3:19) என்று ஆபகூக் உடன், நாமும் தைரியமாக கூற தேவன் கிருபை செய்வார்! ஆமென் அல்லேலூயா!
எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் உயிர் நண்பன் என்னை விட்டு பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னை தூற்றி திரிந்தாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன்
|
|
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுக்கு விரோதமாக எல்லா சூழ்நிலைகளும் எதிராக இருந்தாலும், எதுவுமே இல்லாமற் போனாலும், நாங்கள் உம்மை சார்ந்து, உம்முடைய உறவில் சந்தோஷாய் இருக்கும்போது, நீரே எங்கள் பெலனாக, எங்கள் கால்களை மான்களின் கால்களை போலாக்கி, எங்களை உயர்ந்த ஸ்தானங்களில் நடக்க பண்ணுகிற தேவன் நீரல்லவா? எங்கள் தலையை உயர்த்துகிற தேவன் நீரல்லவா? எங்களது இல்லாமைகளிலே நாங்கள் சோர்ந்து போகாதபடி எங்களை காத்து கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென். |
|
No comments:
Post a Comment