'புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்'. - (எரேமியா 10:2).
எத்தனையோ விதமான மூடப்பழக்க வழக்கங்கள் உடைய மக்களிடையே நாம் வாழ்ந்து வருகிறோம். வெளியே செல்லும்போது பூனை குறுக்கே சென்றால் சகுனம் சரியில்லையென்று திரும்பி வருபவர்களும் உண்டு, நல்ல நேரம் பார்த்தே காரியங்களை செய்பவர்களும் உண்டு. பிறப்பு, இறப்பு, திருமணம் என ஒவ்வொன்றிற்கும் மக்கள் சொல்லும் மூடப்பழக்க வழக்கங்கள் ஏராளம், ஏராளம்!
இப்படிப்பட்ட மக்கள் மத்தியிலே விசுவாசிகளாகிய நாம் எப்படி வாழ வேண்டுமென்று வேதம் நமக்கு தெளிவாக போதிக்கிறது. எரேமியா 10:2-ல் ஆண்டவர் முதலாவதாக கூறும் காரியம், 'புறஜாதிகளுடைய மார்க்கத்தை கற்று கொள்ள கூடாது' என்று கூறுகிறார். அவர்களின் மூடப்பழக்கத்தை குறித்து விசாரிப்போமானால் நாமும் அவர்களை போல் பயந்து அவைகளுக்கு அடிமையாகி விட வாய்ப்புகள் அநேகம் உண்டு. உதாரணத்திற்கு கண்திருஷ்டி என்ற காரியத்திற்கு பயப்படும் கிறிஸ்வர்களும் அநேகர் உண்டு. தங்களுடைய சிறுபிள்ளைகள் அழகாக உடை அணிந்து சென்றால் பிறர் கண் பட்டு வியாதி வந்து விடும் என்றும், அதனால் கன்னத்தில் கறுப்பு பொட்டு ஒன்று வைத்து வெளியே அழைத்து செல்பவர்களும், பிள்ளைகள் நன்றாக சாப்பிடுவதை பிறர் பார்த்து விட்டால் கண்பட்டு சாப்பிடாமல் போய் விடுவர் என்றும் இவர்கள் பயப்படுவார்கள்.
கிறிஸ்தவர்களாயிருந்தும், ஒரு விதவையாக இருந்தால், அது உறவினராக இருந்தாலும், கல்யாண காரியத்தில் அவர்களை முன்பாக நிறுத்த மாட்டார்கள், அது அபசகுனம் என்று சொல்லி. தினமும் செய்திதாளில் வரும் தினப்பலனை பார்க்கும் கிறிஸ்தவர்களும் அதிகம்! நான் படித்த கொண்டிருந்த இடத்தில் (கிறிஸ்தவ கல்லூரி) செய்தி தாள் வந்தவுடன் தினபலனை பார்க்க ஒரே போட்டியாக இருக்கும்! படிப்பவர்களும் கிறிஸ்தவர்கள்தான்! கல்யாணம் செய்யும்போது, ஜாதகம் பார்ப்பவர்களும், நேரம் காலம் பார்ப்பவர்களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்! இப்படி அநேக காரியங்களை நாம் புறஜாதிகளிடமிருந்து கற்று கொண்டு அதன்படி செய்து கொண்டிருக்கிறோம். எத்தனை பரிதாபமான நிலை!
இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை ஜெயிக்க வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும், நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். கர்த்தருடைய ஜெபத்திலே, 'தீமையினின்று எங்களை இரட்சித்து கொள்ளும்' என்று நாம் ஜெபிக்கும்போது, பிசாசின் எல்லா தந்திரங்களிலிருந்தும் நாம் தப்புவிக்கப்படுகிறோம். அவ்வாறு இல்லாமல் அவற்றிற்கு பயப்படுகிறவர்களாக நாம் காணப்பட்டால் கர்த்தருடைய வல்லமையை நாம் மறுதலிக்கிறவர்களாகவும், அவரை அவமதிக்கிறவர்களாகவும் காணப்படுவோம்.
ஒரு முறை ஒரு ஊழியரிடம், ஒரு கிறிஸ்தவ சகோதரி வந்து, 'பாஸ்டர் கண்திருஷ்டி சுற்றி போட்ட பூசணிக்காயை நான் தாண்டி விட்டதால் என் காலில் ஒரு வியாதி வந்து விட்டது. அதற்காக ஜெபியுங்கள்' என்றார்களாம். அதற்கு அந்த ஊழியர், 'நீங்கள் செய்த தவறு, அந்த பூசணிக்காயை தாண்டியிருக்க கூடாது. அதை மிதித்திருக்க வேண்டும்' என்றாராம். ஆம், இப்படிப்பட்ட விசுவாசம்தான் நமக்கு தேவை. 'சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும் சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன். ஒன்றும் உங்களை சேதப்படுத்தமாட்டாது' (லூக்கா 10:10) என்பது தான் தேவன் நமக்கு கொடுத்த வாக்குதத்தம் ஆகும்.
பிரியமானவர்களே, புறஜாதிகளின் மார்க்கத்தை நாம் ஒருபோதும் கற்று கொள்ள வேண்டாம். அவற்றை குறித்து விசாரிக்கவும் வேண்டாம். வானத்தையும் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த பெரிய தேவன், மனிதனுடைய பொறாமையான பார்வைக்கு முன் சிறியராகி விடுவாரா? இல்லவே இல்லை. இதை மனதில் வைத்து கொள்ளுங்கள். எந்த மூட நம்பிக்கைக்கும் பயப்படாதிருங்கள்.
சர்ப்பங்களை மிதித்திடவும் பெரும் தேள்களை நசுக்கிடவும் அதிகாரம் உண்டு வல்லமை உண்டு தோல்வி இல்லை வெற்றி எனக்கே என்றும் தோல்வி இல்லை வெற்றி எனக்கே போராயுதம் தரிப்பேன் போர் செய்வேன் போர் செய்வேன்
|
|
No comments:
Post a Comment